மதிப்பு தெரியும்



எம்.பி.ஏ படித்து முடித்த வைபவ், தன் அப்பாவின் சொந்த ஃபேக்டரி யிலேயே ஆறு மாதம் டிரெய்னியாக வேலை பார்த்தான். அந்த நிறுவனத்தை ஓரளவு புரிந்து கொண்டபின் அப்பாவிடம் வந்தான்.‘‘அப்பா, நம்ம ஃபேக்டரி தொழிலாளர்கள் மேல நீங்க எவ்வளவு மதிப்பும் மரியாதையும் வச்சிருக்கீங்கன்னு இந்த ஆறு மாசத்துல நல்லாவே புரிஞ்சுக்கிட்டேன்.

ஆனா, சம்பள உயர்வு, போனஸ் கோரிக்கைகளுக்காக அவங்க பல நாட்கள் தொடர்ந்து போராட வேண்டியிருக்கே. எப்படியும் தந்துடறீங்க! அதை கௌரவப் பிரச்னையா பார்க்காம, உடனடியா விட்டுக்கொடுத்துப் போகக் கூடாதா?’’ என்றான் அவன்அப்பா அவனை ஏற இறங்கப் பார்த்தார்.
‘‘நீ வாங்கிய எம்.பி.ஏ பட்டத்தை எவ்வளவு மதிக்கிறே?’’

‘‘ப்ராஜெக்ட், இன்டர்ன்ஷிப்னு ராத்திரி பகலா உழைச்சு வாங்கின பட்டம்பா. அதுக்கு விலைமதிப்பே இல்லை!’’ ‘‘அதே மாதிரிதான் போனஸும் இன்க்ரிமென்ட்டும். கேட்டதும் கொடுத்துட்டா, அதன் மதிப்பு அவங்களுக்குத் தெரியாது. கஷ்டப்பட்டு கிடைச்சா அந்தப் பணத்தை அநாவசியமா செலவழிக்காம, சேமிச்சு வைப்பாங்க. அதனால்தான், நம்ம தொழிலாளர்கள் பலர் சொந்த வீடு வச்சிருக்காங்க!’’ - அப்பா பெருமையுடன் விளக்கினார்.
எம்.பி.ஏ சொல்லித் தராத தொழிலாளர் நலன் சைக்காலஜியை அப்பாவிடம் கற்றுக்கொண்டான் வைபவ்.                

எஸ்.ராமன்