அவன் அதுக்கு...தன் எதிரே நின்றிருந்தவனை பார்வையால் அளவெடுத்தார் சுந்தரம்.‘‘அப்பா... இவன் பேரு கணேசன். நம்ம பஸ்ல கண்டக்டர் வேலைக்கு சேர்ந்திருக்கான். உங்ககிட்டயும் ஆளைக் காட்டிடலாம்னுதான் வரச்சொன்னேன்...’’ என்ற மகனை சிந்தனையோடு நோக்கிவிட்டு அந்த இளைஞன் பக்கம் திரும்பினார் சுந்தரம்.

‘‘தம்பி! நீ நம்ம ஃபைனான்ஸ் கம்பெனிக்கு நாளைக்கு வேலைக்கு வந்துடு. இப்ப புறப்படு!’’அப்பாவின் இந்த முடிவு மகனுக்கு திகைப்பைத் தந்தது. அவன் போனதுமே தன் சந்தேகத்தைக் கேட்டான்...

‘‘என்னப்பா! கண்டக்டர் வேலைக்கு வந்தவனை... ஃபைனான்ஸ் கம்பெனி வேலைக்கு வரச்சொல்லிட்டீங்க?’’‘‘ஆளை நல்லாப் பார்த்தியா? முகம் முழுக்க அம்மைத் தழும்பு! ஆளும் 100 கிலோவுக்கு மேல இருப்பான் போல... பார்க்கிறவங்களை பயமுறுத்தற உருவம்! ஃபைனான்ஸ் கலெக்‌ஷனுக்கு சரியான ஆள்! அது மட்டுமில்ல... அவன் கண்டக்டரா நிக்கற இடத்தில மூணு, நாலு பேர் நிக்கலாம்.

ஒவ்வொரு ட்ரிப்புக்கும் இவனே இப்படி இடத்தை அடைச்சிக்கிட்டா கலெக்‌ஷனும் பாதிக்கும். புரியுதா?’’ என்றார் சுந்தரம். அப்பாவின் பிஸினஸ் யுக்தியைப் பாராட்டாமல் இருக்க முடியவில்லை மகனுக்கு.          

ச.மணிவண்ணன்