மந்திரா லோசனை!



மந்திராலோசனை மண்டபத்தில் நெற்றியில் விரல் வைத்து தலைகுனிந்தபடி தனித்து அமர்ந்திருந்த எமதர்மனைப் பார்த்த சித்ரகுப்தனுக்குள் சின்ன திடுக், அதிர்ச்சி.

‘‘என்னாயிற்று மன்னா?’’
‘‘மனதில் குழப்பம்!’’
‘‘நான் அறியலாமா?’’

‘‘தாராளமாக. அதற்காகத்தான் அழைத்தேன். பூலோகத்தில் மகேந்திரன் என்கிற மானிடனுக்கு இன்றுடன் ஆயுசு முடிகிறது. அவன் மீது எவ்வாறு பாசக்கயிறு பாய்ச்சுவது என்பதுதான் என் தலையாய பிரச்னை!’’‘‘புரியவில்லை மன்னா?!’’‘‘நாம் மனித ஆயுளைப் பறிப்பவர்களென்றாலும்... பின்னால் நம் மீது எவ்வித குற்றம் குறையும் வந்துவிடக் கூடாது என்பதற்காக நீதி நேர்மையுடன் கடமையைச் செய்பவர்கள்தானே?’’‘‘ஆம் மன்னா! நூற்றுக்கு நூறு உண்மை’’

‘‘அதுதான் இவன் விஷயத்தில் சிக்கல். மகேந்திரன் வயசானவன் கிடையாது. எந்தக் கெட்ட பழக்கத்துக்கும் ஆளாகாத இளைஞன். அதனால், நோய் நொடி கிடையாது. ஆரோக்கியமான அவன் மீது எப்படி பாசக்கயிற்றை வீசி உயிரைப் பறிப்பது?’’‘‘நம் வழக்கப்படி... காற்று, நீர், நிலம், நெருப்பு, ஆகாயம்... பஞ்சபூதங்களில் ஒன்றின் உதவியை நாடுவதுதானே?’’

‘‘அவன் கான்க்ரீட் கூரையின் கீழ் வாழ்கிறான். காற்று அதை எதுவும் செய்யாது. தீயணைப்பு பாதுகாப்புகளையும் வீட்டில் சரியாகச் செய்திருக்கிறான். நீரில் நன்றாக நீச்சலடிப்பான். ஆகாயத்தில் இவன் கதையை முடிக்கலாம் என்றால், விமானத்தில் அவன் செல்ல வாய்ப்பே இல்லை. பிறகெப்படி? சொல்! அவன் ஒருவனுக்காக பூகம்பத்தை வரவழைத்து லட்சக்கணக்கானவர்களைக் கொல்வது நியாயமில்லையே..!’’

‘‘கவலையை விடுங்கள் மன்னா. இருக்கவே இருக்கிறது... சாலை விபத்து!’’ ‘‘அதற்கும் வழி இல்லை சித்ரகுப்தா. இவன் சாலை விதிகளைச் சரியாகக் கடைப்பிடிக்கிறான். வாகனத்தைச் சரியான வேகத்தில் ஓட்டிச் செல்கிறான்!’’

 இதைக் கேட்டதும்... சித்ரகுப்தன் முகம் விழுந்தது. ‘‘இப்போது தெரிகிறதா என் சங்கடம்? இன்றைக்கு இவன் உயிரைப் பறிக்க வழியைச் சொல்?’’சிறிது நேரம் சிந்தனை வயப்பட்ட சித்ரகுப்தன், ‘‘கொஞ்சம் பொறுங்கள் மன்னா. நான் பூலோகம் சென்று அவன் நிலைமையை ஆராய்ந்து வருகிறேன்!’’ - வணங்கி விடைபெற்ற சித்ரகுப்தன், அரை மணி நேரத்திலேயே திரும்பினான். முகத்தில் மலர்ச்சித் தாண்டவம்!

‘‘பிரபோ, கவலையை விடுங்கள். ஆள் கதை முடிந்து விட்டது!’’ என்று வணங்கினான்.‘‘எப்படி?’’‘‘நாட்டில் இன்றைக்கு நிலவும் கள்ளக்காதல் கழிசடையின் தாக்கம்... மகேந்திரன் மனைவியிடமும் உள்ளது. அவள் தன் கள்ளக்காதலன், அவனது கூலிப்படைகளுடன் கணவன் உயிரை எடுக்க மந்திராலோசனை நடத்திக் கொண்டிருக்கிறாள். தாலிக்கயிறு பாசக் கயிறாக மாறிவிட்டது. ஆள் கண்டிப்பாய் காலி!’’எமதர்மன் முகமும் இப்போது மலர்ந்தது.

‘‘இப்போது தெரிகிறதா என் சங்கடம்? இன்றைக்கு இவன் உயிரைப் பறிக்க வழியைச் சொல்?’’

காரை ஆடலரசன்