கயல்



வெள்ளையாய் நாடு திசையெல்லாம் பறந்து திரிந்து பார்க்க ஆசைப்படும் இரண்டு நண்பர்கள். அவர்களில் ஒருவருக்கு வருகிறது ‘கண்டதும் காதல்’. அதன்பின் இவர்களின் நட்பு வளையத்துக்கு நேரும் சோதனைகளும், அதையும் தாண்டி சந்திரன் - ஆனந்தி காதலில் ஜெயித்தார்களா என்பதும்தான் மீதிக் கதை. இந்தத் தடவை ‘மைனா’ பிரபு சாலமன் கொடுத்திருப்பது இனிமை கொஞ்சும் அசல் காதல் க(வி)தை.

ஆறு மாதம் உழைப்பு, ஆறு மாதம் ஊர் சுற்றுதல் என இணைந்து பறக்கிற நண்பர்கள் சந்திரன் - வின்சென்ட். ரொம்பவும் இயல்பில் இருவரும் துளிர் விடுகிறார்கள். களையான முகத்தில் உருகும் காதலை வழிய விடுகிறார் சந்திரன்.

வெளியே சுற்றித் திரிந்து வாழ்க்கையைக் கற்றுக்கொள்ளும் அழகும், ஒன்றிரண்டு நிமிஷக் காட்சிகளுக்காக இந்தியாவையே ஒரு சுற்று சுற்றி இருக்கும் அக்கறைக்கும் இயக்குநர் பிரபு சாலமனுக்கு பூங்கொத்து! ‘அட, நாமே இப்படிப் பல கட்டங்களை வாழ்வின் பரபரப்பில் தவறவிட்டு இருக்கிறோமோ’ என்ற நினைவு வராமல் இல்லை. கூண்டுக்கிளிகளாய் இருக்கும் மனிதர்களிடம், ‘கொஞ்சம் வெளியே வந்து அலைந்து பாருங்கடா’ என்பதாகப் படம் சொல்லும் செய்தி அருமை!

படம் முழுக்க சந்திரனும் வின்சென்டும் நிறையப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். ரசிக்க முடிகிறது என்றாலும் சற்றே நீட்டி முழக்குவதை டைரக்டர் குறைத்திருக்கலாம். வேடிக்கையாய் அலைந்து திரிந்தவர்கள், வீட்டை விட்டுப் பறந்து போகும் ஜமீன்தார் வீட்டுப் பெண்ணை வண்டியேற்றி விடுகையில் வருவது சரியான ட்விஸ்ட். அந்த ட்விஸ்ட்டுக்குப் பிறகு கதை எங்கேயும் நிற்காமல் பரபரக்கிறது.

கனிவு ததும்பும் பார்வை, பாசம் தேடும் கண்கள் என அட்டகாசமான பரிதவிப்பில் உச்சம் தொடுகிறார் ஆனந்தி. வெள்ளந்தி யான பிரியத்தில் ஜொலிக்கிறார். நிச்சயம் தமிழ் சினிமாவிற்கு இன்னொரு ஹீரோயின் கிடைத்து விட்டார். ‘‘அவர் பேசினதை மறக்க முடியலையே பாட்டி’’ என காதலில் குழைந்து, குமுறும்போது பிரமாதம்! எல்லா
முகபாவங்களிலும் காதல் வழிவது அழகு!

ஆனாலும் டைரக்டர் ‘மைனா’, ‘கும்கி’ படங்களின் சாயல் தோய்ந்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். கேரக்டர்களை நடிகர்களாக்கி விடா மல் அசல் வார்ப்புகளாக உலவ விடுவது பெரும் மாறுதல். இறுதிக் காட்சியின் சுனாமி பேரழிவு குலை நடுங்கி நெகிழ வைக்கிறது. க்ளைமேக்ஸில் சந்திரனும், ஆனந்தியும் பார்த்துக்கொண்டு சேர்கிற காட்சி... ஆஹா! ஆனாலும் துண்டு, சட்டைத் துணியை வைத்துக்கொண்டு ஆனந்தி திரிவது பழைய சாயல்!

படத்தின் இன்னொரு ஹீரோ சந்தேகமில்லாமல் இமான்! மனதைக் கரைக்கும் பின்னணியிலும், பாடல்களிலும் மனசைச் சுற்றுகிறார். ‘பறவையா பறக்கிறோம்’, ‘எங்கிருந்து வந்தாயோ...’, ‘கூடவே வர்ர மாதிரி’ என எல்லாமே வருடும் தென்றல். யுகபாரதியின் வரிகளுக்கு வந்தனம். மகேந்திரனின் ஒளிப்பதிவு கண்களுக்குக் குளிர்ச்சி. கதை நெடுகிலும் ஆசை ஆசையாகப் பயணிக்கிற ஆர்வம் கேமராவில் தெரிகிறது.‘மைனா’ தந்த பிரபு சாலமனிடம் இன்னும் எதிர்பார்க்கிறார்கள்!

- குங்குமம் விமர்சனக் குழு