அன்று துறவி! இன்று நடிகை...‘அந்த அழகு தெய்வத்தின் போட்டோவா இது?’ என நீங்கள் ஷாக் ஆகப் போவது உறுதி... நடிகை பர்கா மதனின் ‘அப்போ - இப்போ’ புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்தால்! அக்‌ஷய் குமாருடன் ‘கிலாடியோன் கா கிலாடி’, ராம் கோபால் வர்மாவின் ‘பூத்’ என பாலிவுட்டில் சக்சஸ் வலம் வந்தவர் பர்கா.


 1994ல் ஐஸ்வர்யா ராய், சுஷ்மிதா சென் போன்றவர்கள் வென்ற அழகிப் போட்டியில் இறுதிச் சுற்று வரை வந்த பேரழகி இவர். பர்காவே தயாரித்து, நடித்த பாலிவுட் திரைப்படமான ‘சுர்காப்’, இந்த மே இறுதியில்தான் வெளிவந்தது. ‘ச்சே... இவ்ளோ சூப்பரா நடிச்சவரை எங்கப்பா?’ எனத் தேடினால், உலக வாழ்வைத் துறந்து நிஜமான
புத்தத் துறவியாகிவிட்டார் பர்கா.

‘‘நான் பஞ்சாபி பெண். என் அப்பா ஆர்மி ஆபீஸர். சிக்கிமில் அவர் வேலை பார்த்தபோது சின்னஞ்சிறுமியாக நான் ஒரு பௌத்த மடாலயத்துக்குப் போயிருக்கிறேன். அதன் மேல் ஒரு ஈர்ப்பு. மாடலிங்கிலும் சினிமாவிலும் எனக்கு நிறைய பணம் வந்தது. ஆனால், மனது நிறையவில்லை.

‘நான் பிறந்தது இதற்கெல்லாம்தானா?’ என்ற கேள்வி அடங்கவே இல்லை. 2002ல் ஒருதரம் தர்மசாலா போனேன். பிறந்த வீட்டுக்குத் திரும்பி வந்தது போல ஒரு உணர்வு. அங்கே தலாய் லாமாவை சந்தித்தேன். அதுதான் என் வாழ்வை மாற்றியது!’’ - சாந்தமாகப் பேசும் பர்காவை ‘முதல் பாலிவுட் பெண் துறவி’ என்கிறார்கள்!

அப்போதே அங்கிருந்த குருவிடம்,  ‘‘நான் இங்கே துறவியாகிவிடவா?’’ எனக் கேட்டிருக்கிறார் பர்கா. ‘‘ஏன், உன் பாய்ஃப்ரெண்டோடு சண்டையா?’’ என அவர் திருப்பிக் கேட்டிருக்கிறார். ‘துறவறம் என்பது தப்பித்தல் அல்ல... வாழ்வை முழுவதும் மனதாரக் கடந்து வருதல்’ என்பதை அவர்தான் பர்காவுக்குப் புரியவைத்தாராம்.அதன்பிறகுதான் ‘சோச் லோ’, ‘சுர்காப்’ என இரு படங்களை பர்காவே தயாரித்தார். இரண்டுமே ‘லோ பட்ஜெட் - நல்ல படங்கள்’.

இதில் ‘சுர்காப்’ கொஞ்சம் லேட் ரிலீஸ். தற்காலிகமாக இந்தப் பட புரமோஷனுக்காக பர்காவிடம் ஒரு செல்போன் தரப்பட்டிருக்கிறது. மற்றபடி இரண்டு செட் காவி உடைதான் இவரின் மொத்த சொத்து. சினிமா, ரசிகர்கள், பணம், புகழ் எதுவும் இனி பர்கா வாழ்வில் கிடையாது. புத்த கயாவில் பராமரிக்கப்படும் ஹெச்.ஐ.வி குழந்தைகளைக் கவனிப்பதும் மற்ற நேரம் தியானத்தில் இருப்பதும்தான் இவரின் தினசரி ப்ரோகிராம். இப்போதைக்கு நேபாள பூகம்ப உதவிப் பணிகளில் இருக்கிறார் பர்கா.

‘‘அழகிப் போட்டி ஒன்றில் நான் நடுவர்களிடம் சொன்னது நினைவிருக்கிறது... ‘நான் ஜெயித்தால் ஆதரவற்ற மக்களுக்காக சேவை செய்வேன்’ என்று! இப்போது அதைத்தானே செய்து கொண்டிருக்கிறேன்... இதில் என்ன ஆச்சரியம்?’’ என கேஷுவலாகக் கேட்கிறார் பர்கா.சொன்னவர்கள் எல்லாம் செய்துவிட்டார்களா என்ன?

- நவநீதன்