எழுத்தாளர் ஷோபா சக்தி இப்போது ஹீரோ! உலக சினிமாவின் அங்கீகார மையமாக கேன்ஸ் பட விழாவைச் சொல்வார்கள். அந்த விழாவின் மிக உயரிய ‘தங்கப்பனை’ (Palme D’Or) விருதை ஷோபா சக்தி நடித்த ‘தீபன்’ எனும் பிரெஞ்சு திரைப்படம் பெற்றிருக்கிறது. சொந்த மண்ணிலிருந்து வேரோடு பிடுங்கப்படும் அகதிகளின் வலியைச் சொல்லும் கதை இது.
ஈழப்போர் முடிந்த சூழலில், முன்பின் அறிமுகமே இல்லாத ஒரு இளைஞனும், ஒரு பெண்ணும், ஒரு சிறுமியும் அகதிகள் முகாமில் சந்தித்து, ஒரு குடும்பமாக நடித்து, ஐரோப்பாவுக்கு புலம்பெயர்ந்து சென்று வாழ முயற்சிப்பதே கதை. புலம்பெயர்ந்த தமிழ் அகதிகளின் வாழ்வு சித்தரிக்கப்படும் ‘தீபன்’ படத்தில் நடித்ததற்காக ஷோபாவும், சென்னையைச் சேர்ந்த நாடகக் கலைஞரான காளீஸ்வரியும் கௌரவிக்கப்பட்டிருக்கிறார்கள். இந்த வேளையில் தன்முனைப்போடு அலைபேசி உரையாடலுக்கு முன் வந்தார் ஷோபா.
‘‘கேன்ஸ் விருதின் பெருமை பற்றிய மனச்சித்திரம் தங்களிடம் எப்படி இருக்கிறது?’’
‘‘நிச்சயமாக மகிழ்ச்சியான தருணம்தான். ஒரு நடிகனாக நான் பங்குகொண்ட திரைப்படம் விருது பெற்றது மகிழ்ச்சியென்றால், கடந்த 20 வருடங்களாக நான் தொடர்ச்சியாக எழுதி வந்த ஈழப்போராட்டம், புலம்பெயர் அகதி வாழ்வு குறித்த விடயங்களை சர்வதேசச் சமூகத்தின் பார்வைக்கு முன் வைத்தது கூட மகிழ்ச்சிதான். அப்படி ஒரு திரைப்படத்தில் நானும் இருந்திருக்கிறேன் என்பதிலும் எனக்கு நிறைவுதான்!’’
‘‘நடிப்பது வேடிக்கை இல்லை. முற்றிலும் புதிதான வேறு விஷயம். எப்படி இருந்தது?’’‘‘மிகுந்த அக்கறையுடன் இந்த முயற்சி நடந்தது. நிறைய பயிற்சி... இரண்டு மாத காலம் அவர்கள் பிடியில் இருந்தோம். கதாபாத்திரம், அதனுடைய வடிவம், செயல்படும் விதம் எல்லாமே எனது இயல்போடு இணைவது மாதிரி இருந்ததுதான் சுலபமாகப் போயிற்று. எங்களை இயக்குநர் கட்டிப்போடவில்லை.
இயல்பாக வெளிப்பட அனுமதித்தார். எங்கேயும் கட்டளையிடும் தொனி இல்லை. அப்படிப்பட்ட சூழலில் படபடப்பு வந்துவிடுமே தவிர, நடிப்பு கை வராது. நானே படத்தில் வருகிற கேரக்டராக வாழ்ந்தும் இருந்ததால் எனக்கு நடிப்பதில் பெரும் இடர்ப்பாடு எதுவும் வரவில்லை. அவர்கள் சினிமாவை அதன் நேர்த்தியோடும், கலைநயத்தோடும் செய்கிறார்கள். சொல்ல வந்ததைக் கொண்டு வருவதில் சூரர்களாக இருக்கிறார்கள். நமக்கு கைவந்த விதத்தில் கூட நடிக்கலாம். அது பொருந்திப்போனால் அதையும் ஏற்றுக்கொள்கிறார்கள்.
ஈழ யுத்தத்தின் அகதிகளான மூவரின் உளவியல் போராட்டங்களும், அவர்கள் யுத்தத்தின் விளைவுகளிலிருந்து தப்பிப்பதற்காக நடத்தும் நெடிய போராட்டமுமே ‘தீபன்’. சுருக்கமாகத்தான் சொல்லியிருக்கிறேன். இதன் வலியும், வேதனையும், பின்புலமும் படத்தில் நன்கு வெளிப்படும். சிறு வயதிலிருந்து கூத்திலும் நாடகங்களிலும் நடித்த அனுபவத்துடன், இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) எனும் மகா கலைஞனின் கண்கள் வழியாக நான் ‘தீபன்’ பாத்திரத்தை மனப்பூர்வமாக உணர்ந்தேன். ஒரு கதை சொல்லி என்ற முறையிலும் எனது ‘தீபன்’ பாத்திரத்தை கற்பனையில் விரித்துக்கொள்வதற்கு இலக்கியப் பயிற்சி துணை நின்றது!’’
‘‘தொடர்ந்து சினிமாவில் நடிக்கிற எண்ணம் இருக்கிறதா?’’
‘‘ஏற்கனவே ‘செங்கடல்’ படத்திற்கு ஸ்கிரிப்ட் எழுதிய அனுபவம் இருக்கிறது. சிறு கேரக்டரில் நடித்தும் இருக்கிறேன். இப்போதுதான் முழுமையாக ஒரு படத்தில் நடித்திருக்கிறேன். இனி வாய்ப்புகள் வருமா என்று எதிர்நோக்கி காத்திருப்பது எனக்கு வேலையும் இல்லை. கிடைக்குமா... கிடைக்காதா? என்ற கவலையும் கிடையாது. குறிப்பாக கமர்ஷியல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன். எனது எழுத்துத் திறன் என்னைக் கைவிடாத வரைக்கும் எனக்கு வேறு எது பற்றியும் கவலை கிடையாது!’’
‘‘ஈழப் பிரச்னையை விலையாக்கி விட்டீர்கள் என உங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?’’‘‘என்னங்க இது? ஈழப்பிரச்சனை எந்த சினிமாவிலும் சரிவர பேசப்படவில்லை எனவும் ஆதங்கப்படுகிறார்கள். பேசினாலும் ஆதங்கப்படுகிறார்கள். ஆதங்கப்படுபவர்கள்பட்டுக் கொண்டே இருக்கட்டும். எல்லோரையும் திருப்திப்படுத்திக் கொண்டே இருப்பது எனது பொறுப்பு கிடையாது.
எனக்கு தலையில் பெரிய சுமையும் நடப்பதற்கு நீண்ட தூரமும் இருக்கிறது. ஈழத்தில் எனது தலைமுறையும் பிந்தைய தலைமுறையும் யுத்தம் பெற்றெடுத்த குழந்தைகள்தான். இந்தத் தலைமுறையின் கூட்டு அனுபவமும், கூட்டு மனப்பதிவுமே ‘தீபன்’!’’
சினிமாவை சுவாசிக்கிறார்கள்!
காளீஸ்வரியின் பேச்சு தடங்கலற்ற கம்பீரம் கொண்டிருந்தது. சென்னையின் முக்கியமான தியேட்டர் நடிகையான காளிக்கு ‘தீபன்’தான் முதல் சினிமா. இதில் முக்கிய பாத்திரம் ஏற்றதே அவருக்கு கனவு போலிருக்கிறது.‘‘சில வேண்டிய நண்பர்கள் மூலமாகவும், நான் தேர்ந்தெடுத்து நடித்த நாடகக்குழுக்களின் அனுபவம் மூலமாகவும் எனக்கு இந்த வாய்ப்பு வந்தது. கடுமையான, முறையான, இயல்பான பயிற்சிக்குப் பிறகே படப்பிடிப்பு ஆரம்பமானது. அகதிகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறுவது, பிழைப்பிற்காக வெளிநாடுகளுக்குச் செல்வது எல்லாம் மனதிற்கு கஷ்டமானதுதான். இப்பொழுதெல்லாம் ஈழ அகதிகளுக்கு உள்ள பிரச்னையே எதை மறப்பது, எதை நினைப்பது என்பதுதான்.
எனக்கு இந்த கேரக்டர் கொடுக்கப்பட்டபோது, அதை இன்னும் பொறுப்பாக உணர்ந்தேன். அதற்கு உயிர் கொடுக்கவும், ஆன்மாவைத் தரவும் முடிவு செய்தேன். இந்த சினிமாவில் இருக்கிற மறுக்க முடியாத ஒரே விஷயம், உண்மை. இதில் எதுவும் பொய்யில்லை. கிட்டத்தட்ட நாலு வருடங்களுக்கு மேலாக அந்த ஸ்கிரிப்ட்டில் அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அதற்கு நியாயம் செய்ய வேண்டுமே என்ற கவலை மட்டுமே என்னிடம் இருந்தது.
இந்தப் படத்திற்காக எங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியைக் கொடுத்தது போல் உணர்கிறேன். உண்மையான உழைப்பிற்கும், அர்ப்பணிப்புக்கும் கிடைத்த பரிசே இந்த சினிமாவிற்கான அங்கீகாரம். கேன்ஸ் திரைப்பட விழா ஒரு திருவிழா போல காட்சி அளிக்கிறது. சினிமாவை சுவாசிக்கிறவர்களே அங்கே காணப்படுகிறார்கள். மேடையில் நின்றபோது, சில முக்கியமான இயக்குநர்களைக் கண்டதும் பெரிய கனவு போல் இருக்கிறது. அடுத்ததும் இங்கே ஒரு படத்தில் நடிக்க முடியும் என நினைக்கிறேன்.
நான் நாடகத்தில் நுழைந்ததே ஆச்சரியம்... தற்செயல்தான். இந்தக் கதையில் என்னால் ஆனதைச் செய்துவிட்டேன் என்பதே எனது சந்தோஷமாக இருக்கிறது. நிர்மலமான மனதோடு, நடிகையாக, மனுஷியாக இதில் வாழ்ந்தது மட்டுமே எனது இப்போதைய நிறைவு. தமிழ் மக்கள் ‘தீபன்’ பார்க்கிற நாளுக்காகக் காத்திருக்கிறேன்!’’
- நா.கதிர்வேலன்