பேய் மழை. மணி இரவு 11. வேளச்சேரி பஸ் நிறுத்தத்தில் அந்தப் பெண் தன்னந்தனியாக நின்றிருந்தாள். ஒரு மோட்டார் சைக்கிள் வர, அதை கை காட்டி மறித்தாள்.
மாடர்ன் உடையில் மயங்கியபடியே ‘‘எங்கே போகணும்?’’ என்றான் பைக் ஆசாமி.‘‘கிண்டி!’’ என்றபடி சீட்டில் அமர்ந்தவள், அவன் தோள் மீது கைகளைப் போட்டுக்கொண்டாள்.
அவன் தன்னை மறந்து வாகனத்தை விரட்டினான். ஒரு ஸ்பீடு பிரேக்கரில் பைக் தூக்கிப் போட, அவள் நச்சென்று முதுகில் இடித்தபோது அவனுக்குள் மின்சாரம்.
சட்டென்று மோட்டார் சைக்கிள் யாரும் இல்லாத மரங்கள் அடர்ந்த ஒரு பகுதிக்கு விரைந்தது.அவள் கலவரத்துடன், ‘‘எங்கே போறீங்க?’’ என்றாள். அவன் வண்டியை நிறுத்தி, கத்தியைக் காட்டி, ‘‘உன்னை இங்கேயே அனுபவிச்சிட்டு கிளம்பணும்.
இன்னைக்கு எனக்கு அதிர்ஷ்டமான நாள். கமான் க்விக்!” என்றான்.அவள் கண்ணிமைக்கும் நேரத்தில் தன் ஹேண்ட்பேக்கிலிருந்து துப்பாக்கியை எடுத்தாள். ‘‘இது எனக்குத்தான்டா அதிர்ஷ்டமான நாள்... உன்கிட்ட இருக்கறதை எல்லாம் கழட்டிக் கொடு!’’செயின், மோதிரம், வாட்ச், காஸ்ட்லி மொபைல் என அனைத்தையும் சுருட்டிக் கொண்டு அவனது பைக் சாவியைப் பிடுங்கி, அதில் ஏறிப் பறந்தாள் அவள்!
சி.சேகர்