யானை செல்ஃபி... எல்ஃபி!விநோத ரஸ மஞ்சரி

கனடா நாட்டைச் சேர்ந்த 22 வயது மாணவர் லி ப்ளாங்க். தன் கேர்ள் ஃப்ரெண்டோடு அவர் தாய்லாந்துக்கு டூர் போயிருந்தார். இரண்டு யானைகளுக்கு வாழைப் பழம் கொடுத்து அவர் அளவளாவியபோது ஒரு யானை ரொம்ப நட்பாகிவிட்டது.

லிப்ளாங்கிடம் சாப்பிட ஏதாவது கிடைக்குமா என அது அங்கே இங்கே தடவ, எதிரில் இருந்த அவரின் கேமரா அதன் கண்ணில் பட்டுவிட்டது. அலேக்காக அதை தும்பிக்கையில் சுழற்றி அது கையில் எடுக்க, போட்டு உடைத்துவிடுமோ என எல்லோரும் அதிர்ந்து போனார்கள்.

ஆனால் நடந்தது ஒரு இனிய ஆச்சரியம். அந்நேரம் தானாக போட்டோ எடுக்கும்படி செட் செய்யப்பட்டிருந்த அந்தக் கேமராவை துல்லியமாக தன்னை நோக்கித் திருப்பி வைத்து பார்த்துக்கொண்டே இருந்தது அந்த யானை. பக்கத்திலேயே நம் லி ப்ளாங்க்கும் இருந்தார். பத்திரமாக அந்தக் கேமராவை வாங்கிப் பார்த்தால் யானை தன்னைத் தானே எடுத்த செல்ஃபி போட்டோ பளிச் என்று வந்திருந்தது.

இந்த வருடத்தின் துவக்கத்திலேயே இந்தச் சம்பவம் நடந்திருந்தாலும் கடந்த வாரம்தான் இதை இணையத்தில் வெளியிட்டார் லி ப்ளாங்க். உடனடியாக, லட்சக்கணக்கானவர்கள் இதை டவுன்லோடு செய்து ‘உலகின் முதல் யானை செல்ஃபி’ எனப் போற்றத் துவங்கி விட்டனர். கடந்த வாரம் முழுக்க நெட் ஹாட் போட்டோ இதுதான்.

‘‘இது மிக அரிதான சூப்பர் போட்டோதான். ஆனால் உலகின் முதல் யானை செல்ஃபி... அதாவது முதல் எல்ஃபி என்ற பெருமையை இதற்கு தர முடியாது. கடந்த வருடம் இங்கிலாந்தில் உள்ள சஃபாரி பார்க்கில் ஒரு யானை ஸ்காட் ப்ரியர்லி என்பவரின் செல்போனைப் பிடுங்கி அதில் தன்னைத் தானே போட்டோவும் எடுத்தது. அதுதான் உலகின் முதல் எல்ஃபி!’’ என இந்த விஷயத்தில் தீர்ப்பு சொல்லியிருக்கிறது சி.என்.என் செய்தி சேனல்!முதல் தரம் இல்லை என்றாலும் தரத்தில் முதல்!

- ரெமோ