நான் நிச்சயமா கடவுள் இல்லை!



சந்தானம் Open Talk

‘ஜில்’லென்று இருந்தது சாயங்கால சென்னை. ‘‘சாடர்டே ஈவினிங்னா அவனவனும் டாஸ்மாக்ல இருந்து டிஸ்கோ வரைக்கும் டிஸைன் டிஸைனா டைம்பாஸ்க்கு வழி வச்சிருக்கான். நான் உங்களோட பேச ரெடியாகிட்டேன். கேள்விகளை அள்ளிவிடுங்க!’’ - மெதுவாகச் சரணடைகிறார் சந்தானம். இப்போ அவர் காமெடியன் மட்டுமில்லை... ஹீரோ! ‘இனிமே இப்படித்தான்’ இதோ ரிலீஸுக்கு ரெடி! மில்லிமீட்டரில் கச்சிதமாக, பதற்றமே இல்லாமல் சிரிக்கிறார். 120 படங்களுக்கு மேல் என திரைப் பட்டியல் சொல்கிறது.

‘‘நிஜமா ரொம்ப அழகா இருக்கீங்க?’’‘‘காமெடியனா இருந்தா பரவாயில்லை, தொப்பை கூட வச்சிருக்கலாம். ஹீரோவிற்கு அதெல்லாம் அலவ்டு கிடையாது. ஆர்யாகிட்ட இந்தப் படத்தில் நடிக்கப் போறதைச் சொன்னேன். ‘உன்னைய அப்படியே மாத்திடலாம். இன்னும் கொஞ்சம் அழகா ஆக வேண்டியிருக்கு. டான்ஸ் கத்துக்க வேண்டியிருக்கு. சிக்ஸ் பேக் வேண்டாம்... இருக்கிற ஒரு பேக்கும் சரியா இருக்கணும்.

சரி வா... மகாபலிபுரம் வரை போய் டீ குடிச்சிட்டு வருவோம்’னு சொன்னான். ‘அதில் என்ன கஷ்டம்... ரெடி’னு சொல்லிட்டேன். கார்ல அவன் வீட்டுக்குப் போனால் எனக்கொரு சைக்கிளைக் கொடுத்து ‘என் கூடவே புறப்பட்டு வா’ன்னு சொல்றான். ‘சரி, அங்க ஏதோ மூலிகை டீ கண்டுபிடிச்சு வச்சிருப்பான் போல’ன்னு நம்பிப் போனால், அங்கே போய் சாதாரண டீதான் குடிச்சோம். ‘என்னடா மச்சான்?’னு கேட்டா, ‘இந்த தூரம்தான்டா மருந்து’ங்கிறான்.

வேர்த்து, விறுவிறுத்து சைக்கிளிங் போனால் உடம்பு அப்படி சரியாகுது. அவனுடைய ஃப்ரண்ட்ஸ் எல்லோரும் ‘300 பருத்தி வீரர்கள்’ படத்தில் வர்ற மாதிரியே வருவாங்க. அவங்கல்லாம் தொந்தி வீரர்களா முன்னாடி இருந்தவங்க. யார் ஆர்யாவை தொடர்ந்து பார்க்கிறாங்களோ, அவங்க ஃபிட்டா மாறிடுவாங்க. தேவையில்லாத கொழுப்பு கரைஞ்சிட்டா உடம்பு ஸ்லிம் ஆகிடுது. அதே மாதிரி, தேவையில்லாத விஷயத்தில் நுழையாமல் இருந்தாலும் வாழ்க்கை சுலபமாகிடுது!’’

‘‘சிவகார்த்தியேன் கரெக்டா இப்படியொரு காமெடி கதாநாயகன்னு வளர்ச்சி பெற்று வந்திட்டார். நீங்க முன்னாடியே வந்திருக்கணுமோ..?’’‘‘அடுத்தவங்களைப் பத்திப் பேச வேண்டாம் பிரதர். நம்மளைப் பத்திப் பேசுவோம். நான் என்னிக்கும் தனியா காமெடி பண்ணினதில்லை. படத்தோட ஒரு பார்ட்டா இருந்துதான் செய்திருக்கேன். அது கஷ்டம்ங்க. ஒரு பன்ச் அடிக்கணும். எதிரே நிற்கிறவர் அதை கவுன்டர் பண்ணுவார். நாமளும் அதை ரீ கவுன்டர் பண்ணணும்.

அதுக்கு ரொம்ப யோசிக்கணும். அப்பவே காமெடியில் இருந்து பாக்யராஜ் ஹீரோவாகி யிருக்கார். அப்புறம்தான் பெரிய இடைவெளி. ஹாலிவுட்ல ஜிம் கேரி மாதிரியானவங்க காமெடி ஹீரோவா சாதிச்சிருக்காங்க. இங்கே காமெடின்னா மாவு டப்பாவை மண்டையில கொட்டிக்கிட்டு நிற்கிறாங்க. நான் பபூன் மாதிரி கேவலப்பட்டு காமெடி பண்றதில்லை. பன்ச் அடிச்சு காலி பண்றதுதான் நம்ம வேலை!’’

‘‘இனிமேல் முக்கியமான காமெடி ரோல்தான் பன்ணுவேன். நிறைய பண்ணமாட்டேன்னு சொல்லிட்டீங்களே?’’‘‘இப்பல்லாம் யாரு வந்தாலும் ‘நீங்க ஹீரோவுக்கு நண்பனா வர்றீங்க. அப்புறம்...’னு ஆரம்பிக்கிறாங்க. அவங்கள அப்படியே நிறுத்திடுறேன்! ஏதாவது புதுசா இருக்கணும். நம்மளை ஸ்கிரிப்ட்டுக்குள்ள கொண்டு போகணும் இல்லையா? நமக்கே போரடிச்சா, ஆடியன்ஸுக்கு போரடிக்க எவ்வளவு நேரம் ஆகும்? நமக்குத் தெரிஞ்ச ஹீரோ, கேமராமேன், அறிஞ்ச புரொடியூசர் இருந்தா மட்டும் பத்தாது... கதையும் ஸ்கோப் தரணும்.

இப்ப பாருங்க... கௌதம் மேனன் படத்துலயும் நடிச்சிருக்கேன். அவர் நம்மளை ரசிப்பார். அப்படியே நம்மை செயல்பட அனுமதிப்பார். ஒண்ணு, அப்படி இருக்கணும். இல்லாட்டி நாம் சொன்னா அதை சரியா எடுத்துப்போகிற ஆளாக இருக்கணும். இப்படிப் பார்த்து நம்பரை சுருக்கிட்டேன். இங்கேதான் காமெடியன்னு சொல்லி கடுப்பேத்துறாங்க. ஹாலிவுட்டில் எல்லோருக்கும் ஆக்டர்னு சொல்லிக்கத்தான் பிரியம். நீங்க பத்திரிகையாளர்னா சீரியஸ் பத்திரிகையாளன், காமெடி பத்திரிகையாளன்னு ஏதாவது இருக்கா? பத்திரிகையாளர்னு சொல்றதுதானே சரி! அது மாதிரி நான் எல்லாத்தையும் உணர்ந்து நடிச்சு அனுபவத்துல நல்ல நடிகனா வரணும்னுதான் ஆசைப்படுறேன்!’’

‘‘நீங்க நடிச்ச ‘வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்’ படத்தில் சீரியஸ் நிமிடங்களில் கூட காமெடியை எதிர்பார்த்தாங்க!’’‘‘ஆமாங்க... அதுதாங்க கஷ்டம்! நம்ம கலரை மாத்தறது பெரும்பாடு. ‘பில்லா’ பண்ணிட்டு ரஜினி ‘தில்லுமுல்லு’ பண்ணினார். ஓடுச்சு! அப்படித்தான் வெரைட்டி பண்ணணும்னு நினைக்கிறேன். அந்தப் படத்தில் கூட ஸ்கிரிப்ட்டையே மாத்திடலாமான்னு நினைச்சேன். ராஜமௌலி ஸ்கிரிப்ட்... பெரிய டைரக்டர்... கை வைக்க பயமா இருந்தது. இது நம்ம ஸ்கிரிப்ட். மக்களோட ரசனையை அளவு வச்சு, சரியா பண்ணியிருக்கோம்!’’‘‘எப்படி இருக்கும் ‘இனிமே இப்படித்தான்’?’’

‘‘கலகலன்னு இருக்கும். ஒரு அருமையான மெசேஜ் இருக்கு. அப்படியே வாழைப் பழத்துல ஊசி ஏத்துனா மாதிரி கொடுத்திருக்கோம். நம்ம கூட ஆஷ்னா, அகிலா கிஷோர்னு ரெண்டு பொண்ணுங்க. முதல் பொண்ணு என்கூட முன்னாடியே நடிச்சிருக்கு. நல்லாத் தெரியும். இந்தப் பொண்ணும் எங்க காமெடியைப் புரிஞ்சுக்கிட்டு நடிச்சாங்க. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்தப் படத்தில் நடிச்சேன். நல்ல பொண்ணுங்க. அருமையா நடிச்சுக் கொடுத்தாங்க!’’‘‘ஹீரோ-காமெடியன்... எது ஈஸி?’’

‘‘ஹீரோதான். அதுலதான் நம்மளை கவனிக்க எல்லா மட்டத்திலும் ஆள் இருக்கும். ஃபைட் சீனில் மாஸ்டர் பார்த்துக்குவார். டைரக்டருக்கு அதுதான் முழு நேர வேலை. ஆனால், இந்த காமெடியன் வேலைஇருக்கே... பன்ச், கவுன்டர் பன்ச் அடிச்சிட்டு யாரும் சிரிக்கலைன்னா ‘பக்’னு ஆயிடும். சிரிச்சா மட்டும் பத்தாது... கிளாப்ஸும் அடிச்சாத்தான் நாம காலரைத் தூக்கிவிட்டுக்கலாம். ஒரு காமெடியனுக்கு அங்கேதான் மரியாதை. இதுல கூட ‘லவ்ங்கிறது கேம் ஷோவுல பஸ்ஸர் அமுக்குற மாதிரி. நீ அமுக்கலைன்னா இன்னொருத்தன் அமுக்கிட்டுப் போயிடுவான்’னு சொல்லியிருக்கேன். இதெல்லாம் ஃபேக்ட்!’’
‘‘13 வருஷமா ஃபீல்டில் இருக்கீங்க... கத்துக்கிட்ட விஷயம் என்ன?’’

‘‘முதன்முதலா நம்ம காட்ஃபாதர் சிம்பு தான் நம்மளை அறிமுகம் பண்ணினார். ஆரம்பத்தில அவர் கூடவே திரிவேன். அவருக்கு வயது 20 இருக்கும். எனக்கு 24. அந்த வயசுல டைரக்ட் பண்ணுவார். சீன் எழுதுவார். கேமரா வியூஃபைண்டரில் பார்த்து கரெக்‌ஷன் சொல்லுவார். சினிமாங்கிறது ரொம்ப டீப்பா இறங்கி வேலை செய்ய வேண்டிய இடம்னு அப்படித்தான் தெரிஞ்சது. இங்கே நம்ம தப்புகளை சரி பண்ணிக்கிட்டாலே போதும். யாரும் நமக்கு கத்துக்கொடுக்கவே வேண்டாம் பிரதர்!’’‘‘இத்தனை வருஷ நீண்ட உழைப்பு... இன்னமும் வடிவேலு இடத்திற்கெல்லாம் வர முடியுமானு கேட்க நேரிடும்போது என்ன நினைப்பீங்க?’’

‘‘புதுசா எது வந்தாலும் அப்படித்தான். மாருதி 800 வந்தப்போ ‘பிரீமியர் பத்மினி மாதிரி வருமா’ன்னு சொல்லியிருப்பாங்க. இன்னிக்கு ‘மாருதி மாதிரி வருமா’ன்னு புது வண்டிகளை சொல்றாங்க. சினிமாவில் சிவாஜி சார் காலத்திலிருந்தே இந்தப் பிரச்னை இருக்கு. அவருக்கு முன்னாடி இருந்தவரைக் காட்டி ‘அவர் மாதிரி வருவாரா சிவாஜி’ன்னு கூட சொல்லியிருப்பாங்க. இப்ப கமல் சாருக்கும் அந்தப் பிரச்னை.

‘சிவாஜி நடிக்காததா’ன்னு ஒரே வரியில சொல்லிட்டுப் போயிடுவாங்க. எம்.ஜி.ஆருக்கே இது நடந்திருக்கு. நாம எம்மாத்திரம்? வடிவேலு, விவேக் அண்ணன்களோட நம்மை ஒப்பிட்டுப் பார்க்குறது சகஜம்தான். நான் கவுண்டமணியை அப்படியே காப்பி அடிக்கிறேன்னு சொன்னாங்க. இப்ப அப்படிச் சொன்னவங்களே மறந்துட்டாங்க. எனக்கு என்னோட சக்தி, பலம், எனர்ஜி எல்லாமே தெரியும். அதனால் இதைப் பற்றியெல்லாம் காதில் போட்டுக்கிறதில்லை. நம்ம வேலையை நாம் சரியா பார்த்துட்டுப் போகணும். கடவுள் ஒருத்தர்தான் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர். நான் நிச்சயமா கடவுள் இல்லை!’’

- நா.கதிர்வேலன்