நம்ப முடியுமா?



‘‘என்னம்மா... பையனைப் பிடிச்சிருக்கா?  பதிலே சொல்லாமல் இருக்கே!’’ - சடகோபன் தன் மகள் மாலதியிடம் மெல்லிய குரலில் கேட்டார்.மாலதி மெளனமாக இருந்தாள். காரணம், இது ரெண்டாந்தார சம்மந்தம். பிரசவத்தின்போது மனைவியை இழந்தவர்தான் மணமகன். கையில் ஒரு பெண் குழந்தை.

‘‘பையனை நல்லா தெரியும்மா! ரொம்ப நல்லவன். அவன் போதாத  காலம்...  அப்படி ஆகிடுச்சி. கொஞ்சம் யோசிம்மா!’’ - சடகோபன் விடுவதாக இல்லை.
‘‘பையனைப் பத்தி கவலை இல்லேப்பா. நல்லவராவே இருக்கட்டும். அவர் பெண் குழந்தையைப்  பத்திதான் கவலைப்படுறேன்.  அவளை வளர்த்து ஒருத்தன் கையில கௌரவமா  பிடிச்சிக் கொடுக்க வேண்டாமா? அதான் யோசிக்கிறேன்...’’

‘‘எனக்கு நம்பிக்கை இருக்கு மாலு... நீ புத்திசாலி.  நல்ல இடத்தில்  அவளை கரை சேர்ப்பே!’’ - ஆதரவாகச் சொன்னார் சடகோபன்.‘‘உங்க முதல் மனைவிக்குப் பிறந்த என்னை, சித்தி சொன்னாங்கன்னு அவங்க சொந்தக்காரப் பையனுக்கு ரெண்டாந்தாரமா கட்டி வைக்கப் பார்க்கறீங்க. என்னை மட்டும் எப்படிப்பா நம்பறீங்க? நானும் சித்தி மாதிரிதானே இருப்பேன்!’’ - மாலதி கேட்கவும், தலை கவிழ்ந்தார் சடகோபன்.           

வி.சிவாஜி