கை ராசி!



எனக்கு என் கைராசியைப் பற்றி ரொம்பப் பெருமை. ஏன், ஒருவித கர்வம் கூட!

தினமும் வீட்டுக்கு பூ கொடுக்கும் பூக்காரி... என் கையால்தான் பணம் தரவேண்டும் என்பதில் குறியாய் இருப்பாள். நான் கொடுத்தால் அன்று முழுவதும் வியாபாரம் பிரமாதமாக நடக்கிறதாம்!

ஒருநாள் காலை... வழக்கமான ஆட்டோ டிரைவர் அருணாசலத்தின் ஆட்டோவில் ஏறி குடும்பத்தோடு ஒரு கல்யாணத்துக்குப் போனோம். அந்த நாள் முழுக்க அவனுக்கு சமாளிக்க முடியாத அளவுக்கு நெடுந்தூர சவாரிகளும், எக்கச்சக்க கலெக்ஷனும் கிடைத்ததாம். அடுத்த நாள் அவனே வந்து இதைச் சொல்லி என்னைப் புல்லரிக்க வைத்தான்.

எங்க டிரைவர் ராமுவுக்கு வழக்கமாக என் மகன்தான் மாதச் சம்பளம் தருவது வழக்கம். அவன் ஊரில் இல்லாத ஒரு நாள் நான் தர வேண்டியிருந்தது. அடுத்த நாளே அவன் பரவசத்தோடு வந்தான்.‘‘ஐயா... உங்க கை ராசியானதுனு எல்லாரும் சொல்றது உண்மைதான். என்கிட்ட கடன் வாங்கி ரொம்ப நாளா திருப்பித் தராம ஏமாத்திக்கிட்டு இருந்த ஒருத்தன் நேத்து தேடி வந்து பைசா பாக்கியில்லாம திருப்பிக் கொடுத்துட்டான்!’’ என்றான் அவன்.

எங்க வீட்டு சமையல்கார அம்மாள் புது பர்ஸ் வாங்கியபோது, அதில் என் கையால் முதலில் ஒரு ரூபாயாவது பணம் போடச் சொன்னாள். ‘‘ஐயா கைராசியில என் பணம் பெருகணும்மா’’ என என் மனைவியிடமே சொல்லிச் சென்றாள் அவள்.

நான் இப்படி எல்லோரிடமும் கைராசி சர்டிபிகேட் வாங்கும்போதெல்லாம் என் மனைவியின் முகத்தில் உற்சாகம் குன்றிப்போகும். இதையெல்லாம் அவள் சிறிதும் ரசிக்கவில்லை என்பது அவள் முகத்தைச் சுளிப்பதிலேயே புரிந்துவிடும். அவள் ஏன் அப்படி நடந்து கொள்கிறாள்? - ஆவல் மீற ஒரு நாள் அவளிடமே இதைப் பற்றிக் கேட்டேன். நான் சற்றும் எதிர்பாராமல் என் மனைவி ‘ஓ’வென்று அழ ஆரம்பித்து விட்டாள்.

‘‘உண்மைதாங்க. உங்க கைராசியை எல்லாரும் பிரமாதமாப் புகழ்றது எனக்குக் கொஞ்சமும் பிடிக்கலை. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க... ஏனோ உங்க கை எனக்கு மட்டும் ராசியில்லைங்க.

இந்தக் கையாலேதானே எனக்குத் தாலி கட்டி கல்யாணம் செஞ்சுக்கிட்டீங்க? அந்தக் கை ராசியானதுன்னா நமக்கு ஏன் மூளை வளர்ச்சி இல்லாத ஒரு பெண் குழந்தை பிறக்கணும்? அது பிறந்த பத்து நாளில் ஏன் இறக்கணும்?’’ - அவள் வார்த்தையில் இருந்த உண்மை என்னைச் சுர்ரென்று சுட்டது. அந்தக் கேள்விக்கு பதில் இல்லாமல் தலையைக் குனிந்து கொண்டேன்.

நான் இப்படி எல்லோரிடமும் கைராசி சர்டிபிகேட் வாங்கும்போதெல்லாம் என் மனைவியின் முகத்தில் உற்சாகம் குன்றிப்போகும்.

குரு.சுப்ரமணியன்