யூ டியூப் காமெடி கலாட்டா
இப்போதெல்லாம் காலேஜ் கோயிங் பையன் கூட, ‘நமக்கு சொந்தமா ஒரு சேனல் இருக்கு’ என்கிறான். எல்லாம் யூ டியூப் சேனல்தான். சினிமாவும் இல்லாமல், டி.வியிலும் தலை காட்டாமல் பொசுக்கு பொசுக்கென்று வி.ஐ.பிகள் முளைக்கிறார்கள் இந்த ஏரியாவில். சமீபத்தில் அப்படிக் கிளம்பியிருக்கும் ஒரு சக்ஸஸ் குரூப்தான் ‘புட் சட்னி’. ‘பேட்மேன் சென்னையைச் சேர்ந்தவராக இருந்தால்’ என்ற இவர்களின் காமெடி வீடியோவுக்கு 23 லட்சம் ஹிட்ஸ்.
அதே மாதிரி ‘அவெஞ்சர்ஸ் தென்னிந்தியர்கள் என்றால்’ என இன்னொரு புது கான்செப்ட்டும் பரபரக்கிறது. பெயர் தெரியாத திறமையாளர்களை மட்டுமல்லாமல், அவர்களோடு டெல்லி கணேஷ், மனோபாலா என சினிமா பிரபலங்களையும் சேர்த்துக்கொண்டு கலக்குவது இவர்களின் சக்ஸஸ் ஃபார்முலா!
‘‘13 வயசில இருந்து 45 வயசு வரை இருக்கறவங்கதான் யூ டியூப் ஆடியன்ஸ். ஆபீஸ் விட்டதும் வீட்டுக்குப் போயி சாவகாசமா டி.வியில் செய்தி கேட்கற ரகமில்லை. நொடிக்கு நொடி தங்களை அப்டேட் பண்ணிக்க ஆர்வமா இருக்கறவங்க. இவங்களை ஏமாத்த முடியாது. நம்ம தென்னிந்திய கலாசாரம், பண்பாட்டைப் பிரதிபலிக்கற...
லேசா அதை எள்ளி நகையாடுற டைப்தான் எங்க வீடியோஸ். டெல்லி கணேஷ் சார் நடித்த ‘பேட்மேன்’, மனோபாலா சார் நடித்த ‘அவெஞ்சர்ஸ்’ ரெண்டுமே எங்களை மக்கள்கிட்ட கொண்டு சேர்த்திருக்கு!’’ என்கிறார் அஸ்வின்ராவ், ‘புட் சட்னி’யின் துணை இயக்குநர். ‘பேட்மேனாக’ வீடியோவில் நடித்திருப்பதும் இவர்தான்.
இவரோடு, கிரியேட்டிவ் இயக்குநர்கள் ராஜீவ் ராஜாராம், துஷார் ராமகிருஷ்ணன்... ஸ்கிரிப்ட் ரைட்டர்ஸ் பாலகுமாரன், ஜி.விக்னேஷ் என 5 பேர் கொண்ட டீம் இது.
‘‘அதென்ன புட் சட்னி?’’‘‘இது ஒரு மல்ட்டி சேனல் நெட்வொர்க். மும்பையைச் சேர்ந்த ‘பம்பாய் கல்ச்சர் மெஷின்’ நிறுவனம், இந்தியில இதே மாதிரி நிறைய கான்செப்ட் வீடியோஸ் பண்ணுது. அவங்க தென்னிந்திய அளவில் சேனல் தொடங்க நினைச்சப்போ எங்களை அணுகினாங்க.
சவுத் இண்டியன்னாலே மத்தவங்களுக்கு நம்ம ஸ்பெஷல் சாப்பாடுகள்தான் ஞாபகத்துக்கு வரும். இட்லி, தோசை, அடை, வடைன்னு நம்ம டிஷ் எல்லாத்துக்கும் பொதுவான காம்பினேஷன்னா அது சட்னிதான். இன்டர்நேஷனல் விருந்துக்கே போனாலும் நம்ம ஆட்கள் ‘கொஞ்சம் சட்னி வைப்பா’ன்னு கேக்குற அழகே தனி. அதான், ‘புட் சட்னி’ன்னே பெயர் வச்சிட்டோம்!’’
‘‘பேட்மேன் கான்செப்ட் எப்படி உருவாச்சு?’’‘‘எங்க டீம்ல இருக்கற பாலாஜி, மீம்ஸ் பண்றதுல மன்னன். ‘ஸ்பைடர்மேன் ஏன் இந்தியாவுக்கு வர்றதில்லை? ஏன்னா, இங்க டெலிபோன் ஒயர் கன்னாபின்னான்னு போகும்... சரி, ரோட்ல போகலாம்னா டிராஃபிக் ஹெவியா இருக்கும். அதையும் தாண்டி ஸ்பீடா போனா போலீஸ் பிடிச்சிடும்...’ இதையெல்லாம் மீம்ஸா ரெடி பண்ணி வச்சிருந்தார்.
இதையே வீடியோவா பண்ணலாமேன்னு தோணுச்சு. எங்க கம்பெனி புதுசு. வீடியோவில் ரொம்பவே தெரிந்த முகம் யாராவது இருந்தால் நல்ல ரீச் இருக்கும்னுதான் ‘பேட்மேன்’ அப்பாவா டெல்லி கணேஷ் சாரை கூப்பிட்டோம். யூ டியூபோட ரீச் எவ்வளவு தூரம் இருக்கும்னு அவர் நல்லா தெரிஞ்சு வச்சிருக்கார். சின்ஸியரா நடிச்சுக் கொடுத்தார். அது ஹிட் ஆகும்னு நினைச்சோம். ஆனா, இவ்ளோ தூரம் வைரல் ஹிட் அடிக்கும்னு நாங்களே நினைச்சுப் பார்க்கலை!’’
‘‘அவெஞ்சர்ஸ் கிட்டத்தட்ட அதே மாதிரி இருக்கே..?’’‘‘ஆமாம். பேட்மேனாவது தனி ஆளு! அவெஞ்சர்ஸ் கூட்டமா வர்றாங்க. 7 பேர்... ஒருத்தர் மலையாளி, ஒருத்தர் தெலுங்கு, ஒருத்தர் தமிழ்னு சவுத் இண்டியா முழுக்க கவர் பண்ண நினைச்சோம். இன்னிக்கு வெளியாகுற எல்லா படங்கள்லேயும் மனோபாலா சார் நடிக்கிறார். ‘அவெஞ்சர்ஸ்’ல டைரக்டர் ஃப்யூரி ஜெகநாத் கேரக்டர் பத்தி சொன்னதும், ஜாலியாகிட்டார்.
அந்த வீடியோ ஷூட் முடியற வரை எங்களோடவே இருந்து ஃப்ரெண்ட் மாதிரி நடிச்சுக்கொடுத்தார். டெல்லி கணேஷ், மனோபாலா ரெண்டு பேருக்கும் இங்கிலீஷ் தெரியும்னாலும் இவ்வளவு இங்கிலீஷ் பேசினதில்லை. ஸோ, அவங்களுக்கு ஈஸியா வர்ற மாதிரி வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து டயலாக்கா வச்சோம். ரெண்டு பேருமே கலக்கிட்டாங்க!’’
‘‘அடுத்து..?’’
‘‘எங்க கம்பெனி இன்னும் சில வீடியோக்கள் தயாரிச்சிருக்கு. ஆனா, இது ரெண்டும்தான் பெரிய ஹிட். இதையே மலையாளம், தெலுங்கில் பண்ற ஐடியாவும் இருக்கு. புட் சட்னிக்கு இப்போ 43 ஆயிரம் சந்தாதாரர்கள் கிடைச்சிருக்காங்க. ஸோ, எங்க பொறுப்பு இன்னும் ஜாஸ்தியாகியிருக்கு. இன்னும் சூப்பரான கிரியேட்டிவிட்டி ஐடியாக்களை எங்ககிட்ட நீங்க எதிர்பார்க்கலாம்!’’
- மை.பாரதிராஜா