மீகாமன்



கொஞ்சமும் இரக்கம், பயம், இல்லாமல் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தும் கூட்டத்தை அடியோடு அடித்துத் துவைக்கிற கதை 'மீகாமன்’.எங்கும் தென்படாத, கொண்டாட்டங்களில் இஷ்டம் வைக்காத, கடத்தல் மன்னன் அஷுதோஷ் ராணாவை பிடிக்கிற கதைதான்.

இதை துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்து விடலாம். ஆனால், அவர்களின் வேகம், கடத்துவதில் விவேகம், த்ரில், மற்றவர் பயத்தை தங்கள் பலமாய் பயன்படுத்துகிற திறமை... ‘சுடச்சுட’ படம் விரைவதில் முக்கிய பங்கு இயக்குநர் மகிழ் திருமேனிக்கே! கொஞ்சமும் அசந்து விடாமல் சீட்டு நுனியில் உட்கார வைக்க முடிந்த அம்சத்திற்கே அவருக்குப் பாராட்டு!

பெரும்பாலும் கடத்தல் உலகத்தின் ‘ஒழுக்கங்களை’ விரிவாக எடுத்துரைக்கிறார்கள். சதா சிகரெட்டில் புகையாத, இரண்டு பக்கமும் இரண்டு பெண்களின் தோளில் கை போட்டுக்கொண்டு வராத, போதையில் மிதக்காத புது வில்லன் அற்புதம்! உதடு சுளிப்பான சிரிப்புக்குக்கூட அஷுதோஷ் ராணாவிடம் தவம் கிடக்க வேண்டியிருக்கிறது. யாராவது திடுமென போட்டுத் தள்ளிவிட்டால் என்ன செய்வது என இரண்டு நாள் தூக்கத்தோடு திரிகிற ஏராளமானவர்களை இதில் அசலாகக் காண்பித்திருக்கிறார் திருமேனி!

கடத்தலுக்கான ஆபரேஷன், திட்டம், பிளானிங் லெவல், ஃபீல்டு வொர்க், இன்ஃபார்மர்ஸ், ஏஜென்ட்டுகள், போலீஸ், கறுப்பு ஆடுகள் என வகை பிரித்து அடுக்குவதிலேயே காதல், ஆட்டம், பாட்டம், சென்டிமென்ட்களுக்கு வழி வைக்காமல் ஆக்ஷனில் அணிவகுக்கிறார் டைரக்டர்.அதனால்தான் இது ஆர்யாவுக்கு புதுப்படமாக அமைந்துவிட்டது. உடற்கட்டுக்கு ஏற்ற ஆக்ஷன் கதையில் அட்டகாசமாக மனம் அள்ளுகிறார் ஆர்யா.

அதிகம் பேசாமல் வேகம் காட்டும் ஆர்யா, ஹன்சிகாவோடு சேர்ந்திருக்கும்போது கூடவா அத்தனை ‘உர்’ என இருக்க வேண்டும்? போலீஸ்காரனாகவே இருந்துகொண்டு சத்தம் காட்டாமல் வில்லனின் ‘மூவ்’களை முறியடித்து விட்டுச் செல்லும் மதியூகமும், பதற்றப்படாமல் பேசிக்கொண்டு ராணா கொடுக்கும் அடாவடியும்... சரி காம்பினேஷன். அடுத்த சில படங்களுக்கு ராணாதான் தொந்தரவு வில்லன் என கச்சிதமாகத் தெரிகிறது. அடுத்தடுத்து தமிழ் ஹீரோக்களை வரிசையாக எதிர்ப்பார் என எதிர்பார்க்கலாம்.

சும்மா ஒப்புக்கு சப்பாணியாக வந்து போகிறார் ஹன்சிகா. வேகமெடுத்து ஓடுகிற படத்தில் அவரை நாமும் எதிர்பார்க்கவில்லை. அவரும் இந்தக் கதைக்கு நாம் முக்கியமில்லை என தீர்மானித்துவிட்டார் போல.

கொஞ்சமாய் பேசி, ஒரு பாடலுக்கு சந்தோஷப்படுத்தி, கொஞ்சம் அரைகுறையாய் பேசி விட்டு மறைந்து போய் விடுகிறார்.இந்தப் படத்திற்கு பாட்டு கூட அவசியமில்லை என்றாகிவிட்ட நிலையில், இரண்டு பாடல்களோடு விடைபெறுகிறார் எஸ்.எஸ்.தமன். ஆனால், காய்ச்சி எடுக்கும் ஆக்ஷனுக்கு விறுவிறுப்பு பின்னணி தந்து டெம்போ ஏற்றியதில் அவருக்கு எக்கச்சக்க ஹிட்ஸ்!

ரணகளமான அதிரடிகள் பறக்கும் தோட்டாக்களில், பதறி அடிக்கும் ஆக்ஷனில், சதீஷ்குமார் கேமரா அதகளம் பண்ணுகிறது. பல படங்களில் பார்த்த பின்னி மில்தான்... ஏதோ வேறு மாதிரி தோற்றத்தில் பயமுறுத்துகிறது. நிமிஷத்திற்கு நிமிஷம் சுட்டுக்கொண்டு, ரத்தம் பட்டுக்கொண்டு, ஆட்கள் சரிந்துகொண்டே இருந்திருக்க வேண்டுமா? ரத்த வாடையை கொஞ்சம் குறைத்திருக்கலாம். ஆக்ஷன் ரசிகர்களுக்கு ரகளையான விருந்து!

- குங்குமம் விமர்சனக் குழு