பருப்பு விலை உளுந்து விலை எப்போது குறையும்?காலையில் இட்லிக்கு உளுத்தம்பருப்பு, மதியம் சாம்பாருக்கு துவரம் பருப்பு, இரவு சட்னிக்கு கடலைப்பருப்பு... பருப்புகள்தான் நம் சமையலுக்கு ஆதாரம். ஆனால் இதெல்லாம் இனி நடுத்தரக் குடும்பங்களுக்கு வாய்க்காது போலிருக்கிறது. கடந்த ஒரு மாதத்தில் அத்தியாவசிய பருப்புகளின் விலை கிலோவுக்கு 25 முதல் 50 ரூபாய் வரை ஏறியிருக்கிறது. விழிபிதுங்கி நிற்கிறார்கள் மக்கள்.

கடந்த ஏப்ரலில் 80 ரூபாய் விற்ற உளுந்து இப்போது 130 ரூபாய். ‘இந்த ஆண்டில் மிக அதிகமாக விலையேற்றம் கண்ட உணவுப்பொருள்’ என்ற பெருமையை இது பெற்றிருக்கிறது. கடந்த ஏப்ரலில் 90 ரூபாய் விற்ற துவரம்பருப்பு இப்போது 120 ரூபாய். 85 ரூபாய் விற்ற பாசிப்பருப்பு 110 ரூபாய். ஏன் இந்த அசுர விலையேற்றம்..?

ஒரு காலத்தில் நம் தேவை போக, வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் அளவுக்கு தமிழகத்தில் பருப்புகளின் விளைச்சல் கொழித்தது. இப்போது நம் தேவையில் 10 சதவீதம் கூட இங்கே விளையவில்லை. வெளிநாடு களையும், வெளி மாநிலங்களையும் நம்பித்தான் சாம்பார் வைக்கிறோம். உளுந்தை மியான்மர்தான் நமக்குத் தருகிறது. துவரம்பருப்பு, கென்யா மற்றும் தான்சானியாவில் இருந்து வருகிறது. பாசிப்பருப்புக்கு ஆஸ்திரேலியா. மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா, உ.பி, ம.பி, குஜராத்தில் இருந்தும் பருப்புகள் இங்கு வருகின்றன. 

‘‘தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 2 லட்சம் மூட்டை அளவுக்கே உளுந்து விளைகிறது. ஆனால் தேவை பல மடங்கு. தண்ணீர் பற்றாக்குறை, தட்பவெப்ப மாற்றம், விளைநிலங்கள் மனைகளானது, மின் பிரச்னை காரணமாக ஒவ்வொரு ஆண்டும் உற்பத்தி குறைகிறது. வடமாநிலங்களில் இது அறுவடைக்காலம்.

பொதுவாக, இப்போது விலை குறையவேண்டும். ஆனால், அண்ைமயில் அங்கு பெய்த கனமழையால் பயிர்கள் அழுகி விளைச்சல் குறைந்து விட்டது. மியான்மர், தான்சானியா போன்ற நாடுகள் இந்தியாவின் இப்படிப்பட்ட சூழலைப் புரிந்துகொண்டு விலையை  அதிகரித்து விடுகின்றன.

அதுமட்டுமின்றி, இந்தியா கொள்முதல் செய்யும் நாடுகளில் சீனாவும் போட்டி போட்டுக்கொண்டு கொள்முதல் செய்கிறது. அதனாலும் விலை அதிகமாகிறது. கடந்த மாதம் 800 டாலர் விற்ற 1 டன் உளுந்து இப்போது 1300 டாலர். ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் உ.பி, ம.பி, குஜராத் மாநிலங்களில் உளுந்து அறுவடைக்கு வந்துவிடும். அதனால் செப்டம்பர் மத்தியில் உளுந்து விலை குறைய வாய்ப்புண்டு. அக்டோபரில்தான் துவரம்பருப்பு அறுவடை நடக்கும். அதுவரை விலையில் மாற்றம் வர வாய்ப்பில்லை...” என்கிறார் தமிழ்நாடு பருப்பு உற்பத்தியாளர் சங்கச் செயலாளர் கே.பி.ஆர்.ஆர். ராஜேந்திரன்.

‘தமிழக அரசு நியாயவிலைக் கடைகள் மூலம் விற்பனை செய்வதற்கு மாதா மாதம் (சுமார் 60 முதல் 70 ஆயிரம் மூட்டைகள்) பருப்பு கொள்முதல் செய்வது வழக்கம். ஆனால் அண்ைமயில் திடீரென 3 மாதத்திற்குத் தேவையான 2.10 லட்சம் மூட்டை பருப்பை கொள்முதல் செய்ய டெண்டர் வழங்கியிருக்கிறார்கள்.

 3 லட்சம் மூட்டை பருப்பை உடைத்தால்தான் 2.10 லட்சம் மூட்டை கிடைக்கும். திடீரென பெருமளவு பருப்பை கொள்முதல் செய்ததால் தட்டுப்பாடாகி விட்டது. இது மியான்மர் வரை எதிரொலித்து, சர்வதேச அளவில் விலை கணிசமாக உயர்ந்து விட்டது’ என்றும் வணிகர்கள் சொல்கிறார்கள்.

தமிழ்நாடு அனைத்து மளிகை வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் எஸ்.பி.சொரூபன், ‘‘மத்திய அரசின் கொள்கை முடிவே விலை உயர்வுக்குக் காரணம்’’ என்கிறார்.
‘‘முன்பு பருப்புகள் ஆன்லைன் வணிகத்தில் இருந்தன. வணிகத்திற்கே தொடர்பில்லாதவர்கள் மொத்தமாக கொள்முதல் செய்து பதுக்கி தட்டுப்பாட்டை உருவாக்கினார்கள். அதனால் விலை உயர்ந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகு முந்தைய மன்மோகன் சிங் அரசு, பருப்புகளை ஆன்லைன் வணிகத்திலிருந்து நீக்கியது. அதனால் விலை கட்டுப்பாட்டுக்குள் வந்தது. ஆனால் தற்போதைய பிரதமர் மோடி, ஆன்லைன் வணிகத்தை வளர்க்க முயல்கிறார்.

மீண்டும் பருப்புகள் ஆன்லைன் வர்த்தகத்தில் சேர்க்கப்படலாம் என்ற தகவல் கசியத் தொடங்கியிருக்கிறது. இதைக் கேள்விப்பட்ட பெரு முதலாளிகள், மொத்தமாக பருப்பு வகைகளைக் கொள்முதல் செய்து பதுக்கி விட்டார்கள். செயற்கையாக தட்டுப்பாட்டை உருவாக்கியதால்தான் இந்த விலையேற்றம்...” என்கிறார் அவர். “ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் நல்ல விளைச்சல் இருந்தது.

இந்த விளைச்சல் ஓரளவு கைகொடுத்தது. ஆனால் தஞ்சைப் பகுதியிலிருந்து ஏப்ரலில் வரவேண்டிய விளைச்சல் பொய்த்து விட்டது. அம்மா உணவகம், நியாயவிலைக் கடைகள் போன்றவற்றுக்கு அரசு கணிசமாக கொள்முதல் செய்வதால் தேவை அதிகம் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு விலையை கணிசமாக உயர்த்தி விடுகிறார்கள்...” என்கிறார் வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன்.

“பற்றாக்குறை காலங்களில் என்ன விலை கொடுத்தும் இறக்குமதி செய்ய அரசுகள் தயாராக இருக்கின்றன. அந்த தொகையில் ஒரு பங்கை உள்நாட்டு விவசாயிகளுக்குக் கொடுத்து ஊக்குவித்தால் இங்கேயே கணிசமாக உற்பத்தி செய்துவிட முடியும். விலையையும் கட்டுப்பாட்டுக்குள் வைக்கலாம். எந்த அரசும் இதை யோசிப்பதில்லை...” என்று வருந்துகிறார் அவர்.

60 சதவீதம் விவசாயிகளைக் கொண்ட நாடு, எண்ணெய்க்கும் பருப்புக்கும் வெளிநாடுகளிடம் கையேந்தி நிற்பதை விட பெரிய அவமானம் வேறெதுவுமில்லை. உள்நாட்டில் விவசாயிகளை ஊக்கப்படுத்தி விளைச்சலை அதிகரித்தால், விலையும் கட்டுக்குள் வரும். வளமும் பெருகும். உணர்ந்து கொள்வார்களா ஆட்சியாளர்கள்?

- வெ.நீலகண்டன்