நடைவெளிப் பயணம்



மறைந்தவர்கள் மத்தியில் 2

நாங்கள் செகந்தராபாத்தில் போயிகுடா என்னும் இடத்தில் குடியிருந்தபோது, ஒரு சிறு இடைவெளி விட்டு எதிரில் இருந்த இரு தெருக்களையும் ‘சேரி’ என்றுதான் சொல்லுவார்கள்.
 செகந்தராபாத் ஒரு கன்டோன்மென்ட்டாக பிரிட்டிஷ் காலத்தில் இருந்தது. நிறைய வெள்ளைக்கார அதிகாரிகள். இவர்களுக்குச் சமைத்துப் போட ஆட்கள் தேவைப்பட்டது. இந்த சமையல்காரர்கள் மாட்டிறைச்சி, பன்றியிறைச்சி இரண்டையும் சமைப்பவர்களாக இருக்க வேண்டும்.

செகந்தராபாத்தின் மொத்த மக்கள்தொகை ஒரு லட்சமாக இருந்தபோது இந்த சமையல்காரர்கள் இரு குடியிருப்பில் சேர்ந்து இருந்தார்கள். ஒன்று, பழைய போயிகுடா. இரண்டு, ரெஜிமென்ட்டல் பஜாரில் ஒரு பகுதி. இவர்களாகவே இக்குடியிருப்புகளை ‘குசினி சேரி’ என்று அழைத்துக் கொண்டார்கள். (‘க்யூஸின்’ என்பது ‘சமையல்’ என்று பொருள்படும் பிரெஞ்சு சொல்.) அநேகமாக அனைவரும் கிறிஸ்தவர்கள்.

பழைய போயிகுடா, ரெஜிமென்ட்டல் பஜார் இரண்டிலும் எனக்கு நண்பர்கள் இருந்தார்கள். அதிலும் ரெஜிமென்ட்டல் பஜாரில் இருந்த நண்பன் ஃப்ரான்சிஸ் சேவியர் மிக நன்றாக சிதார் வாசிப்பான். நானும் அவனும் எப்படியாவது முப்பது, நாற்பது ரூபாய் சேர்த்து வைத்துக் கொண்டு கல்கத்தா சென்று பங்கஜ் மல்லிக்கை சந்திக்க திட்டமிட்டோம்.

பல நிறைவேறாத திட்டங்களில் அதுவும் ஒன்று. ஃப்ரான்சிஸ் சேவியர் என்னோடு கல்கத்தா செல்வதைக் காட்டிலும் அவன் பேட்டையில் வசித்த ஒரு பெண்ணோடு ஓடிப் போவது முக்கியம் என்று கருதினான். நிறைய அடி உதையோடு பதினைந்து நாட்கள் ஜெயிலில் போட்டு விட்டார்கள்.

இவ்வளவு சொல்வதற்குக் காரணம், அங்கு ஒவ்வொரு வீட்டிலும் இரண்டு, மூன்று புகைப்படங்களாவது மாட்டியிருப்பார்கள். தாத்தா, பாட்டி, அவர்களுக்கு முந்தைய தலைமுறையினர் இருப்பார்கள். என் அப்பாவுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குடும்ப போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். காரணம், இப்படங்கள் இறந்த என் சகோதர, சகோதரிகளை நினைவுபடுத்தின.

நான் சிறுவனாக இருந்தபோது குடிசையிலிருந்து அரண்மனை வரை புகைப்படங்கள் இல்லாத வீடே இருக்காது. அன்று சுருள் ஃபிலிம் வரவில்லை. எல்லாம் ‘பிளேட்’ புகைப்படங்கள். ஆதலால் படத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் மிகத் தெளிவாக இருக்கும். செகந்தராபாத்தில் நான்கைந்து புகைப்படக்காரர்கள். யார் மிகச் சிறந்த படங்களை எடுக்கிறார்கள் என்பதில் போட்டி. போட்டியே போட முடியாதவர் ராஜா தீன் தயாள். அவர் நிஜாம் அரசுப் புகைப்படக்காரர்.

அன்று (அதாவது 1920 அளவில்) உலகத்தில் மிக அழகான பெண் என்பவள், துருக்கி அரசகுமாரி நிலோஃபர். நிஜாம் அவளையும் அவள் சகோதரியையும் தன் மருமகள்கள் ஆக்கிக் கொண்டார். இந்த இரட்டைத் திருமணத்துக்கு நிஜாம் போகவில்லை. திருமணம் பாரிஸில் நடந்தது. மணமக்கள் ஹைதராபாத் திரும்பியவுடன் பெரிய விருந்து, புகைப்படங்கள். அப்படங்களில் நிலோஃபரும் அவள் சகோதரியும் இருப்பார்கள்.

அப்பெண்கள் உலக அழகிகள் என்பதற்காக நிஜாம் தன் குடும்பத்தில் சேர்த்துக் கொள்ளவில்லை. அன்று துருக்கி அரசன்தான் காலிஃப். இந்த உறவால் தன் மகன்களில் ஒருவன் காலிஃப் ஆகலாம் என்று நிஜாம் நினைத்தார். ஆனால் துருக்கியில் புரட்சி நடந்து, காலிஃப் பதவியே போய் விட்டது.

நிஜாமின் இரு மகன்களும், உலக அழகிகள் மனைவியாகக் கிடைத்தாலும் நடத்தை கெட்டு இருந்தார்கள். காலிஃப் பதவி வாய்ப்பு போய், அந்த இரு மகன்களும் தன் வாரிசே இல்லை என்று நிஜாம் அறிவித்தார். இரு மகன்களும் அற்பாயுளில் இறந்தும் விட்டார்கள். ஆனால் அந்த உலக அழகிகள் இன்றும் தீன் தயாள் இல்ல முன்னறையில் புகைப்படமாக அலங்கரிக்கிறார்கள்.

எல்லாருடைய வீட்டுச் சுவர்களையும் உலக அழகிகள் அலங்கரிக்க முடியுமா? தகப்பனார், தாய், தாத்தா, பாட்டி என்றிருக்கும். எங்கள் வீட்டில் இருந்த புகைப்படங்களில் யார் யார் என்று தெரியாது. இப்படி இறந்து போனவர்களின் படங்கள் மத்தியில் இருப்போர் மனநிலை எப்படி இருக்கும்? அந்த நாளில் ‘கேண்டிட்’ (candid) புகைப்படங்கள் மிகவும் குறைவு.

இல்லவே இல்லை என்றுகூடக் கூறலாம். காரணம், புகைப்படங்கள் எல்லாம் புகைப்படக்காரரின் கடையில் எடுக்கப்பட்டவை. நாம் இயல்பாக இருந்தாலும் புகைப்படக்காரரே நம்மைக் கழுத்து டை கட்ட வைத்து, தலையில் தலைப்பாகை அல்லது தொப்பி வைத்துத்தான் எடுப்பார். ‘‘இருபது வருஷமானாலும் இதை நீங்க மறக்கக் கூடாதுங்க’’ என்பார்.

எனக்குக் கூசும். என் தகப்பனார் தலைப்பாகை கட்டியதில்லை. ஆபீஸுக்குப் போகும்போது மட்டும் தொப்பி போட்டுக் கொள்வார். ஆனால் அவர் புகைப்படத்தில் பெரிய தலைப்பாகை. அன்று சாரணர் படையில் தலைவர், தலைப்பாகைதான் அணிய வேண்டும். சிலருக்கு இது பொருந்திப் போகும். நான் கன்னட எழுத்தாளர் மாஸ்தி வெங்கடேச ஐயங்காரைச் சந்தித்திருக்கிறேன். ஐந்தடிதான் உயரம். தலையில் மிக நேர்த்தியாகக் கட்டப்பட்ட தலைப்பாகை. கன்னடக்காரர்களுக்குத் தலைப்பாகை அவர்கள் உடையில் மிக அவசியமான அம்சம்.

சீக்கியர்களுக்கு அது மதம் சம்பந்தப்பட்டது. மேற்கத்திய நாடுகளில் ‘போர்ட்ரைட்’ எனக் கூறப்படும் ஓவியங்கள் ஏராளம். உலகத்தின் மிகப் புகழ் வாய்ந்த ஓவியம் ‘மோனாலிஸா’ கூட ஒரு போர்ட்ரைட்தான். அதில் இருக்கும் முகம் யாருடையது என்று ஐந்நூறு ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். டா வின்சி  படங்கள் எல்லாமே ஏதோ ரகசியச் செய்தி கொண்டிருப்பவை என்று ஆராய்ச்சியாளர்கள் தீர்மானமாகச் சொல்கிறார்கள்.

பல மேற்கத்திய போர்ட்ரைட்களில் அந்த மனிதர் அல்லது மாதின் முக்கால் முகம் தெரிவதாக இருக்கும். பலர் ஓரக்கண்ணால் பார்த்தபடி இருப்பார்கள். நாம் நம் மூதாதையர் படம் பார்த்திருக்கிறோமோ இல்லையோ, ஷேக்ஸ்பியர் படத்தைப் பார்த்திருப்போம். அந்த மனிதர் ஓரக்கண்ணால் பார்க்கும்போது ‘என்னை ஒன்றும் செய்து விடாதீர்கள்’ என்று கெஞ்சுவது போல இருக்கும். அவரும் ஒரு மர்மம்.

நாலாங்கிளாஸ் சரியாகப் படிக்காத ஓர் இளைஞன், 15000 சொற்கள் பயன்படுத்தி நாடகங்களும் கவிதைகளும் எழுத முடியுமா? ஆங்கில இலக்கிய வரலாற்றில் இவ்வளவு பெரிய சொல்வளம் யாருக்கும் கிடையாது. இவருக்கு அடுத்த இடத்தில் இருப்பவர் மில்டன். அவருடைய சொல்வளம் 8000தான். இப்போது ஷேக்ஸ்பியர் பார்வை அர்த்தம் பொருந்தியதாகி விடுகிறது.

முதல் இந்திய ஓவியங்கள் சுவர்ச் சித்திரங்களாக இருந்தது நன்மையா? குகை ஓவியங்கள் வெயிலால் பாதிக்கப்படாவிட்டாலும் காற்றின் ஈரம், வண்ணங்களை மங்கச் செய்து விட்டது. ஓவியங்களில் சம்பிரதாயம் தவறக்கூடாது.

புத்தர் ஆறடி இருந்தால் அவருடைய மனைவியும் மகனும் மூன்றடி உயரம்தான். இன்றைய இந்திய சிற்பங்கள் அன்று பதவியில் இருப்பவர் மனதைப் பொறுத்தது. சென்னைக் கடற்கரையில் வரிசையாகப் பண்டைய தமிழ்க் கவிஞர்கள் சிலையாக நிற்கிறார்கள். பாரதி, பாரதிதாசன் தவிர இதர அறிஞர்கள் உருவங்களுக்கு ஒப்பிட முன்மாதிரி கிடையாது.

படிக்க

இருபது ஆண்டுகளுக்கு முன்பு சென்னையிலிருந்து ‘அஸைட்’ என்றொரு மாதப் பத்திரிகை ஆங்கிலத்தில் வந்தது. மிகச் சிறப்பாக இருந்தாலும் கட்டி வரவில்லை. அதன் ஆசிரியர் ஆபிரஹாம் எராலி வரலாற்றுப் பேராசிரியர். அவருடைய ‘ஜெம் இன் த லோட்டஸ்’, பண்டைய இந்திய வரலாறு இவ்வளவு திருப்பங்கள் கொண்டதா, இவ்வளவு இருளில் மூழ்கிக் கிடந்ததா என்ற வியப்பைத் தரும். அசோகனின் கல்வெட்டுகள் ஈராயிரம் ஆண்டுகள் வரை ஏதோ கல்வெட்டுகள் என்றுதான் இருந்தன.

எந்த அரசனும் தன்னை தேவர்களுக்குப் பிரியமானவன் என்று சொல்லிக் கொள்ளலாம். அது எப்படிக் கண்டுபிடிக்கப்பட்டது போன்ற பல அரிய தகவல்களை எராலியின் நூல் ஆதாரபூர்வமாகத் தருகிறது. (‘ஜெம் இன் தி லோட்டஸ்’ (Gem in the Lotus), பெங்குயின் புக்ஸ் இந்தியா, விலை ரூ.525/-)

என் அப்பாவுக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை குடும்ப போட்டோ எடுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் ஒரு கட்டத்திற்குப் பிறகு இந்தப் பழக்கத்தை விட்டுவிட்டார். காரணம், இப்படங்கள் இறந்த என் சகோதர, சகோதரிகளை நினைவுபடுத்தின.

(பயணம் நிறைந்தது)

அசோகமித்திரன்