சீஸன் சாரல்



பார்த்தசாரதி ஸ்வாமி சபையில் அருணா சாய்ராம் கச்சேரி. உள்ளே நுழைய முடியாதபடி, வழி நெடுக ரசிகர்கள் வெள்ளம். ‘ராரா தேவாதி தேவா’ என்று அருணாவின் குரலில் பாட்டு ஒலித்தது. வெளியில் டிக்கெட் கிடைக்காமல் நின்று கொண்டிருந்த பல ரசிகர்கள், ‘ராரா’ என்று அருணா கூப்பிட்டும் அரங்கிற்குள் வரமுடியாமல், வெளியில் காட்சிகளை அளித்த எல்.சி.டி திரையிலாவது கச்சேரியை ரசித்து விட்டுப் போகலாம் என்று சமாதானப்படுத்திக் கொண்டனர்.

‘ஏலநிதய’ என்ற அடாணா கீர்த்தனையில், ‘ராரா தேவாதி தேவா’ என்ற தியாகராஜர் பாடல். முப்பத்து முக்கோடி தேவர்களையும், ‘‘ராமனின் அழகைப் பார்க்க வாருங்கள்’’ என்று தியாகராஜர் அழைத்த அந்தப் பாடலை, வெளியே நடக்கும் பிரளயம் தெரியாமல் அருணா சாய்ராம் பாடி கச்சேரியை ஆரம்பித்தார். அன்றைய கச்சேரியில் எம்.ஏ.கிருஷ்ணஸ்வாமி வயலின், சாய்கிரிதர் மிருதங்கம், எஸ்.வி.ரமணி கடம்.

ஆண்டாள் எழுதிய ‘மாயனை’ திருப்பாவை அருணாவின் குரலில் களை கட்டியது. சுபபந்துவராளி ராக ஆலாபனையில் ரசிகர்கள் மெய்மறந்து இருந்தனர். ஒரு நிமிடம் மின்சாரம் ஹாலில் போய் வந்தது கூட யாருக்கும் தெரியவில்லை... அருணாவின் ‘பவர்’ஃபுல் குரல் வளத்தினால்! கிருஷ்ணஸ்வாமி வயலினில் குழைந்தார். சாய்கிரிதர் மிருதங்கம் பற்றி சொல்லியே ஆக வேண்டும். ஆஹா... என்ன கை! பரம சுகம். ‘ஸ்ரீசத்யநாராயணம்’ பாட்டுக்கு வாசித்த அழகு சத்தியமான லய சுத்தம்.

அருணாவின் அந்த அழுத்தக் குரலில், ‘ப்ரோவ வம்ம’ மாஞ்சி ராக கீர்த்தனை, ஒன்ஸ்மோர் கேட்கத் தோன்றியது. காம்போதி ராகத்தை மெயினாகப் பாடி, ‘கொனியாட’ கீர்த்தனையைக் கேட்டபோது, வீணை குப்பையரின் மேதாவிலாசம் வெளிப்பட்டது. காளஹஸ்தீஸ்வரர் மேல் எழுதப்பட்ட இந்த விசேஷமான கீர்த்தனையைக் கேட்ட ரசிகர்கள், சாப விமோசனம் பெற்றது போல் லயித்திருந்தனர்.

ரமணி கடத்துடன், சாய்கிரிதர் மிருதங்கம், நாதத்தில் சரண். மூன்று மணி நேரத்து பூஜை முடிந்து, திரை விலகி ஆராதனையின்போது மக்கள் பரவச பக்தி யில் கோஷமிடுவதுபோல், அருணாவின் அபங்கத்தில் ரசிகர்கள், ‘விட்டல... விட்டல...’ என்று கூடவே பாடி ஐக்கியம் ஆனார்கள்.

தியாக பிரம்ம கான சபையின் சார்பில் வாணி மஹாலில் சஞ்சய் சுப்ரமணியன் கச்சேரி. பேகடா வர்ணம் தொடங்கி, கடைசி கமாஸ் துக்கடா வரைக்கும், மூன்றரை மணி நேரம் ஒரே மாதிரியான 1000 வாட் பவர் கச்சேரி. சஞ்சயின் ஞானம், உழைப்பு, கற்பனை எல்லாம் அந்த ஒரு கச்சேரியில் பரிபூரணமாகத் தெரிந்தது. கூடவே வரதராஜன் வயலின் சேர்ந்தது 2000 வாட்! அந்த வயலினை வாங்கிப் பார்க்க வேண்டும்... அப்படி ஒரு சுகத்தை எங்கு ஒளித்து வைத்திருக்கிறார் என்று! எல்லாம் கை வண்ணம்.

‘ஆழி மழைக் கண்ணா’ வராளி ராக கீர்த்தனை கேட்டு, ஹாலில் நாத வெள்ளத்தில் மிதந்தனர் ரசிகர்கள். ‘கமலாம்பாம்’ நவாவர்ண கீர்த்தனை... ஆபோகியில் மைசூர் ஸதாசிவராவ் கீர்த்தனை... தோடி ராகத்தில் ‘தேவாரம்’ என்று சஞ்சய் பாடப் பாட, அர்ஜுன் கணேஷ் கூடவே வாசித்ததைக் கேட்டபோது, அர்ஜுனனே சஞ்சய்க்கு தேரோட்டியது போல் இருந்தது நிச்சயம். கோபாலகிருஷ்ணன் கஞ்சிராவில் சேர்ந்து வாசித்தார்.

சஞ்சய்க்கு கோபாலகிருஷ்ணனும் அர்ஜுனனும் ‘லயம்’ என்ற தேருக்கு சாரதியாக அமைந்தது விந்தை. சஞ்சயின் நாட்டக்குறிஞ்சி ராகம் கேட்கக் கேட்க ருசியோ ருசி. ‘ஜகதீச’ கீர்த்தனை கேட்டு ரொம்ப நாளாச்சு. ராகம் - தானம் - பல்லவிக்கு சஞ்சய் ஒரு கௌரவம் கொடுத்து, கச்சேரிக்கு கச்சேரி ரசிகர்களைக் கிறங்க வைப்பது உண்மை. பந்துவராளி ராக ஆர்.டி.பி அன்று கேட்டவர்கள் கொடுத்து வைத்தவர்கள்.

மியூசிக் அகாடமியில் சௌம்யா கச்சேரி. ஒரு ஞானமான, அமைதியான, ஆழமான பாட்டு. வயலின் டாக்டர் நர்மதா, மிருதங்கம் நெய்வேலி நாராயணன், கடம் உடுப்பி ஸ்ரீதர், பையனூர் கோவிந்த பிரசாத் மோர்சிங். மேடை நிறைந்திருந்தது. சாவேரி ராக வர்ணம், ‘ப்ரோசேவா’ ஸ்ரீரஞ்சனி கீர்த்தனை கச்சேரியை களை கட்டச் செய்தது. காம்போதி ராகம் சௌம்யாவின் ஞானத்தில் மிளிர்ந்தது.

நர்மதா வயலின் நாதம் இரட்டைப் பாட்டு போல இருந்தது. ‘மா ஜானகி’ கீர்த்தனை தியாகராஜரின் கற்பனைக்கு ஒரு இமாலய சான்று. ‘ஒரு ஜானகியை மணந்ததால்தானே உனக்குப் பெருமை’ என்று ராமரைப் பார்த்துக் கேட்கும் தைரியம் யாருக்கு வரும்? ‘என்ன தவம் செய்தனை - இப்படி கண்ணன் உன் வயிற்றில் பிறந்ததற்கு’

என்று யசோதையைப் போற்றிய சிவனின் கற்பனையும் ஞாபகம் வருகிறது. அன்று சௌம்யா பாடிய தோடிக்கு கோடி தர வேண்டும். ‘கார்த்திகேய காங்கேய’ கீர்த்தனையை சௌம்யா பாடியபோது, நெய்வேலி நாராயணன் வாசித்த அழகு சொல்லி மாளாது. ஞானமான கச்சேரி கேட்ட திருப்தி.

அதே மியூசிக் அகாடமியில் கே.காயத்ரி கச்சேரி. அருமையான குரல். நல்ல பாடாந்திரம். தோடி அடதாள வர்ணம், ‘ஸாகேத நகர’, ‘ஸாரஸதள’, ‘நீ பாதமுல’ என்று எல்லாம் மடியான கீர்த்தனைகள். பத்மாசங்கர் வயலின், பி.சிவராமன் மிருதங்கம், உடுப்பி பாலகிருஷ்ணன் கடம். வாசஸ்பதி ராகம் பாடி, தானம் முடித்து, த்விதாள அவதான பல்லவியைப் பாடிய காயத்ரியின் மேதா விலாசம், உழைப்பு எல்லாம் அவையோரை மெய்சிலிர்க்க வைத்தது.

வளர்க காயத்ரியின் உழைப்பு! சிவராமனின் பொடி சொல், நடை எல்லாம் ஹைலைட்ஸ்.பிரம்ம கான சபையில் இளம் கலைஞர் கோகுலகிருஷ்ணன் பாட்டு. நல்ல தைரியம், குரல் வளம், லயம். ‘சோபில்லு’, ‘ராமசந்த்ரம் பாவயாமி’, ‘சேஸினதெல்ல’ போன்ற கீர்த்தனைகளைப் பாடிய கோகுலகிருஷ்ண னுக்கு நல்ல எதிர்காலம் உண்டு இசை உலகில்.

படங்கள்: புதூர் சரவணன்

பாபனாசம் அசோக்ரமணி