விவசாயிகள் பொது இடத்தில் தூக்கு போட்டுக்கொள்ளும் நிலையில் கொண்டு போய் நிறுத்திவிட்டது நிலம் கையகப்படுத்தும் சட்டம். ‘‘இதேபோல சீக்கிரமே ‘நெசவாளிகள் தூக்கில் தொங்கினாங்க’ என தினம் தினம் செய்திகள் வரக்கூடும். அப்போ உங்களுக்கு எங்க நிலைமை புரியும்!’’ - கைத்தறி நெசவாளர்கள் சிலர் நம்மிடம் வைத்த கண்ணீர் ஸ்டேட்மென்ட் இது.
இவர்களின் இந்த விரக்திக்குக் காரணமும் ஒரு மசோதாதான். ‘ஹேண்ட்லூம் ரிசர்வேஷன் ஆக்ட்’ எனும் கைத்தறி ஒதுக்கீடு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரும் சிறப்பு மசோதா அது. ‘அது மட்டும் நிறைவேற்றப்பட்டால் எங்களுக்கு வாழ்வே இல்லை’ என்கிறார்கள் இவர்கள். அப்படி என்ன செய்யப் போகிறது அந்த மசோதா?
‘‘கைத்தறி ஒதுக்கீட்டு சட்டத்தின்படி சுமார் 22 வகையான துணி ரகங்களை கைத்தறியில் மட்டும்தான் நெய்ய வேண்டும் என்கிற நிபந்தனை இருக்கிறது.
இந்த விதிமுறையைத் தளர்த்தி, பவர் லூம் எனும் விசைத்தறியிலும் அந்த ரகங்களை நெய்யலாம் என அனுமதி கொடுத்து எல்லோருக்கும் கதவுகளைத் திறப்பதுதான் இந்த மசோதாவின் சாரம்!’’ எனத் துவங்குகிறார் பவர்லூம் டெவலப்மென்ட் அண்டு எக்ஸ்போர்ட் ப்ரோமோஷன் கவுன்சிலின் இயக்குநரான கே.சி.கணேசன். விசைத்தறிகளின் வளர்ச்சிக்கான இயக்கம் என்பதால் இந்த மசோதாவை வரவேற்றே பேசுகிறார் இவர்.
‘‘நானும் அடிப்படையில் ஒரு நெசவாளன்தாங்க. பாரதி காலத்தில் ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்றார். ஆனால், இப்போது இந்தியாவில் 120 கோடியையும் தாண்டிய மக்கள்தொகை இருக்கிறது. உள்ளூரிலும், வெளிநாடுகளிலும் இந்தியத் துணி ரகங்களுக்கான தேவை அதிகமாகிக்கொண்டே போகிறது. அந்தக் காலத்தில் காந்தி சொன்னது போல இன்னமும் கைத்தறி முறையிலேயே இருந்தால் துணி உற்பத்தி போதாது. இதனால்தான் 70களில் பவர்லூம் என்கிற விசைத்தறி அறிமுகமானது. தலைமுறை தலைமுறையாக கைத்தறி நெசவு செய்து வந்த பலரும் அப்போது விசைத்தறிக்கு மாறினார்கள். இந்தக் காலக்கட்டத்தில் ஏற்பட்ட வறட்சி காரணமாக பல விவசாயிகளும் விசைத்தறி வாங்கிப் போட்டு நெசவுத் தொழிலுக்கு வந்தார்கள்.
விசைத்தறியில் கைத்தறியைவிட கூலி குறைவுதான். ஆனால் கைத்தறியில் ஒரு புடவை தயாரிக்கும் நேரத்தில் விசைத்தறி பல புடவைகளைத் தயாரித்துவிடும். இதனால் கைத்தறியில் குறைந்த அளவு சம்பாதித்தவர்களும் விசைத்தறி வருவாயால் தாக்குப் பிடித்தார்கள். ராஜீவ் காந்தி பிரதமராக இருந்தபோது 1985ம் ஆண்டில் ‘ஏழைக் கைத்தறி நெசவாளர்களைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற கொள்கையின் அடிப்படையில் சில வகையான துணி ரகங்களை கைத்தறியால் மட்டுமே நெய்ய வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. இதைத்தான் ‘ஹேண்ட்லூம் ரிசர்வேஷன் ஆக்ட்’ என்கிறோம்.
இதன்படி தூய பருத்தி இழைகளால் ஆன சேலை, வேட்டி, சால்வை, டவல், கம்பளம் போன்ற 22 வகை துணி ரகங்களை பெரும் துணி மில்களும் பவர் லூம் வைத்திருப்பவர்களும் தயாரிக்கக் கூடாது. காட்டனோடு செயற்கை நூலிழைகளைக் கலந்து வேண்டுமானால் இவற்றைத் தயாரிக்கலாமே தவிர, தூய்மையான பருத்தியில் மட்டும் தயாரிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் அவர்கள் மீது தண்டனை பாயும்.
ஆனால் இப்படி கைத்தறியில் நெய்யப்படும் துணிகள் சாமானிய மக்களுக்கு எட்டும் விலையில் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை! கைத்தறியில் நெய்யப்படும் பருத்தி சேலையின் குறைந்தபட்ச விலையே 3 ஆயிரம் ரூபாய். இது தெரியாமல், ‘சோனியா காந்தி எளிய காட்டன் புடவைதான் உடுத்துகிறார்’ என்கிறார்கள். இன்று இப்படிப்பட்ட கைத்தறி காட்டன் என்பதே பணக்காரர்களின் உடையாக மாறி விட்டது ஏழைகளுக்குத்தான் தெரியும்.
கைத்தறியில் நெய்யப்பட்ட ஒரு லுங்கியின் குறைந்தபட்ச விலை சுமார் 300 ரூபாய். அதே தரத்தில் விசைத்தறி லுங்கி தயாரித்தால் 150 ரூபாயிலிருந்து 200 ரூபாய்க்குள் கொடுக்க முடியும். அதற்கு சட்டம் இடம் கொடுக்காததால் இன்று பாகிஸ்தான், வங்க தேசம் மற்றும் இந்தோனேஷியாவிலிருந்து லுங்கிகள் இந்தியாவுக்கு இறக்குமதியாகி 100 ரூபாய்க்குக் கூட கிடைக்கின்றன. இது கைத்தறியை மட்டுமில்லாமல் விசைத்தறியையும் பாதிக்கிறது. ‘இறக்குமதிக்குத் தடையில்லை... ஆனால் உள்ளூர் உற்பத்திக்குத் தடை’ என்பது எவ்வளவு பெரிய வேடிக்கை! இதனால்தான் ‘எல்லா துணிகளையும் பவர் லூம் மெஷினில் தயாரிக்கலாம்’ என்ற சட்டத் திருத்த மசோதா தேவைப்படுகிறது.
இந்த சட்டத் திருத்தத்தால் கைத்தறி அழிந்துவிடும் என்பது சரியல்ல. முழுக்க முழுக்க கைகளால் செய்யப்படும் பிரத்யேக கலைத்திறன்களை மெஷின்களில் கொண்டு வரவே முடியாது. தரத்திலும் அழகிலும் கைத்தறிக்கென்று ஒரு இடம் எப்போதும் உண்டு. ஏற்றுமதி மார்க்கெட்டில் அதற்கு இருக்கும் மதிப்பே தனி! உள்ளூரில் இருக்கும் ஏழை நடுத்தர மக்களுக்கும் பவர்லூம் தொழிலாளர்களுக்கும் நன்மை செய்வதுதான் இந்த மசோதாவின் நோக்கம்!’’ என்கிறார் அவர் ஒரே மூச்சில்.
ஈரோட்டை அடுத்த சென்னிமலையில் பரம்பரை பரம்பரையாக கைத்தறி நெசவில் ஈடுபட்டுவரும் முகிலனைத் தொடர்பு கொண்டோம். கைத்தறி மற்றும் சுற்றுச்சூழல் பிரச்னைகளில் களப்பணியாற்றும் அவர் இந்தப் பாயின்ட்டுகள் அனைத்தையும் மறுக்கிறார்...
‘‘இந்தியாவில் உற்பத்தியாகும் துணிகள் மில், விசைத்தறி, கைத்தறி என மூன்று வகைகளில் தயாரிக்கப்படுகின்றன. இதில் மூன்றில் ஒரு பங்கு உற்பத்தி கைத்தறியிலிருந்து வருவதாகச் சொல்கிறார்கள். இந்தியாவில் மட்டும் 2009-2010ல் 27.83 லட்சம் தறிகள் இருந்ததாக புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. கிட்டத்தட்ட 43 லட்சம் நெசவாளர்கள் கைத்தறியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
இந்தியாவின் ஏற்றுமதியில் 11 சதவீதம் இந்த கைத்தறி இடம்பிடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்த அளவில் 1.89 லட்சம் தறிகள் இருப்பதாகவும், 3.9 லட்சம் நெசவாளர்கள் இந்தத் தறிகளை நம்பி இருப்பதாகவும் அரசு புள்ளிவிபரங்கள் சொல்கின்றன. தமிழகத்தில் மட்டும் 2014-2015ல் இந்தக் கைத்தறியால் உற்பத்தி செய்யப்பட்ட துணிகளின் மதிப்பு 821 கோடி ரூபாய்.
இத்தனை பிரமாண்டமான தொழில் துறையில் பணியாற்றும் நெசவாளர்கள் நலிவடைந்து வருகிறார்கள் என்றால் இந்தத் துறையில் ஊழல் மலிந்திருப்பதுதான் காரணம். உள்நாட்டு, வெளிநாட்டுப் பெருமுதலாளிகள் கைத்தறியை அழித்தொழிக்கும் முயற்சியில் இருக்கிறார்கள் என்பதற்கான அடையாளம் இது.கைத்தறி தயாரிப்புகளின் விலையை மற்றவற்றோடு ஒப்பிட்டுப் பேசுவது சரியல்ல. விசைத்தறிக்கும் மில் தொழிலுக்கும் ஒரு ஏக்கர் நிலத்தை ஒரு ரூபாய்க்கும் குறைவாக அரசே வாரி வழங்கி விட்டு, அவை உற்பத்தி செய்யும் பொருட்களின் விலை மலிவாக இருக்கிறது என்று வாதம் செய்வது நியாயமா?
இப்படி நிலத்தில் மட்டுமில்லாமல் சாலை வசதி, தண்ணீர், மின்சாரம், வரிச் சலுகைகள் என்று ஏகப்பட்ட வாய்ப்புகளை அரசு அவர்களுக்குக் கொடுக்கிறது. ஆனால், கைத்தறி சவலைப்பிள்ளை. கைத்தறி நெசவாளர்களை ஒருங்கிணைக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் கூட சரியில்லை. அவற்றில் பெரும் அரசியல் புகுந்துவிட்டது. இந்த சங்கங்களில் அங்கம் வகிக்கும் 60 சதவீத நிர்வாகிகள் எந்த வித நெசவுத் தொழிலையும் செய்யாதவர்களாக இருக்கிறார்கள்.
சரி, கைத்தறியை இப்படி திட்டமிட்டு அழிக்கத் துடிப்பவர்கள் விசைத்தறி நெசவாளர்களையாவது நல்ல நிலையில் வைத்திருக்கிறார்களா? செயற்கையான தொழில் முறை, போனஸ் போன்றவை இல்லை, நாற்பது வயதுக்குள் உடல் பிரச்னைகளால் தொழிலில் இருந்து விலகல் என அவர்கள் கஷ்டப்பட்டு வருவது அவர்களுக்கே தெரியும். மொத்தத்தில் இந்த மாதிரியான மசோதாக்கள் எந்த நெசவாளருக்கும் நன்மை செய்யப் போவதில்லை. பெரிய முதலாளிகளுக்குத்தான் லாபம் சேர்க்கப் போகின்றன!’’ ஆதங்கமாக முடிக்கிறார் அவர்.நெசவுத் தொழிலை நிர்வாணம் ஆக்கலாமா?
கைத்தறியில் நெய்யப்படும் துணிகள் சாமானிய மக்களுக்கு எட்டும் விலையில் இருக்கிறதா என்றால் நிச்சயம் இல்லை!விசைத்தறிக்கும் மில் தொழிலுக்கும் சலுகைகளை வாரி வழங்கி விட்டு, அவை விலை மலிவு என்று வாதம் செய்வது நியாயமா?
- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்