கேளவிக்கு பதில்



பெண் பார்க்க ஒரு கோஷ்டி வருவதாக இருந்தது. மீனா தன் கணவர் கோபாலிடம் கறாராகச் சொல்லி வைத்தாள்.‘‘உங்க வளவள பேச்சாலயே நம்ம பொண்ணுக்கு நல்ல வரன் அமைய மாட்டேங்குது. பொண்ணும் இப்படித்தான் பேசுமோன்னு நினைச்சி இதுவரை வந்தவங்க எல்லாம் தலைதெறிக்க ஓடிட்டாங்க. இன்னைக்கு வாயைத் திறக்காம உக்காருங்க. கேட்ட கேள்விக்கு மட்டும் பதில் சொன்னா போதும்!’’

அவள் சொல்வதும் நியாயம்தான் என ஒப்புக்கொண்டார் கோபால்.பெண்ணைப் பார்த்தவர்களுக்கு பிடித்துப்போனது. அவர்கள் கேட்டதற்கெல்லாம் மீனா பதில் சொன்னாள். உதட்டைப் பிடித்தபடி உட்கார்ந்திருந்தார் கோபால். வந்தவர்களுக்குக் குழப்பம்.‘‘ஏன் உங்க வீட்டுக்காரர் எதுவுமே பேசல? நல்லா கலகலன்னு பேசுவார்னு தரகர் சொன்னாரே? எங்களை அவருக்குப் பிடிக்கலையா?’’ என்று பிள்ளையின் தகப்பனார் கேட்டார்.

அவ்வளவுதான்... ‘ரெடி ஸ்டார்ட்...’ என்று மனசில் சொல்லிக்கொண்டே கோபால் வாயைத் திறந்து வார்த்தைகளை ஓட்டினார்.‘‘ம்ம்... இப்பத்தான் இயல்பா சகஜமா இருக்கு..!’’ என்றார்கள் வந்தவர்கள்.‘இந்த உலகத்தைப் புரிஞ்சிக்கவே முடியலையே!’ என நொந்தாள் மீனா.               

பம்மல் நாகராஜன்