இனி போன்தான் உங்கள் பர்ஸ்!



மதுமிதா. வயது 25. கார்ப்பரேட் நிறுவன ஊழியை. ஆட்டோ சவாரி, தள்ளுவண்டி, பெட்டிக் கடை போன்றவற்றிற்குத் தவிர அவர் கடைசியாக எப்போது கரன்சி நோட்டை, செக் புக்கை, டெபிட் / கிரெடிட் கார்டைப் பயன்படுத்தினார் எனக் கேட்டால் புருவம் சுருக்கித் தீவிரமாய் யோசிக்கிறார்.

தினமும் பயணிக்கும் ரயில் டிக்கெட், வார இறுதியில் போகும் சினிமா டிக்கெட், மாதா மாதம் எலக்ட்ரிசிட்டி பில், அவ்வப்போது பயணிக்கும் டாக்ஸி, தீரும்போதெல்லாம் மொபைல் ரீசார்ஜ், சொந்த ஊருக்கு பஸ் டிக்கெட், ஷாப்பிங் செலவுகள், வெளியூரில் கல்லூரி பயிலும் தம்பிக்கு அனுப்பும் பணம் என எல்லாமே இன்று அவர் செய்வது மொபைல் பேமென்ட்டாகவே. அதாவது தன் ஸ்மார்ட் போனின் வழியாகவே அவர் பணத்தைச் செலவழிக்கிறார்!

பர்ஸ் நிறைய பணமும், டெபிட், கிரெடிட் கார்டுகளும் இனி பிதுங்கி வழிய வேண்டிய அவசியமில்லை. இனி உங்கள் போன்தான் உங்கள் பர்ஸ்! ஸ்மார்ட் போன்களின் வருகைக்குப் பிறகு கடந்த ஐந்தாண்டுகளில் உலகம் முழுக்க பாரம்பரிய பணப்பரிவர்த்தனை முறைகள் மெல்லக் காலாவதியாகி வருகின்றன. மொபைல் பேமென்ட் காட்டுத்தீ போல், எபோலா தொற்று போல், நடிகையின் செல்ஃபி போல் வேகமாய்ப் பரவி வருகிறது.

டெபிட் கார்டுகள், கிரெடிட் கார்டுகள், ஆன்லைன் பேங்கிங், மொபைல் பேங்கிங் என எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிட்டு மொபைல் பேமென்ட் முறைகள் அவ்விடத்தைப் பிடிக்கத் துவங்கி உள்ளன.  கரன்சி / செக் / கார்டு எதுவும் இல்லாமல் செல்பேசியின் வழியாகவே பணத்தைச் செலுத்துவதுதான் மொபைல் பேமென்ட் எனப்படுகிறது. இதில் முக்கிய விஷயம், இரு தரப்பிலுமே கார்டு எண் அல்லது வங்கிக் கணக்கு விபரங்களை பரஸ்பரம் பகிர்ந்து கொள்ள வேண்டியதில்லை.மொபைல் பேமென்ட் என்பது நான்கு வெவ்வேறு முறைகளில் செயல்படுகிறது.

ஒன்று எஸ்எம்எஸ் மார்க்கம். உங்கள் மொபைல் நிறுவனம் குறிப்பிட்ட சில நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்திருக்கும் (உதாரணமாக, மின்சார வாரியம்). நீங்கள் மொபைல் பேமென்ட் வழி மின் கட்டணம் செலுத்த முதலில் பதிவு செய்து கொள்ள வேண்டும். பிறகு மாதா மாதம் மின் கட்டணத்தை செலுத்த குறிப்பிட்ட எண்ணுக்கு குறிப்பிட்ட சொல்லுடன் தொகை குறிப்பிட்டு எஸ்எம்எஸ் அனுப்பினால் போதும். மொபைல் நிறுவனம் மின்வாரியத்தின் கணக்குக்கு உங்கள் பெயரில் தொகையைச் செலுத்தி விடும். அடுத்த மாத மொபைல் பில்லில் அந்தத் தொகையைச் சேர்த்து விடுவார்கள் (ப்ரீபெய்ட் எனில் உங்கள் பேலன்ஸில் கழித்துக் கொள்வர்!).

அடுத்தது, இதிலேயே இன்னும் கொஞ்சம் நேரடியான பணம் செலுத்தும் முறை. எஸ்எம்எஸ் அனுப்புவதற்குப் பதிலாக குறிப்பிட்ட சேவையாளரின் (உதா: பேருந்து முன்பதிவு) தளத்துக்குப் போய் மொபைல் பேமென்ட் முறையைத் தேர்ந்ததும், இன்னார்தான் பணம் செலுத்துகிறார்கள் என்பதை உறுதிப்படுத்த ஒரு முறை மட்டுமே செல்லுபடியாகும் கடவு எண் (OTP - One Time Password) ஒன்று உங்கள் செல்பேசி எண்ணுக்கு எஸ்எம்எஸ் அனுப்பப்படும்.

அத்தளத்தில் இதை உள்ளிட்டால் கட்டணம் செலுத்தப்பட்டு விடும். பிறகு முந்தைய முறையைப் போலவே உங்களிடமிருந்து மொபைல் நிறுவனம் பணத்தை வசூலித்துக் கொள்ளும்.மூன்றாவது முறை, ஆன்லைன் வாலட். அதாவது இணைய பர்ஸ்! உங்கள் வங்கிக்கணக்கு எண் அல்லது கிரெடிட் கார்டு தொடர்பான தகவல்களை இந்த ஆன்லைன் வாலட் நிறுவனத்திடம் கொடுத்து ஒரு கணக்கைத் துவக்கிக் கொள்ள வேண்டும்.

பிறகு வலைத்தளம் / செயலி மூலம் பணம் செலுத்த வேண்டி வந்தால் அங்கே இந்த ஆன்லைன் வாலட்டைத் தேர்ந்தால் போதுமானது. இதிலும் ஒரு முறை மட்டுமே செல்லு படியாகும் கடவு எண்ணோ, உங்களுக்கு மட்டுமே தெரிந்த பின் நம்பரோ (PIN) உள்ளிட்டால்தான் பணப்பரிவர்த்தனை பூர்த்தியாகும். இன்று மொபைல் பேமென்ட்டில் மிகப் பிரபலமாக இருக்கும் முறை இதுவே. பேபால், கூகுள் வாலட், பே டிஎம் என பல நிறுவனங்கள் இதில் ஈடுபட்டு வருகின்றன.

நான்காவது, மொபைல் பேமென்ட் முறை. கிட்டத்தட்ட உங்கள் மொபைலை கார்டு போலவே பயன்படுத்தும் முறை இது. ஆன்லைனில் அல்லாமல் நீங்கள் பணம் செலுத்த நேரும் சூழல்களில் இம்முறை பயன்படும். இதிலும் மேற்சொன்ன முறை போல் முன்கூட்டியே உங்கள் வங்கிக் கணக்கை அல்லது கிரெடிட் கார்டை பதிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.

கடைக்காரர், கிரெடிட் கார்டு தேய்க்க கடைகளில் வைத்திருக்கும் இயந்திரத்திற்கு ஒப்பான ஒரு சிறு கருவியை வைத்திருப்பார். நீங்கள் தொகை செலுத்த வேண்டுமெனில் அந்த இயந்திரத்தின் அருகே NFC (Near Field Communication) தொழில்நுட்பம் கொண்ட உங்கள் ஸ்மார்ட் போனைக் காட்ட வேண்டும். அது இன்ன கணக்கு எனப் புரிந்து கொண்டு அதில் தொகையை எடுத்துக் கொள்ளும். இதிலும் கூட சில இடங்களில் பாதுகாப்புக்காக PIN உள்ளிட வேண்டி இருக்கும்.

ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்

ஃபோன்களில் நீண்ட காலமாகவே NFC வசதி இருந்தாலும் (கூகுள் வாலட் இந்த முறையிலும் செயல்படும்) ஐஃபோன் 6-ல் ஆப்பிள் பே என்ற பெயரில் இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டதும் தான் இந்த மொபைல் பேமென்ட் முறை பரவலாய்ச் சூடு பிடித்திருக்கிறது. இது PINக்குப் பதிலாக கைரேகையைப் பயன்படுத்துவதால் கூடுதல் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் சாம்சங் பே என்ற பெயரில் களத்தில் குதித்திருக்கிறது.

சென்ற ஆண்டு மட்டும் சுமார் 50 ஆயிரம் கோடி டாலர் பணப் பரிவர்த்தனை மொபைல் பேமென்ட் மூலம் நடந்துள்ளது. அமெரிக்காவில் இதன் வளர்ச்சி அசுரத்தனமாக இருக்கிறது. இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஒப்பீட்டளவில் அத்தனை வேகமில்லை என்றாலும் சீரான அதிகரிப்பு இருக்கிறது. மொபைல் பேமென்ட் என்றதும், இது படித்தவர்கள், நகர்ப்புறத்தவர்களுக்கானது என்ற நினைப்பு எழக்கூடும். ஆனால் உண்மையில் பாமரர்கள், கிராமப்புறத்தவருக்கு இதன் பயன் இன்னும் கூடுதலானது.

வங்கிக் கணக்கு, கிரெடிட் கார்டு விபரங்களை சில்லறை வணிகங்களில் ஈடுபடுகையில் அனாவசியமாய்ப் பகிரத் தயங்குபவர்களுக்கு இது பாதுகாப்பானது. நாம் யாருக்கு பணம் செலுத்துகிறோமோ அவருக்கு நம் வங்கிக் கணக்கோ, கிரெடிட் கார்டு பற்றியோ தெரியாது. அதனால் மோசடிகள் தவிர்க்கப்படும். உலகில் இன்று வயது வந்தோரில் பாதிப் பேருக்கு வங்கிக் கணக்கு இல்லை. ஆனால் இவர்களுக்கும் தினசரி பணப் பரிவர்த்தனை என்பது அவசியமானது. இன்று அது முழுக்க கரன்சி நோட்டுகளை நம்பியே இருக்கிறது. ஆனால் தொலைதூரப் பரிவர்த்தனைகளுக்கு அது உதவாது.

இங்கேதான் மொபைல் பேமென்ட் விஸ்வரூபம் எடுத்துக் கொண்டிருக்கிறது. வங்கிகளே இல்லாத கிராமங்களிலும் ஸ்மார்ட் போன்கள் நுழைந்துவிட்டன. இன்னொருபுறம் வங்கிகள் வர முடியாத தூரப் பிரதேசங்களில் மொபைல் பேமென்ட் மூலமே சில தனியார் நிறுவனங்கள் வங்கிக் கணக்குகள் தொடங்கித் தருவதும் நடக்கிறது. இன்று சென்னையில் பணிபுரியும் ஒரு கூலித் தொழிலாளி, பீகாரில் இருக்கும் தன் மனைவிக்கு மொபைல் பேமென்ட் மூலம் மாதா மாதம் பணம் அனுப்ப முடிகிறது.

Mobile Payment Forum of India (MPFI) என்ற அமைப்பு இந்தியாவில் மொபைல் பேமென்ட் குறித்த விதிமுறைகளை உருவாக்கி நெறிப்படுத்தி வருகிறது. கறுப்புப் பணம் போன்றவற்றிற்கு இது வழிகோலி விடக்கூடாது என்பதற்காக.இன்று உலகம் முழுக்க 130 கோடி கிரெடிட் / டெபிட் கார்டுகள் இருக்கின்றன. ஆனால் 500 கோடிப் பேர் செல்போன் வைத்திருக்கின்றனர். மொபைல் பேமென்ட்டின் எளிமையும் சுலபத்தன்மையும் அவர்களை வசீகரிக்கிறது. ஆனால் இதன் பாதுகாப்பு குறித்த சந்தேகங்களும் இன்னொரு பக்கம் இருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகள் மொபைல் பேமென்ட் யுகமாய் அமையும். எங்குமே கரன்சி நோட்டுகளோ, கார்டுகளோ அவசியப்படாது என்பதால் இன்னும் கொஞ்ச நாட்களில் பர்ஸ் என்ற விஷயமே மியூசியத்துக்குப் போய்விடக்கூடும். டெக்னாலஜி வளர்ச்சியின் புயல்வேகத்தில் பல பொருட்கள் காணாமல் போனது போல, மொபைல் பேமென்ட் ஒருநாள் கிரெடிட் கார்டையும் கொன்றிடக் கூடும். யார் கண்டார்! 
       
இன்று சென்னையில் பணிபுரியும் ஒரு கூலித் தொழிலாளி, பீகாரில் இருக்கும் தன் மனைவிக்கு மொபைல் பேமென்ட் மூலம் மாதா மாதம் பணம் அனுப்ப முடிகிறது.

சி.சரவணகார்த்திகேயன்