அழியாத கோலங்கள்



இடதுசாரிகள் விஞ்ஞானம் சார்ந்து Scientific Spontaneism என்பார்கள். நம் இந்தியப் பண்பாட்டுத் தமிழில் அதை ‘தான்தோன்றித்தனம்’ என்று கூறலாம். உதாரணத்துக்கு, என் அப்பா என் நாத்திக சிந்தனையைச் சுட்டிக் காட்டி, எனக்கு ‘தான்தோன்றிப் பயல்’ என்று பட்டம் அளித்திருந்தார்.

நம் தெருக்களில் தோன்றும் திடீர் பிள்ளையார்களையும் ‘தான்தோன்றி’ என்பார்கள். அதை இடது சாரிப்படி, Religious Spontaneism எனலாம். நமது மறைந்த தோழி சில்க் ஸ்மிதாவை ‘தெய்வீகமற்ற - காதல் தான்தோன்றி’ என்றும் விவரிக்கலாம்.

 நான் சில்க் ஸ்மிதாவின் நதி மூலம் தெரிந்த நண்பன். ‘வண்டிச்சக்கரம்’ படத்தில் அவர் ‘சிலுக்கு’ என்ற பாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர். இன்றைய இளைஞர்களுக்கு ஒருவேளை தெரியாமல் இருக்கலாம்!  அன்று, ‘வா மச்சான் வா வண்ணாரப்பேட்டை’ என்ற பாடலைக் கண்ட, கேட்ட ஆண்களுக்கெல்லாம் உள்ளம் சிலிர்த்திருக்கும். ‘மூன்றாம் பிறை’ படம் வெளிவந்த பிறகு ஒருமுறை ஸ்டூடியோவில்  கமலைச் சந்திக்கச் சென்ற என் எழுபத்தைந்து வயது தந்தையார், அப்போது அங்கு இருந்த சிலுக்கை பேட்டி கண்டிருக்கிறார்... எனக்கு ‘குங்கும’த்தில் படித்த ஞாபகம் இருக்கிறது.

என் தந்தையார் ஸ்மிதாவிடம் கேட்ட கேள்விகளில் ஒன்று... ‘‘ஏம்மா... எங்க காலத்தில் மகாத்மா காந்தி உன்னைப் போலத்தான் ஒரு முழத் துண்டை முழங்கால் தெரியற மாதிரி கட்டிக்கிட்டு எல்லாரையும் தன் காலிலே விழச் செய்தார். நீயும் அப்படிச் செய்துவிட்டாய். அது என்ன ரகசியம்? சொல்லேன்!’’ அந்த நேர்காணலில் சில்க் ஸ்மிதா, ‘‘கமலுடன் நிறைய நடித்திருக்கிறேன்... உங்கள் மகன் பெரியவர் சாருஹாசனைச் சந்தித்ததில்லை’’ என்றாராம்.

அது நான் ‘உதிரிப் பூக்கள்’ படத்தில் நடித்து முடித்துவிட்டு, திரும்ப சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் கறுப்பு இறக்கைகள் கொண்ட வௌவால் போல் அங்கி அணிந்து அலைந்த நேரம். ஆனால் சில்க் என்னை நன்கு அறிவார். ‘நன்றாகத் தெரிந்தும் சில்க் ஏன் என்னைத் தெரியாது என்று சொல்ல வேண்டும்?’ சாட்சிக்கூண்டில் இருப்பவரிடம் உண்மையை வாங்குவது போல என் அப்பா சில்க்கிடம் விசாரிக்கத் தயாரானார். நான்தான், ‘‘அது சிதம்பர ரகசியம்... கேட்காதீர்கள்!’’ என்று சொன்னேன். அந்த ரகசியம் ஒரு குட்டிக் கதை... இன்று சொல்வதில் தவறு இல்லை.

2930 எண் கொண்ட என்னுடைய அம்பாசிடர் கார் ஒரு ‘பிரபல நடிகை’ வீட்டு வாசலில் மூன்று இரவுகள் நின்று பகலில் மறைந்திருக்கிறது. கோடம்பாக்கம் தாங்குமா? கமல்ஹாஸனின் அண்ணன் சாருஹாஸன் புகழ், மூன்றே நாட்களில் கோலிவுட்டில் ஒரு படம் கூட நடிக்காமல் பரவி விட்டது. என் நண்பர் ஒருவர் அதை இரவல் வாங்கிப் போய் செய்த விபரீதம் அது. பெரும் தொழிலதிபரான அந்த நண்பருக்கும் அந்த பிரபல நடிகைக்கும் ரகசியத் திருமணம் என செய்தி. அந்த நடிகை யாரென்று எங்களிடமே அவர் சொல்லவில்லை.

எனக்கொரு கிரிமினல் யோசனை. ஒரு சினிமா பத்திரிகை உதவி ஆசிரியரின் உதவியோடு அந்தப் ‘பிரபல நடிகை’ என்று பெயர் சூட்டப்பட்டவரிடம் ஒரு பேட்டி எடுக்க நேரம் வாங்கினேன். ஒரு நிருபரும் போட்டோகிராபரும் என்னுடன் அனுப்பி வைக்கப்பட்டார்கள்.  அன்று அந்த வீட்டில் எங்களை வரவேற்று உட்கார வைத்தது ஒரு அழகிய குட்டிப் பெண். ‘‘அம்மா மாடியில் மேக்கப் செய்துகொண்டு இருக்கிறார்...

கொஞ்ச நேரத்தில் வந்து விடுவார்!’’ என்று சொல்லிப் போனாள். சில நிமிடங்களில் திரும்பக் கீழே வந்து, ‘‘அம்மாவுக்கு திடீரென்று தலைவலி... உடம்பு சரியில்லை என்று சொல்லச் சொன்னார்கள்!’’ என்றாள். நாங்கள் ‘‘காத்திருக்கத் தயார்!’’ என்றதும், அந்தக் குட்டிப் பெண்ணே ‘‘நாளைக்கு வச்சுக்கலாமே!’’ என்று சொல்லிப் பார்த்தாள். நாங்கள் அசையவில்லை.

மறுபடி மேலே போய்விட்டு வந்தவள் அழுதுகொண்டே, ‘‘அம்மா என்னை அடிக்கிறாங்க... நீங்க போயிடுங்க! அவுங்க வர மாட்டாங்க!’’ என்றாள். அந்தப் பெண்ணின் அழுகையில் பரிதாபம் அடைந்து, நாங்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு வந்துவிட்டோம்.  தவறு என்னுடையதுதான். இந்த சாருஹாசனை யாருக்கும் தெரியாவிட்டாலும், கமல்ஹாசனின் அண்ணன்... தன் கணவரின் நண்பர் என்பது அந்த நடிகைக்குத் தெரியாமலா இருக்கும். அன்று எங்களை அழுதே விரட்டிய 16 வயது குட்டிப் பெண்தான் மேடம் சில்க்.

இது நடந்தது 1975ம் ஆண்டில். பின்னால், ‘அதர்வம்’ என்ற மலையாளப் படத்தில் சேர்ந்து நடித்தபோது சில்க்கும் நானும் நண்பர்களானோம். அந்தப் படத்தின் தயாரிப்பாளர் திருமணத்துக்கு எனக்கும் சில்க்குக்கும் மட்டும் டிக்கெட் அனுப்பினார். விமானத்தில் செல்லும்போதுதான் சில்க்கிடம் கேட்டேன், இன்டர்வியூவில் என் தந்தையிடம் என்னைத் தெரியாது என்று சொல்லக் காரணம் என்னவென்று. அன்று அந்த நடிகை வீட்டில் நடந்த விஷயத்தை மறைப்பதற்காக சொன்ன தேவையில்லாத பொய் அது என அவரே ஒப்புக்கொண்டார்.

சில்க் மறைந்த அன்று கூட அவர் நடிக்க ஒரு நாளைக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுக்க தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் தயார். தேவையின்றி உயிரை மாய்த்துக்கொண்ட சில்க் ஸ்மிதா, ஒரு நல்ல உள்ளம்!குறிப்பு: இந்தக் கட்டுரையின் நாயகி சில்க்தான். அந்த நடிகை... அந்த ஆள்... என்று யாரையும் தேடாதீர்கள்!2930 எண் கொண்ட என்னுடைய அம்பாசிடர் கார் ஒரு ‘பிரபல நடிகை’ வீட்டு வாசலில் மூன்று இரவுகள் நின்று பகலில்  மறைந்திருக்கிறது. கோடம்பாக்கம் தாங்குமா?

(நீளும்...)

சாருஹாசன்
ஓவியங்கள்: மனோகர்