‘டிமான்ட்டி காலனி



ஊரே பயந்து நடுங்கும் பேய் காலனிக்கு குவார்ட்டர் அடித்துவிட்டு போய் வரும் அருள்நிதி அண்டு கோ, அதன்பிறகு படுகிற அவதிகளே கதை. ‘மௌனகுரு’விற்குப் பிறகு அருள்நிதிக்கு வகையாக சிக்கிய இன்னொரு ப்ளாட். அடித்துப் பெய்கிற திகில் மழையில் கதகதப்பான நிகழ்வு ‘டிமான்ட்டி காலனி’.

சென்னையில் ஒரு பகுதி பற்றி ஏற்கனவே அறியப்பட்ட கதையையே புது திகில் முலாம் பூசித் தந்ததில் வெற்றி பெறுகிறார் அறிமுக இயக்குநர் அஜய் ஞானமுத்து. வெவ்வேறு திசைகளிலிருந்து வரும் 3 நண்பர்கள் மழை பொழிகிற சாயங்காலத்தில் கூடி சேர்ந்து மது குடிப்பதிலிருந்து கலகலப்பாகிற தியேட்டர், முடிவு வரைக்கும் சலசலப்பும், பரபரப்பும் திகிலுமாக நகர்வதே படத்தின் பெரும் பலம்.

திகில் படத்தில் இத்தனை கலாய், காமெடி டெலிவரி நடிப்பை நாமே எதிர்பார்த்திருக்க முடியாது. அதற்கு அருமையாகப் பொருந்துகிறார் அருள்நிதி. இமேஜ் எதையும் எதிர்பார்க்காமல் இறங்கி விளையாடுவது இன்றைய ஹீரோக்களுக்கு அத்துப்படி. அந்த வகையில் சாதித்திருக்கிறார் அருள். குடித்துவிட்டு கலகலப்பில் எகிறும்போதும், பெண்ணிடம் பேசி காசு பறிக்கும்போதும் செம சிரிப்பு லக லக! நடிப்பில் எந்த உதறலும் இல்லாமல் சமாளித்து பின்னுகிறவர், டான்ஸில் கொஞ்சம் உதறியே ஜெயிக்கிறார்.

கூடவே வரும் நண்பர்கள் பட்டாளமாக ரமேஷ் திலக், அபிஷேக், சனத்... செம ஜாலி, கேலி கோஷ்டி. அருள்நிதியின் நண்பர்கள் குழு இரவு நேரத்தில் டிமான்ட்டி காலனியில் அடியெடுத்து வைக்கும் வேளையிலிருந்து சூடு பறக்கிறது. இறுக்கமான திரைக்கதையின் திடமே படத்திற்கான உயிர்நாடி. ஒவ்வொரு தடவையும் நண்பர்கள் ஆவியினால் (!) பழிவாங்கப்படுவதாக நினைக்கும்போதும், அது நடக்கும்போதும் செம விறுவிறுப்பு. அதிக அளவில் கோரம் நிகழாதது பெரும் ஆறுதல். எல்லா நண்பர்களையும் ஒருங்கிணைத்து படத்தை நடத்திச் செல்வதில் ஒன் மேன் ஷோ ஆக்குகிறார் அருள்நிதி.

 கதாநாயகியின் அறிமுகமே இல்லாமல் ஒரு படம் பார்த்திருக்கிறோமா? ஞாபகத்தில் பின்னோக்கிப் போனால் இல்லையென்றே (!) வருகிறது. படத்தின் எந்த ஒரு அம்சத்தை குறிப்பிட்டு எழுதினாலும் பார்க்கிறவர்களுக்கு விறுவிறுப்பு குறைந்துவிடும் எனத் தோன்றுவதில் இருக்கிறது திரைக்கதையின் ப்ளஸ். எதிர்பாராத க்ளைமேக்ஸ், எக்கச்சக்க காமெடி என்ற வகையில் கதையை நகர்த்தியிருப்பதில் டைரக்டர் உறுதியாய் நின்றிருக்கிறார். ஹீரோயின் இல்லாமல், இமேஜ் பார்க்காமல், சென்டிமென்ட் இல்லாமல், டபுள் மீனிங், கிளாமர், சண்டைக்காட்சி இல்லாமல் இவ்வளவு விறுவிறுப்பு கொடுப்பது தமிழ் சினிமாவுக்கே புதுசு.

தமிழ் சினிமா வேறு திசைக்குப் பயணப்படுவது இதில் கண்கூடு. பேய் பங்களாவில் கிடைத்து கொண்டு வந்த டாலரைக் காட்டும்போது நமக்கு வருவது திகைப்பு. நாடி ஜோதிடர் பதறி போன் செய்து, ‘‘உங்க நண்பர் நேற்றே செத்துப் போயாச்சு! வந்தது யாரு?’’ எனக் கேட்பது அச்சு அசல் ஹிட்ச்காக் பாணி. பளீரிட வைக்கும் திருப்ப மின்னல்!

நிறையவே மாத்தி யோசித்திருக்கிறார்கள். கேமரா திகிலூட்டும் வகையில் படம் முழுவதும் பயணிப்பதற்கு அரவிந்த் சிங் பொறுப்பு. அதைக் கம்பீரமாக தலைமேற்கொண்டு செய்கிறார் மனிதர். பின்னணி இசையில் சின்னா விறுவிறுப்பு! டிமான்ட்டி காலனியை உருவாக்கிய விதத்தில் பளிச்சென்று முன்னிற்கிறார் ஆர்ட் டைரக்டர் சந்தானம்!திகிலூட்டும் காமெடி காலனி!

- குங்குமம் விமர்சனக் குழு