சூரிய நமஸ்காரம்



இப்போது நாம் சூரிய நமஸ்காரப் பயிற்சிக்கு வந்து விட்டோம்!யோகாவில் சமஸ்திதி என்பது ஒரு முக்கியமான நிலை. நின்ற நிலை, படுத்த நிலை, அமர்ந்த நிலை என்று பல நிலைகளில் ஆசனங்கள் செய்யும்போது, சமஸ்திதியிலிருந்துதான் அடுத்த நிலைக்குப் போக வேண்டும் என்பது நியதி.

அப்படிச் செய்தால், ஒவ்வொரு ஆசனத்தையும் சரியாகச் செய்ய முடியும். ஒருநிலையில் ஆசனத்தை செய்து முடித்தபின் மீண்டும் சமஸ்திதிக்கு வரவேண்டும். இதை முழுமையின் அடையாளமாகவும் பார்க்கலாம். வாகனத்தின் ஓட்டத்தைச் சீராக்க எந்த கியரிலிருந்தும் நியூட்ரலுக்கு வருவார்களே... அப்படி!

சமஸ்திதியில் ஒருவரால் சரியாக இருக்க முடியவில்லை என்றால், அந்த நிலையிலிருந்து செய்யும் ஆசனங்களை அவரால் சரியாகச் செய்ய முடியாது. ஆகவே சமஸ்திதி என்பது ஒரு ‘செக் பாயின்ட்’ எனலாம். நன்றாக நின்றால்தானே ஓட முடியும்? நிற்கவே தடுமாறும்போது, நடப்பதோ, ஓடுவதோ சாத்தியமில்லைதானே!

சூரிய நமஸ்காரத்தில் இந்த முதல் நிலை நன்றாக அமைய வேண்டும். சூரியனைப் பார்த்து வழிபடுவதும், மந்திரங்களை ஒலிப்பதும், மூச்சுப் பயிற்சியும் இந்த நிலையில்தான் நடக்கும். ஆகவே பிற சமஸ்திதிகளை விட இது கூடுதல் முக்கியத்துவம் கொண்டது.

காலை நேரத்தில் சூரிய நமஸ்காரம் செய்யும்போது, சூரியனைப் பார்த்து வணங்குவது, மந்திரம் சொல்வது என்று இருக்கும். பிற நேரங்களில் செய்யும்போது, சூரியனைப் பார்க்கமாட்டார்கள்; பெரும்பாலும் மந்திர ஒலிப்பு இருக்காது; சம்பிரதாயம் இருக்காது. ஒரு சிலர் ஏதோ ஒன்றில் நம்பிக்கை வைத்து செய்வார்கள். பலர் ஒரு நம்பிக்கையும் இல்லாமல், எவ்வளவோ வேலைகளில் இதையும் ஒன்றாகச் சேர்த்து விடுவார்கள்.

சூரிய நமஸ்காரத்தை யோகாவின் ஓர் அங்கமாகப் பார்ப்பவர்கள், கும்பிடுவதைப் போன்ற அந்த நிலையைச் செய்யாமலேயே கூட, வேறு நிலையிலிருந்து நமஸ்காரத்தைத் தொடங்கலாம். அதுவும் சமஸ்திதிதான். இந்த நிலையில் கைகள் உடலை ஒட்டி இருக்கும்; விரல்கள் சேர்ந்து இருக்கும்; பார்வை சற்று கீழ் நோக்கி இருக்கும். சமஸ்திதியில் எப்படி நிற்பது?

* இரண்டு கால்களையும் ஒன்றாக வைத்து, நேராக நில்லுங்கள்
* முதுகு நிமிர்ந்து இருக்கட்டும்
* கைகள் உடலின் பக்கவாட்டை ஒட்டி இருக்கட்டும்
* உள்ளங்கைகள் உடலைப் பார்க்க வேண்டும்
* உடலின் எடை இரு கால்களிலும் சமமாகப் பரவட்டும்
* முழு உடலும் இறுக்கம் இல்லாமல் அதேநேரம் முழு கவனத்தோடு இருக்கட்டும்
* கழுத்து இயல்பான வளைவோடு இருக்கட்டும்
* கண்கள் திறந்திருக்கட்டும்.
* நாக்கு, மேல் அன்னத்தைத் தொட்டபடி ஓய்வாக இருக்கட்டும்
* தோள் பட்டைகள் சற்று பின்புறம் கொண்டு செல்லப்படலாம்
* மார்பு சற்று அகண்டு இருக்கட்டும்
* மனம் அமைதியில் சுகமாய் இருக்கட்டும்

* முகவாய்ப் பகுதி சற்று கீழ் நோக்கி இருக்குமாறு தலை தாழ்த்தி இருக்கட்டும் (இதை ஜாலந்தரபந்தா என்று சொல்வார்கள்)அடுத்து கும்பிடு நிலையில் இரு உள்ளங்கைகளையும் ஒன்றோடு ஒன்று சேர்த்து, இயல்பாய் வைக்க வேண்டும். சிலர் இந்த நிலையில் கண்களை மூடி, சிறிது நேரம் அமைதியாக இருந்து, பின்னர் கண்களைத் திறந்து, மந்திரத்தை சூரியனை நேராகப் பார்த்தபடி ஒலிப்பார்கள்; சிலர் மூச்சுப்பயிற்சி செய்வார்கள். இப்படித்தான் சமஸ்திதி என்கிற நிலை இருக்கும்.

சூரிய நமஸ்காரத்தின் இந்த அடித்தளத்தை ஒருவர் நிதானமாய் செய்தால், பிற நிலைகளும் நன்றாகவே அமையும். அப்படி யில்லாமல் அரைகுறையாக சமாளித்தால் பிற நிலைகளிலும் அந்த சமாளிப்பு முயற்சி பரவும். அவர்கள் பலன்களை முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அனுபவம் நிறைவாக அமையாமல் போகலாம். சிலருக்கு தேவையற்ற வலியோ, தடுமாற்றமோ கூட வரக்கூடும்.

வாழ்க்கையைப் போலத்தான் சூரிய நமஸ்காரமும்! பலருக்கு வாழ்வின் ஒவ்வொரு நிலையும் தடுமாற்றமாகி விடுகிறது; ஒரு நிலையிலிருந்து முட்டி மோதி முயற்சிப்பவர்கள் அடுத்த நிலைக்குப் போய்விடுவார்கள். தீவிரமாய் தொடர்ந்து முயல்பவர்கள், வாழ்வின் அடுத்தடுத்த நிலைகளில் முன்னேற்றமாய், வளமாய் இருக்கிறார்கள். எதையும் செய்யத் தயங்குபவர்கள் தேங்கி விடுகிறார்கள். 

சூரிய நமஸ்காரத்தின் தாத்பரியம்- தத்துவம்- மகத்துவம் புரியப் புரிய, பயிற்சி அனுபவம் ஆழப்பட ஆழப்பட, வாழ்க்கையைக் கூட நன்றாக அறிய முடியும். நாம் புரிந்துகொள்ளவும் தெளிவு பெறவும் வாழ்க்கை எத்தனையோ பயிற்சிகளையும் பாடங்களையும் வழங்கிக்கொண்டு தான் இருக்கிறது. கண் திறந்து, விழிப்போடு பார்ப்பவர்களுக்கு எதுதான் பாடம் இல்லை? எதில்தான் கற்றல் இல்லை? எதுதான் உயர்வுக்கான படி இல்லை?

சரி, இவ்வளவு விவரங்களோடு சமஸ்திதியில் நின்று விட்டால் என்ன நடக்கும்? பலன்கள் அதிகமாகும்; பயிற்சி தரமாக அமையும்; அனுபவம் நன்றாக இருக்கும்; நமது உடலை நம்மால் நன்கு புரிந்து கொள்ள முடியும். கால்கள் தொடங்கி எல்லா உறுப்புகளும் எப்படி உள்ளன என்று சிறிதாவது தெரிந்துகொள்ளலாம். உள் உறுப்புகள் இந்த நிலையில் இயல்பாக இருக்கும்.

சாதாரண நிலையிலிருந்து சமஸ்திதிக்கு மாற்றம் பெறும்போது, எண்ணங்கள் மாறும், கவனம் கூடும், மனம் அமைதியடையும், கைகளை இணைத்துக் கும்பிட்டால் தெய்வீக உணர்வு வரும்; மூச்சு இயல்பாய் இருக்கும்; சிலருக்கு அந்த நிலையிலேயே பேருணர்வு ஏற்படும்.எதற்கும் துவக்கம் முக்கியம் என்பார்கள். துவக்கம் நன்றாக அமைந்தால், பிற நிலைகளும் நன்றாக அமையும். நிறைவான அனுபவம் சாத்தியமாகும். இந்த விதமான ஆரம்பம் என்பது, பயிற்சி செய்பவர்கள் தங்களின் யதார்த்த வாழ்விலிருந்து விலகி, வேறொரு பக்குவ நிலைக்குச் சென்று, பயிற்சிக்குத் தயாராக உதவும்.

சூரிய நமஸ்காரத்தை நாம் என்னவாக நினைக்கிறோமோ, அதுவாகவே அமையும். மனம்போல் அமையும் பயிற்சி இது!  பெரும் எதிர்பார்ப்போடு, மிக நன்றாகச் செய்யப் பிரயத்தனப்படும் ஒருவர், வழக்கமான பயிற்சியின் பலன்களைத் தாண்டி, கூடுதல் பலன்களையும் அரிய அனுபவங்களையும் எளிதில் பெறுவார்.  காரணம், இந்தப் பயிற்சிக்கும் அவருக்கும் ஏற்படும் நேசமான நெருக்கம்!

ஓர் உயர் அதிகாரியிடம் பேசுகிறோம் என்றால், இருவருக்குமான இடைவெளி அதிகமாகும்; வார்த்தைகள் சரியாகவும் அளவாகவும் இருக்கும்; உடல்நிலைகளில் மாற்றம் இருக்கும்; பணிவு, தயக்கம் என உணர்வுகளைக் குழைத்துக் கோர்த்து வெளிப்படுத்துவோம். ஆனால் நாம் நெருங்கிய நண்பரிடம் எவ்வளவு இயல்பாகப் பேசுகிறோம்! விளையாடுகிறோம்; அடித்துக்கொள்கிறோம்; தொட்டுப் பேசுகிறோம்; கிண்டல் செய்கிறோம். நெருக்கம்தான் எதையும் இயல்பாக்குகிறது. எந்த ஒரு பயிற்சி, செயலுக்கும் இது பொருந்தும். செயல்படுத்திப் பாருங்கள், வித்தியாசம் நன்கு தெரியும்.

துவக்கம் நன்றாக அமைந்தால்தான் வெற்றி கைகூடும். சூரிய நமஸ்காரப் பயிற்சிக்கு முன்பே உங்களின் எண்ணங்கள், உணர்வுகள் எப்படி உள்ளன என்று பாருங்கள். யாரோ சொன்ன தவறான கருத்துகளை வைத்துக் கொண்டு, அரைகுறை மனதோடு, நம்பிக்கையற்று பயிற்சியில் இறங்காதீர்கள். புதிதாகச் செய்பவர்களுக்கு இப்படியான பல விபரங்கள் - நுட்பங்கள் கொண்ட ஓர் முதல்நிலையை அடைய சிறிது காலம் ஆகலாம். தொடர்ந்து செய்யச் செய்ய சிறுசிறு நுணுக்கங்கள் பிடிபடும்; மனம் ஒருமுகப்படுவது எளிதாகும்; உடல் ஆட்டங்கள் குறையும். ஆரம்ப காலத்தில் இருக்கும் சிறுசிறு பிடிப்பு - வலிகள் போகப் போகக் குறையும் அல்லது இருக்காது.

சைக்கிள், நீச்சல், புதுமொழி யைக் கற்றல் போன்றதுதான் எந்தப் பயிற்சியும். சிறிது காலம் தொடர்ந்து செய்து தாக்குப் பிடித்து விட்டால், அதன் பிறகு எளிதாகவும் இனிதாகவும் முழுமை பெறலாம். குறிப்பாக சூரிய நமஸ்காரத்தில் மெல்ல மெல்ல ஆசன நிலைக்குள், மூச்சுக்குள், மனதிற்குள் என்று ஒரு பட்டியல், பயணம் இருப்பது, பலவற்றை அறியவும் உணரவும் இடம் தருகிறது.

(உயர்வோம்...)

மாடல்: கஸ்தூரி கோஸ்வாமி
படங்கள்: புதூர் சரவணன்

ஏயெம்