மோடி 365 நாட்கள்



* மன்மோகன் சிங் பிரதமரான முதல் ஆண்டில் 47 நாட்கள் வெளிநாடுகளில் இருந்தார்; 12 நாடுகளுக்குப் போனார். மோடி 17 நாடுகள் போனார்; 52 நாட்கள் வெளிநாட்டில் இருந்தார். ஆனால் மோடி அளவுக்கு மன்மோகன் விமர்சனத்துக்கு ஆளாகவில்லை.

* பிரதமராக மோடியின் ஆண்டுச் சம்பளம் 19 லட்சம் ரூபாய். அமெரிக்க அதிபர் ஒபாமாவுக்கு இது ஒரு மாதச் சம்பளம். அதிகம் சம்பளம் வாங்கும் உலகத் தலைவர்கள் பட்டியலில் மோடிக்கு 11வது இடம்.

* ஆனால் அதிக நேரம் வேலை பார்க்கும் தலைவர்கள் வரிசையில் மோடிக்கு முதல் இடம். வாரம் 168 மணி நேரத்தில் 140 மணி நேரம் வேலை பார்க்கிறார். அவரது தினசரி தூக்கம் 4 மணி நேரம் மட்டுமே!

* நாடாளுமன்ற தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வாக்குச்சாவடி வாசலிலேயே தாமரை சின்னத்தோடு செல்ஃபி எடுத்துக்கொண்டது முதல், சீனப் பிரதமரோடு சமீபத்தில் எடுத்த செல்ஃபி வரை அவரது மோகம் குறையவில்லை. தான் விசிட் செய்த அத்தனை நாட்டுத் தலைவர்களோடும் செல்ஃபி எடுத்திருக்கிறார்.

* சமூக வலைத்தளங்களில் அமெரிக்க அதிபர் ஒபாமா, போப் ஆண்டவருக்கு அடுத்து அதிகம் பிரபலமான உலகத் தலைவர் மோடிதான்!

* அதிகாரத்தை தன் கையில் இறுக்கமாக வைத்திருக்கும் தலைவராக அவர் அறியப்படுகிறார். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு மத்திய அமைச்சரவை அலுவலகங்களில் ஊழியர்கள் முன்பைவிட தினமும் 20 நிமிடங்கள் அதிகமாக வேலை பார்க்கிறார்களாம். எந்த ஃபைலும் ஒரு வாரத்துக்கு மேல் யாருடைய டேபிளிலும் காத்திருப்பதில்லை.

* அமைச்சர்களைத் தாண்டி அதிகாரிகளை நேரடியாக சந்தித்து முடிவுகள் எடுப்பது மோடியின் ஸ்டைல். முன்பெல்லாம் முப்படைத் தளபதிகளை, பதவியேற்கும்போது மரியாதை நிமித்தம் பிரதமர்கள் சந்திப்பதோடு சரி! மோடி மாதம் ஒருமுறை அவர்களைச் சந்திக்கிறார்.

* உயர் அதிகாரிகளோடு இதுவரை மூன்று முறை தேநீர்க் கூட்டம் நடத்திவிட்டார். அமைச்சர்களைத் தாண்டி எல்லா அதிகாரிகளும் தன்னை நேரடியாக சந்திப்பதை மோடி ஊக்குவிக்கிறார். இதனால் ராஜ்நாத் சிங், சுஷ்மா ஸ்வராஜ் போன்ற சீனியர் அமைச்சர்கள்கூட முக்கிய முடிவுகளை எடுக்க முடியாமல் தவிக்கின்றனர்.

* அமைச்சர்களிடமும் மோடி கண்டிப்பு காட்டுகிறார். சீனியர் அமைச்சர் ஒருவரை ஒரு திட்டம் பற்றி ஆலோசிப்பதற்காக அழைத்தார். அவர் எதுவும் தெரியாமல் திணற, ‘‘நாளை இதுபற்றிய அறிக்கையோடு வாருங்கள்; அல்லது ராஜினாமா கடிதத்தோடு வாருங்கள்’’ என்றாராம்.

* தன்னைத் தேர்ந்தெடுத்த வாரணாசி தொகுதியை தலைகீழாக மாற்றிக் காட்டுகிறேன் என்றவர், இந்த 2015ம் ஆண்டு பிறந்ததிலிருந்து ஒருமுறைகூட அங்கு போகவில்லை. ‘தோற்றாலும் இது என் சொந்தத் தொகுதி மாதிரி’ என அவரோடு மோதித் தோற்றபோது சொன்ன அரவிந்த் கெஜ்ரிவாலும் ஒருமுறைகூட போகவில்லை!

- அகஸ்டஸ்