தகதக ‘தளபதி’ தினேஷ்



எங்கேயோ பார்த்த முகம்

நான் பானுப்ரியா ஜோடியாக்கும்!

‘‘ரொம்ப நாளா கேட்கணும்னு ஆசை. இந்த ரவுடி, அடியாள், ஃபைட்டர்கள் எல்லாம் நடமாடும் நகைக்கடையாகவே இருக்காங்களே... ஏன்?’’ - வாட்டமாக தளபதி தினேஷ் கிடைக்க, தைரியமாய் கேட்டு வைத்தோம். சத்யராஜுக்கே டூப் போடக்கூடிய ஹைட் அண்டு வெயிட் என்றாலும் அதற்கு கான்ட்ராஸ்ட்டான சாஃப்ட் கேரக்டர் தினேஷ். ஸ்டன்ட் மாஸ்டரிலிருந்து அடியாள் கேரக்டர் வழியாக காமெடி ரூட்டை பிடித்தவர். 3 முதல்வர்களிடம் சிறந்த ஸ்டன்ட் மாஸ்டர் விருது வாங்கியவர்.

‘‘என்கிட்ட பழகாதவங்கதான் சார் ‘நகைக்கடை’யா பார்ப்பாங்க. ‘பந்தா பார்ட்டி’ன்னு நினைப்பாங்க. நெருங்கிய நண்பர்களுக்குத் தெரியும் என்னோட சென்டிமென்ட். சின்ன வயசுல ஒரு கிராம் தங்கம் வாங்கக் கூட என்கிட்ட காசு இருந்ததில்லை. அந்த ஆதங்கத்துலதான் வருமானம் வரும்போது இப்படி வாங்கிப் போட்டுக்க ஆரம்பிச்சிட்டேன். மத்த ஃபைட்டர்ஸ் பத்தி எனக்குத் தெரியாது!’’ - வெள்ளந்தியான பதில் அவரிடமிருந்து.

‘‘ஒரிஜினல் பேரே தினேஷ்தான் சார். பூர்வீகம் ஆந்திரா. சின்ன வயசுலயே அப்பா இறந்துட்டார். வீட்டுக்கு ஒத்த புள்ள. படிப்பை விட விளையாட்டுலதான் ஈடுபாடு. பத்தாம் வகுப்பு வரை படிச்சேன். ‘இந்த உசரத்துக்கும் உடம்புக்கும் போலீஸாயிடுடா’ன்னு எல்லாரும் சொன்னாங்க. எனக்கும் அதான் ஆசை. ஆனா அம்மாவுக்கு பயம். அது உசுருக்கு உத்தரவாதம் இல்லாத வேலைன்னு வேணாம்னுட்டாங்க. சினிமா ஃபைட்டர்னா என்னன்னு அவங்களுக்குத் தெரியாது. அடி வாங்குற மாதிரி நடிக்கறதுன்னு நினைச்சு விட்டுட்டாங்க.

பெரிய பெரிய கண்ணாடியை உடைக்கறது, ஸ்பான்ஜ் - தெர்மாகோல் வசதி இல்லாத காலத்திலேயே ரோப் கட்டி தொங்குறதுன்னு நான் செய்த ஸ்டன்ட்டை எல்லாம் நேர்ல பார்த்திருந்தா, அம்மா ரத்தக்கண்ணீரே விட்டிருப்பாங்க. இத்தனை வருஷ அனுபவத்தில், முதுகுத்தண்டுல ஒரு ஆபரேஷன், ரெண்டு கால்கள்லயும் ஆபரேஷன், பின்னாடி உட்காருற இடத்துல கண்ணாடி குத்தி பதினஞ்சு தையல்... இப்படி உடம்பெல்லாம் அவார்டுதான். எங்க வீட்ல யாருக்குமே என்னோட வேலை பிடிக்காது’’ - தழும்புகளைக் காட்டுகிறார் தினேஷ்.

 ‘‘பெரிய கனவோட வந்து அது நிறைவேறாம ஸ்டன்ட் மாஸ்டரானவன் இல்ல நான். நான் கண்ட பெரிய கனவே ஸ்டன்ட் மாஸ்டர் ஆகுறதுதான். அதுக்காகத்தான் சென்னை வந்தேன். அயனாவரத்துல தங்கியிருந்தேன். சினிமா ஃபைட்டர் ரங்கநாதன் அண்ணன் அறிமுகம் கிடைச்சது. ‘ஸ்டன்ட் யூனியன்ல சேர்ந்தாதான் ஃபைட்டர் ஆக முடியும். அதுக்கு கராத்தே கத்துக்கோ’ன்னு அவர்தான் என்னை என்கரேஜ் பண்ணினார்.  புரூஸ் லீ நம்ம தலைவர் வேறயா... உடனே கராத்தே கத்துக்கிட்டேன். ஆனா, யூனியன்ல சேர வழி தெரியாம உடையார் ஐயாவுக்கு பாடிகார்டா வேலைக்கு சேர்ந்தேன்.

ஒருநாள் அவருகிட்ட, ‘சினிமாவுல ஃபைட்டராகணும்’னு என் ஆசையைச் சொன்னேன். அவரே எம்.ஜி.ஆர்கிட்ட அழைச்சிட்டுப் போய் சிபாரிசு லெட்டர் வாங்கிக் கொடுத்தார். ரஜினி சாரோட ‘நான் சிகப்பு மனிதன்’தான் நான் ஃபைட்டரா அறிமுகமான படம். பல வருஷ கடின உழைப்பு. பார்த்திபன் சாரோட ‘சரிகமபதநி’ மூலம் மாஸ்டர் ஆனேன். தமிழ், தெலுங்கு, கன்னடம்னு எல்லா மொழியிலயும் வேலை பார்த்திருக்கேன். சிரஞ்சீவி, சிவராஜ்குமார், ரஜினி, கமல், விஜய், அஜித்னு எல்லா ஹீரோக்களோடவும் சோலோ ஃபைட் பண்ணின பெருமை எனக்கு இருக்கு.

‘தளபதி’ படத்துல ஓபனிங் சீன்லயே ரஜினி என்னை அடிச்சிக் கொல்றதா ஒரு மழை ஃபைட். எனக்கு டயலாக் கூட இல்லை. ஆனா, செத்துப் போன என்னோட மனைவியா பானுப்ரியா வருவாங்க. அவரை ரஜினி கல்யாணமும் பண்ணிப்பார். நானும் யார் கேட்டாலும் ‘அந்தப் படத்துல நான் பானுப்ரியா வுக்கு ஜோடி’ன்னு கெத்தா சொல்லிக்குவேன். அதிலிருந்துதான் சாதாரண தினேஷ், ‘தளபதி’ தினேஷ் ஆனேன்.

‘உனக்காக எல்லாம் உனக்காக’ படத்துல கார்த்திக், ரம்பா, கவுண்டமணி மூணு பேரையும் வச்சு ஒரு காமெடி ஃபைட் பண்ணியிருப்பேன். அது சுந்தர்.சிக்கு பிடிச்சுப் போயி ‘வின்னர்’ல என்னை காமெடி ஃபைட்டரா நடிக்க வச்சார். ‘வட்டச் செயலாளர் வண்டு முருகன்’ வடிவேலுவை குமுறுறதுக்காக தூக்கிட்டுப் போவேன். ‘கலகலப்பு’ல சந்தானத்தோட அடியாளா வருவேன். ‘சுகர் மாத்திரை போட்டுட்டு வந்துடவா பாஸ்’னு அதுல நான் கேக்குறது செமயா வொர்க்கவுட் ஆகிடுச்சு. சுந்தர்.சி சார் தொடர்ந்து வாய்ப்பு கொடுக்கறார். ‘அப்பாடக்கர்’ உட்பட அஞ்சாறு படங்கள்ல நடிக்கறேன்.

எனக்கு ரெண்டு பசங்க. பெரியவன் ஹரி தினேஷ் பி.இ படிச்சிருக்கார். சின்னவன் பிரதீப் குமார் விஸ்காம் படிச்சிருக்கார். ரெண்டு பேருக்குமே கல்யாணம் ஆகிடுச்சு. ஒரே ஒரு பேத்தி, லியனா. என் கஷ்டம் பசங்க படக் கூடாதுன்னு அவங்கள வேற வேற ஃபீல்டுல படிக்க வச்சேன். ஆனா, இப்போ ரெண்டு பேருமே என் துறையிலதான் இருக்காங்க. ஹரி தினேஷ், ‘வேலை இல்லா பட்டதாரி’க்கு ஸ்டன்ட் மாஸ்டர். ‘மாற்றான்’ல சூர்யாவுக்கு இன்னொரு சூர்யாவா டூப் போட்டிருக்கான் பிரதீப்குமார்.

பெரிசா ஒண்ணும் சாதிக்கலைன்னு ஒரு சின்ன கவலை இருந்தாலும், நான் படிச்ச சாதாரண பத்தாம் வகுப்புக்கு இந்த வாழ்க்கை பெருசுதானே. பொதுவாவே உழைப்புக்குக் கிடைக்கிற கூலி வேற; பலன் வேறங்க. யாரா இருந்தாலும் செய்யிற வேலைக்கு உடனே கூலி கிடைச்சுடும். பலன் லேட்டாதான் கிடைக்கும். ஆனா, நிச்சயமா கிடைக்கும்.

இன்னைக்கு எனக்கு கிடைக்கிற நடிப்பு சான்ஸ் எல்லாம் 30 வருஷம் உண்மையா உழைச்சதுக்கான பலன்!’’ - தினேஷ் குலுங்கிச் சிரிக்க, சிணுங்கி ஆமோதிக்கின்றன கழுத்து நகைகள்!‘‘ஒண்ணும் சாதிக்கலைன்னு ஒரு சின்ன கவலை இருந்தாலும், நான் படிச்ச சாதாரண பத்தாம் வகுப்புக்கு இந்த வாழ்க்கை பெருசுதானே!’’

- மை.பாரதிராஜா
படங்கள்: ஆர்.சந்திரசேகர்