காணாமல் போன கடல் மீன்கள்!மீனவன் காணாமல் போனால், போராட்டம் பண்ணலாம்... ஆனால், மீனே மிஸ் ஆனால்..! சில வருடங்களுக்கு முன்புவரை இருபது, முப்பது ரூபாயில் கை நிறைய மீன் வாங்கி திருப்தியாக சாப்பிட்ட குடும்பங்கள் உண்டு.

இன்று, இருநூறு ரூபாய் இல்லாமல் மீன் மார்க்கெட்டுக்குப் போனால் கிரிமினல் குற்றவாளி போல் பார்க்கிறார்கள். ‘விலை மலிவான சிறிய - நடுத்தர வகை மீன்கள் எங்கே போச்சு?’ என்றால், ‘‘கடல்லயே இல்லையாம்’’ என அதிர்ச்சி தருகிறார்கள் நிபுணர்கள்!

‘‘நெல்லை, தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பிரதேசத்தைப் பொறுத்த அளவில் நெய் காரல், வரிக் காரல், வெள்ளக் குறி, அழகானதும் மிகவும் ருசியானதுமான மதனம், குதிப்பு, கிழைக்கான் மற்றும் பைந்தி போன்ற மீன்கள் கிடைப்பது அரிதாகிவிட்டது. எழுபதுகள் வரை இந்த மீன்கள் தாராளமாகக் கிடைத்தன.

எண்பதுகளுக்குப் பிறகு இது கிடைப்பது அரிதாகிவிட்டது. இதற்குக் காரணம் நம் மீன்பிடி முறைகளில் ஏற்பட்ட அசுரத்தனமான மாற்றம்தான்’’ என வருத்தப்படுகிறார் எழுத்தாளர் ஜோ டி குரூஸ். மீனவர் குடும்பத்திலிருந்து வந்த இவர், மீனவர்களின் வாழ்வை ரத்தமும் சதையுமாக ‘ஆழிசூழ் உலகு’ நாவலில் வடித்தவர்.

‘‘இன்று மீனவர்களை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று, பாரம்பரியமாக மீன்பிடித் தொழிலை செய்பவர்கள். இரண்டாவது, தொழில்முறையில் மீன் பிடிப்பவர்கள். பாரம்பரிய மீனவன் கடலில் எந்த நேரத்தில் எந்த இடத்தில் என்ன மீன் கிடைக்கும் எனத் தெரிந்து சென்றான். அதற்கேற்பவே அவன் மீன் வலை மற்றும் கருவிகளைக் கொண்டு செல்வான். இதனால் அவன் குறி வைக்கும் இடத்தைத் தவிர மற்ற இடங்களில் இனப்பெருக்கம் செய்யும் அல்லது வளர்ச்சியுறும் மீன்களுக்குத் தொந்தரவு இருக்காது.

ஆனால், தொழில்முறையில் மீன் பிடிப்பவன் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். நாளைக்கு நம் பிள்ளைகளுக்கும் மீன் வேண்டுமே என்ற எண்ணம் அவனுக்கு இல்லை. மீன்களின் வாழ்க்கை முறைக்கு ஏற்ப மீன் பிடிப்பு முறை தெரியாததாலும், தொழில்நுட்பங்கள் புரியாததாலும், எல்லா வகை மீன்களையும் பிடிக்கக்
கூடிய வலைகள், கருவிகளைப் பயன்படுத்துகிறான்.

கடலின் ஆழத்தை மூன்று வகையாகப் பிரிக்கலாம். அடிமட்டம், நடுப்பகுதி மற்றும் மேற்பகுதி. இதில் அடிமட்டத்தில்தான் மீன்கள் குஞ்சு பொரிக்கும். ஓரளவு வளர்ந்த மீன்கள் நடுப்பகுதிகளில் நீந்தும். நல்ல நிலையில் வளர்ந்த மீன்கள்தான் தைரியமாக மேற்பகுதிக்கு வரும். பாரம்பரிய மீனவன் மேற்கடலில் மட்டுமே மீன்பிடிப்பான்.

இதனால் அடிமட்டத்தில் இருக்கும் மீன் குஞ்சுகள் பாதிக்கப்படாது. ஆனால் தொழில்முறை மீனவன் சுருக்கு மடி, இரட்டை மடி, கொல்லி மடி என்று விதவிதமான வலைகளை கடலின் அடிமட்டம் வரை கொண்டு சென்று மீன் பிடிக்கிறான். ‘கொல்லி வலை’ என்பதே மீன்களைக் கொன்று பிடிக்கும் வலைதான்.

இதனால்தான் மீன்கள் தமிழகக் கரையோரங்களை காலி செய்துவிட்டு, கடலின் தூரப் பகுதிகளுக்குச் சென்று விடுகின்றன. காணாமல் போன இந்த மீன்களை இனிமேல் பிடிக்க வேண்டுமானால், கடலுக்குள் தொலைதூரம் சென்று ஆழப் பகுதிகளில்தான் துழாவ வேண்டும். நவீன தொழில்முறை மீனவர்களாலும் இதைச் செய்ய முடியுமா என்பதே சந்தேகம்தான்!’’ என்கிறார் ஜோ டி குரூஸ் வருத்தமாக.

‘‘இதற்குக் கண்ணை மூடிக்கொண்டு மீனவர்களையே குற்றம் சொல்ல முடியாது!’’ என காட்டமாக மறுக்கிறார் தென்னிந்திய மீனவர் நலச் சங்கத் தலைவரான பாரதி.‘‘மொத்தக் கடல் வளமே குறைந்துவிட்டது என்பதுதான் உண்மை. சென்னையில் ஒரு காலத்தில் கிடைத்த மிக மலிவான - ஆனால் ருசியான மீன்களான தெரட்டை, வங்கராசி, சுதும்பு, தட்டக் காரல், கோலி, மொசல் பாரை, உல்லான் போன்றவை இன்று அறவே இல்லை எனச் சொல்லலாம்.

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில் இருபது வருடங்களுக்கு முன்பு ஏற்படுத்தப்பட்ட தொழிற்சாலைக் கழிவுகளால் கடலின் வளம் நிறைய கெட்டுப் போய்விட்டது. அது போக, துறைமுக வளர்ச்சிக்காக கடற்கரைப் பகுதிகள் தூர் வாரப்பட்டு மீன்களின் வாழிடங்கள் அழிக்கப்பட்டன. கரையோரங்களில் வாழும் சிறிய வகை மீன்கள் காணாமல் போக இவைதான் முக்கியக் காரணம்.

ஆனால், 1991ம் ஆண்டு முதல் ‘ஒவ்வொரு ஆண்டும் மீனவர்கள் கடலுக்குச் செல்ல 45 நாள் தடை’ விதித்ததன் மூலம், கடல் வளத்தைக் கெடுத்ததே மீனவன் மட்டும்தான் என்ற பிம்பத்தை அரசு ஏற்படுத்துகிறது. வருடத்தில் சுமார் நூறு அல்லது நூற்றைம்பது நாட்களே மீனவன் கடலுக்குச் செல்கிறான். அக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் காற்றின் வேகம் அதிகம் என்பதால் மீன்பிடித் தொழில் மிகவும் சொற்பமாகவே நடைபெறும்.

இந்த 90 நாட்கள் போக, அரசு தடை விதித்த 45 நாட்களும் சேர்ந்து வருடத்தில் பாதி நாள் மீனவனுக்கு வேலை இல்லாமல் போகிறது. எனவே, மீன் பிடிக்கும் நாட்களில் இதற்கெல்லாம் சேர்த்து அதிகம் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் அவனுக்கு. அதற்கு ஏற்ற கடல் வளமும் இல்லை என்கிறபோது என்ன செய்வான்? கடல் வளத்துக்கு எதிரான நைலான் வலைகளும் காஸ்ட்லியான படகுகளும் மீனவன் விரும்பி ஏற்றுக்கொண்டதல்ல. அவன் அந்த நிலைக்குத் தள்ளப்படுகிறான்.

கடலோரப் பகுதிகளில் மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுத்துங்கள்... அன்னிய கப்பல்களின் லாப வேட்டைக்காக துறைமுக வளர்ச்சி என்கிற பெயரில் தூர் வாருவதை நிறுத்துங்கள்... அதன் பின்பு கடல் வளம் பற்றி மீனவனிடம் கேள்வி கேளுங்கள். ஒரு நாட்டில் கடல் வளம் சீராக இருந்தால், கடலும் ஆறும் சந்திக்கும் இடங்களில் நுண்ணிய இறால் குஞ்சுகள் மின்னுவது போலத் தெரியும்.

இவற்றை எந்த வலையாலும் அழிக்க முடியாது. ஆனாலும், தமிழகக் கடலோரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த இறால் குஞ்சுகளைக் காண முடியவில்லை. இது கடல் மாசினால் ஏற்பட்ட பிரச்னை என்பதற்கு இதுவே சாட்சி’’ என்கிறார் அவர் உறுதியாக!வஞ்சிரமோ வவ்வாலோ, இப்பவே சாப்பிட்டுக்கொள்வோம்... எதிர்காலத்தில் அதுவும் கிடைக்குமோ என்னவோ!

தொழில் முறையில் மீன் பிடிப்பவன் பணத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருக்கிறான். நாளைக்கு நம் பிள்ளைகளுக்கும் மீன் வேண்டுமே என்ற எண்ணம் அவனுக்கு இல்லை.

கடல் வளம் சீராக இருந்தால், கடலும் ஆறும் சந்திக்கும் இடங்களில் நுண்ணிய இறால் குஞ்சுகள் மின்னுவது போலத் தெரியும். தமிழகக் கடலோரப் பகுதிகளில் பல ஆண்டுகளாக இந்த இறால் குஞ்சுகளைக் காண முடியவில்லை.

- டி.ரஞ்சித்
படங்கள்: ஆர்.சி.எஸ்