தொடரும் பயணங்கள்
களங்கமற்ற பால்யத்தின் அன்பால்
பிணைந்திருக்கும் கயிறின்
இருமுனை இணைப்பில்
உருவானதுதான் அந்த
சிறுவர் பேருந்து.
சரியான சில்லறை கொடுத்து
பயணச்சீட்டு பெறவேண்டியதில்லை
அதில் பயணிக்க.
ஓயாத கால்களால் மேடு பள்ளங்களில்
சலிக்காமல் பயணிக்கும் அது,
தொலைதூர ஊர்களையும்
கனவின் வார்த்தைகளால்
இணைத்துவிடும் மிக அருகில்.
கயிறை இழுத்துப் பிடித்து
பேருந்தின் வேகத்தை குறைத்து
பயணிகளைக் காக்கும் பொறுப்பு அதில்
நடத்துனரிடமென்பது அதிசயம்தான்.
பள்ளி விடுமுறை தினத்தில் மட்டுமே
இயங்கும் இப்பேருந்துப் போக்குவரத்து
நகரமயமாக்கலில் புதையுண்டுபோனது
கிராமத்தோடு என்றாலும்
பால்யத்தில்
அதில் பயணித்த அனைவரின்
நினைவுகளிலும்
தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது
தன் பயணத்தை.
ஓவியம்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
மகிவனி