கமலுக்கு வாத்தியார்!



‘தெனாலி’யில் இலங்கைத் தமிழ், ‘சதிலீலாவதி’யில் கொங்குத் தமிழ், ‘மகாநதி’யில் தஞ்சைத் தமிழ், ‘தசாவதார’த்தில் நாஞ்சில் தமிழ் என கலக்கிய கமல், ‘பாபநாசம்’ படத்தில் நெல்லைத் தமிழ் பேசியிருக்கிறார். இதுவரை பேசிய தமிழ், பேசாத தமிழ் என எல்லாமும் உலக நாயகனுக்கு அத்துப்படிதான். ஆனாலும் ஒரு ‘ஆசிரியர்’ வைத்து வட்டார வழக்கைக் கற்பது கமலின் பர்ஃபெக்‌ஷன். இம்முறை கமலுக்கு நெல்லைத் தமிழ் சொல்லிக்கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுகா.

‘‘கமல் சார் நெல்லைத் தமிழ் பேசியிருப்பது இதான் முதல் முறை. ‘எழுதிக் காண்பித்து  எல்லாம் உச்சரிக்க சொல்லக்கூடாது. சவுண்டில் சொல்லுங்க... ஒரு  கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்கிற மாதிரி எனக்குச்  சொல்லிக்கொடுங்க... நான் கத்துக்குவேன்’ எனப் பணிவாகப் பாடம் கேட்டார் கமல் சார்!’’ - சொல்லும்போதே புல்லரிக்கிறது சுகாவுக்கு!

‘‘தமிழ் சினிமாவில் திருநெல்வேலி பாஷை இதுவரை நகைச்சுவைக்குத்தான் பயன்பட்டிருக்கு. சீரியஸான ஒரு முழு நீளப் படத்தில் நெல்லைத் தமிழ் வருவது இதான் முதல்முறைன்னு சொல்லலாம். ‘சதிலீலாவதி’ படத்தில் நான் அசோசியேட். அதனால் கமல் சார் முன்பே அறிமுகம். நெல்லை ஸ்லாங் கற்றுக் கொடுக்கத்தான்  நான் முதலில்  அழைக்கப்பட்டிருந்தேன். இயக்குநர் ஜீத்து ஜோசப்  மலையாளத்துக்காரர்; வசனம் எழுதிய ஜெயமோகன் நாஞ்சில் நாட்டுக்காரர். இதனால் கமல்  சார் தவிர, படத்தில் நடிக்கும் மற்றவர்களுக்கும் நெல்லைத் தமிழை நானே சொல்லிக் கொடுத்திருக்கிறேன்.

 இந்தப் படத்தின் டப்பிங் முழுவதையும் கூட என்னை உடனிருந்து கவனிக்கச் சொன்னார் கமல் சார்.   நாஞ்சில் நாட்டுக்காரரான டி.கே.சண்முகம் கமலின் குரு என்பதால், தென்மாவட்ட மக்களும், அவர்களின் பாஷையும் கமலுக்கு எப்போதுமே பிடிக்கும். இந்தப் படத்தில் கூட ஒரு கேரக்டருக்கு சண்முகம் எனப் பெயர். ஆனால் கமல் அவரை கூப்பிடும்போதெலாம் ‘சண்முகம் அண்ணாச்சி’ என அவரையும் அறியாமல் அழைத்துவிடுவார். இந்தப் படத்தில் ‘படைப்பாற்றல் மேம்பாடு’ என எனக்கு டைட்டிலில் மரியாதை செய்திருக்கிறார்கள்.

கமலோடு பழகிய தினங்கள் அற்புதமானவை. ஒரு தடவை சொன்னதை அடுத்த நொடியே கப்பென பிடித்துக்கொள்கிறார். ஒரு விஷயம் சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். இருந்தாலும் சொல்கிறேன். பல மொழிகள் அறிந்திருப்பதிலும் பல வட்டார வழக்குகளை அநாயாசமாக பேச்சில் கொண்டு வருவதிலும் நாம் கேள்விப்பட்ட வரையில் பாரதியார் எப்படியோ... அப்படி கமல் சார். எத்தனையோ விதமான தமிழ் வழக்குகளை அறிந்திருந்தாலும் நெல்லை வட்டார வழக்கின் ரைமிங்குகளை வெகுவாக ரசித்தார் கமல்!’’ என்கிற சுகா, இப்போது அடுத்த கமல் படமான ‘தூங்கா வனம்’ படத்திற்கு வசனம் எழுதுகிறார்.

- மை.பாரதிராஜா