சகுனியின் தாயம்



‘‘தோற்கும் நிலையில் இருப்பவர்கள் என்ன செய்வார்களோ, அதையே பாண்டிய மன்னராகியிருக்கும் அந்தப் பொடியன் செய்து விட்டான். ஆம், போர் முரசு கொட்டிவிட்டான்...’’

கடகடவென்று சிரித்த சோழ மன்னர் பெருநற்கிள்ளி, சீற்றத்துடன் தன் சிம்மாசனத்தை விட்டு எழுந்தார்.‘‘இந்த யுத்தத்தின் முடிவு நமக்குத்தான் சாதகமாக இருக்க வேண்டும். இங்கு ‘நமக்கு’ என்று நான் குறிப்பிடுவது நாட்டை ஆளும் மன்னர்களை மட்டுமல்ல. மக்களையும் சேர்த்துத்தான். ஏனெனில் கொற்கை முத்துக்களால் அதிகமும் பாதிக்கப்படுபவர்கள் நம் வணிகர்களும் கைவினைக் கலைஞர்களும்தான். இதன் தொடர்ச்சியே மக்கள் அனுபவிக்கும் வேதனை...’’ - நிறுத்தியவர், தன்னைச் சுற்றி அமர்ந்திருக்கும் அரசர்களைப் பார்த்தார்.

சேர மன்னர் யானைக் கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை மட்டுமல்ல, மிழலைக் கூற்றத்தை ஆளும் எவ்வியும், பொதிய மலை திதியனும், தகடூர் எழினியும், எருமை நாட்டை ஆட்சி செய்யும் எருமையூரனும், துளுவர், நாகர், கொங்கர் ஆகிய வேளிர்களும் தன்னையே கவனிக்கிறார்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதும் வலப்பக்கம் திரும்பினார். சீன சக்கரவர்த்தியின் முகத்திலும் ஆமோதிப்பின் பிரதிபலிப்பு படர்ந்தது. சீற்றத்துடன் தொடர்ந்தார்.

‘‘அனைத்து தொழில்களுமே ஒன்றுடன் ஒன்று இணைந்ததுதான். கைவினைத் தொழில் இல்லையேல் விவசாயம் இல்லை. விவசாயம் இல்லையேல் யாருக்கும் உணவில்லை. எல்லா மக்களும் ஏதோ ஒரு தொழிலை மேற்கொள்கிறார்கள்.

புறக்கண்களுக்குப் புலப்படாத மற்ற கண்ணிகளுடன் பின்னிப் பிணைந்திருக்கிறார்கள். இந்தக் கூட்டு எங்கு உடைபட்டாலும் அதனால் பாதிக்கப்படப் போவது ஒட்டுமொத்த மனித குலமும்தான். எனவேதான் தனி மனிதன் என்று யாருமே உலகில் இல்லை என நம் முன்னோர்கள் அறிவித்திருக்கிறார்கள்.

எல்லோருமே எல்லாவற்றின் சாரம்தான். உண்மை இப்படியிருக்கையில், பாண்டியர்களின் சந்தை ஆதிக்கம், நம் அனைவரையும் பாதிக்கிறது. இதை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் என்றுதான் முந்தைய பாண்டிய மன்னரான சித்திரமாடத்து துஞ்சிய நன்மாறனுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம்.

அது நமக்கு சாதகமாக முடியவில்லை. அதற்குள் அவர் மறைந்தும் விட்டார். இதனை அடுத்து ஆட்சிக்கு வந்திருக்கும் நெடுஞ்செழியனிடம், மூத்தோர்களை அனுசரித்து செல்லும் பண்பில்லை. இன்னமும் பால் மணம் மாறாமல் இருப்பதால் அனைவரையும் எடுத்தெறிந்து பேசுகிறான். இந்த இடத்தில் ஓர் உண்மையை உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்...’’

ஆசனத்தை விட்டு எழுந்த சோழ மன்னர், சீன சக்கரவர்த்தியின் அருகில் வந்தார். ‘‘சமீபத்தில் சீன மரக்கலம் ஒன்று கொள்ளையர்களால் சூறையாடப்பட்டிருக்கிறது. விலை மதிப்பற்ற பொருட்கள் எரிந்து சாம்பலாகியிருக்கின்றன. அடிக்கடி இப்படி கடற்கொள்ளையர்கள் நம் வணிகக் கலங்களை வேட்டையாடுகிறார்கள்.

ஆனால், இப்படி இழப்புக்குள்ளாவது நம் நாட்டு வணிகர்களின் மரக்கலங்கள்தான். பாண்டிய வணிகர்களின் கலங்கள் அபூர்வமாகவே சூறையாடப்படுகின்றன. இதனால்தான் கடற்கொள்ளையர்களுக்கும் பாண்டியர்களுக்கும் ஏதேனும் கூட்டு இருக்குமோ என சந்தேகப்பட வேண்டியிருக்கிறது...’’

‘‘உண்மைதான். எங்களுக்கும் இந்த ஐயம் இருக்கிறது...’’ சேர மன்னரின் குரல் அழுத்தம்திருத்தமாக ஒலித்தது.‘‘இதைத் தடுக்கவும், கொள்ளையர்களிடமிருந்து நம் வணிகர்களைக் காக்கவும் நாம் கூட்டாக கடற்படை ஒன்றை அமைக்க வேண்டும். அதற்கு முன்பாக வரும் போரில் நாம் வெற்றி பெற வேண்டும். இந்த யுத்தத்தில் தன் நாட்டின் நலம் கருதி சீன சக்கரவர்த்தி நடுநிலை வகிக்கிறார். ஆனால்...’’‘‘ஆனால்?’’ திதியன் புருவத்தை உயர்த்தினார்.

‘‘நிலப்போரில் நாம் வெற்றி பெற்றுவிட்டால் கூட்டாக நாம் உருவாக்கப் போகும் கடற்படைக்கு தேவையான உதவிகளை செய்ய சீன சக்கரவர்த்தி தயாராக இருக்கிறார். உண்மையிலேயே இது நம் அனைவருக்கும் கிடைத்திருக்கும் அரிய வாய்ப்பு.

பாண்டியர்களை வெற்றி கொண்டால் கொற்கை முத்துக்களும் நம் கட்டுப்பாட்டின் கீழ் வரும். நம் வணிகர்களுக்கும் கடலில் தொந்தரவு இருக்காது. மக்களும் மகிழ்ச்சியாக வாழ்வார்கள். இவை எல்லாம் நடக்க வேண்டுமானால் பாண்டியர்களை நாம் தோற்கடிக்க வேண்டும்...’’‘‘நிச்சயம் வெற்றி நமக்குத்தான்...’’ எருமையூரான் தன் இருக்கையை விட்டு எழுந்து முழங்கினார்.

‘‘ஆம். வெற்றி நமக்கே. நாம் அனைவரும் பல யுத்தங்களைப் பார்த்தவர்கள். கடந்தவர்கள். வியூகம் அமைப்பதும், தாக்குதல் நடத்துவதும் நமக்கு தண்ணீர்பட்ட பாடு. நம் அனுபவத்துக்கு முன்னால் உண்மையிலேயே பாண்டிய மன்னன் சுண்டைக்காய்தான். ஆணவத்துடன் மந்திராலோசனை சபையில் பிதற்றி யிருக்கிறான். இதற்கு தகுந்த பாடம் கற்பிப்போம்...’’ முகமெல்லாம் சிவக்க சேர மன்னர் பேசி முடிக்கவும் -‘‘வெற்றிவேல்... வீரவேல்...’’ என ஒருமித்த குரலில் அனைவரும் முழங்கவும் சரியாக இருந்தது.

‘‘ஒற்றுமையுடன் நாம் இணைவோம். களத்தில் மட்டுமல்ல... சந்தையிலும் வாகை சூடுவோம்...’’ என்றபடி அனைவருடனும் சோழ மன்னர் கைகோர்த்தார். கரங்களை உயர்த்தினார்.

அதே நேரம் -‘‘புகாரில் நானும் யவன ராணியும் தேடித் தேடிக் கைப்பற்றியது இதைத்தான்...’’ நான்கு பட்டுத் துணிகளை தன் இடுப்பிலிருந்து எடுத்து தரையில் விரித்தான் இளமாறன். அந்த நான்கும் இணைந்து ஒரே சதுரமானது.‘‘என்ன இது?’’ கேட்ட உபதளபதியை நோக்கி புன்னகைத்தான்.

‘‘அரக்கினால் புள்ளி வைக்கப்பட்ட இடங்கள் அனைத்தும் நிலவறைகள். யவன ஆயுதங்கள் இந்த இடங்களில்தான் பதுக்கப்பட்டிருக்கின்றன. புகாரை நிர்மாணிக்க உதவி செய்த யவனக் கலைஞர்கள் பிற்காலத்தில் தங்கள் நாட்டுக்கு பயன்படலாம் என்ற தொலைநோக்குப் பார்வையுடன் இப்படிப்பட்ட ஆயுத சாலைகளை திசைக்கு ஒன்றென ரகசியமாக உருவாக்கியிருக்கிறார்கள்.

யவன ராஜ குடும்பங்களைத் தவிர வேறு யாருக்கும் இந்த விபரம் தெரியாது. ஒருவேளை... கவனியுங்கள், ஒருவேளை... சோழ மன்னருக்கு இந்த ரகசியம் தெரிந்து விட்டால்..? எனவேதான் யவன ராணியின் துணையுடன் அனைத்து நிலவறைகளையும் மூடி விட்டேன். இனி, நாங்களே நினைத்தாலும் அவற்றைத் திறக்க முடியாது...’’ ‘‘ஏன் அப்படிச் செய்தீர்கள்? அந்த ஆயுதங்கள் நமக்குப் பயன்பட்டிருக்குமே...’’

‘‘கூடாது. அப்படி மட்டும் நாம் செய்தால், சரித்திரத்தில் நமக்கு தீராத அவப்பெயர் கிடைத்துவிடும். வேளிர்களுடன் இணைந்திருக்கும் சேரரையும், சோழரையும் தன்னந்தனியாக நாம் எதிர்க்கப் போகிறோம். இதுதான்... இந்தக் குறிப்புதான் நமக்கு பெருமையைத் தேடித் தரப் போகிறது. ஆயுதங்களை விட அதை இயக்கக் கூடிய திறன் வாய்ந்த வீரர்கள்தான் என்றுமே முக்கியமானவர்கள். மனித சக்திக்கு அப்பாற்பட்டது எதுவுமில்லை. இதைத்தான் நாம் உலகுக்கு நிரூபிக்கப் போகிறோம்...’’

சட்டென்று, தான் பேசுவதை நிறுத்திவிட்டு வாயிலைப் பார்த்தான். மலர்ந்தான்.
‘‘ஆசானா... வர வேண்டும்... வரவேண்டும். எதிர்பார்த்த பொருள்..?’’
‘‘கிடைத்துவிட்டது...’’ அதங்கோட்டாசானின் குரலில் உற்சாகம் கொப்பளித்தது.
‘‘சீன மரக்கலத்தை கடற்கொள்ளையர்கள் எரித்துவிட்டதாக செய்தி கிடைத்ததே..?’’

‘‘அது பெருநற்கிள்ளி நடத்திய நாடகம். இப்படிச் செய்தால் பாண்டியர்கள் மீது சீன சக்கரவர்த்திக்கு சினம் அதிகரிக்கும் என தப்புக் கணக்கு போட்டுவிட்டான் என் பேரன். ஆனால், மணிபல்லவ தீவில் அவனை முதன்முதலில் சந்திப்பதற்கு முன் என்னிடம் என்ன சொன்னாரோ, அதை நிறைவேற்றிவிட்டார்...’’
‘‘அதாவது..?’’

‘‘எந்தப் பொருளின் மாதிரியை புகார் தளபதியின் மாளிகையில் யவன மன்னரிடம் காட்டினாயோ, அந்தப் பொருளின் அசலை நம்மிடமே கொடுத்துவிட்டார்...’’ எதற்கும் அசையாத இளமாறன், ஆசான் எடுத்த பொருளைப் பார்த்ததும் உணர்ச்சிவசப்பட்டான்.  ‘‘இதுபோதும். தாயின் ஆசி கிடைத்துவிட்டது. இனி வெற்றி நமக்குத்தான். கொற்கை துறைமுகத்தைக் கைப்பற்ற, தமிழகத்தின் அடையாளத்தையே அயலாரிடம் தாரை வார்த்தார் சோழ மன்னர். அதை மீட்பதற்காகவே என் வாளின் நுனியைக் கூர்மையாக்கினேன்.

ஆனால், அதற்கு வேலை தராமல் அன்னை நம்மிடமே வந்துவிட்டார். என்றாலும் தாயை அவமதித்த சோழ மன்னரைப் பழி வாங்காமல் விடமாட்டேன். பாண்டிய மன்னரின் தலைமையில் நடக்கும் இந்த யுத்தத்தில் அவருக்கு சரியான பாடத்தை கற்பிப்பேன். போலவே இதற்கெல்லாம் சூத்திரதாரியாக செயல்படும் சேர மன்னரை சிறை பிடித்து மூங்கில் கோட்டையில் அடைத்தே தீருவேன். இது கொற்றவையின் மேல் ஆணை...’’

வாளின் நுனியில் தன் வலது கை கட்டை விரலைக் கீறி சத்தியம் செய்த கையோடு அதை பயபக்தியுடன் பெற்றுக் கொண்டான். ‘‘இளமாறா... ஒரு விஷயம்...’’‘‘என்ன?’’‘‘நீ யார் என்ற உண்மை சோழனுக்கு தெரிந்துவிட்டது...’’ ‘‘என்றேனும் ஒருநாள் அதை அவர் அறிந்துதானே ஆக வேண்டும். பாதகமில்லை. அன்னை என்னைக் காப்பாள்...’’ என்றபடி தன் கையிலிருந்த பொருளை எடுத்து கண்களில் ஒற்றிக் கொண்டான்.அது -கண்ணகியின் காற்சிலம்பு.

‘‘நோ...’’ எட்டு ஊருக்கு கேட்கும்படி கத்தினான் மகேஷ்.
‘‘ஹாரி பார்ட்டர், என்னைக் காப்பாற்ற வராத. எங்க நிக்கறியோ அங்கயே நில்லு...’’
தன் கழுத்தை பற்களால் கடிக்க வந்த சூனியக்கார பாட்டி யின் பிளந்த வாயை தன் இரு கைகளாலும் பிடித்துக் கொண்டான்.
‘‘ஸ்பைடர் மேன்... திரும்பவும் அருவியை நிரப்பு...’’
‘‘வாட்?’’

‘‘சொன்னதைச் செய்... ஏஞ்சல் உன்னைத்தான்...’’
‘‘என்ன மகேஷ்...’’ நிஜ தேவதையின் குரல் அவனுக்குப் பின்புறமிருந்து ஒலித்தது.
‘‘ஸ்பைடர் மேனை உன்னோட தங்கச்சியோ... இல்ல, டார்க் லார்ட்டோ தடுத்தா எரிச்சுடு...’’
‘‘சரி...’’

‘‘ஸ்பைடர் மேன்... இன்னுமா நிரப்பலை...’’‘‘இதோ...’’ சொன்னதுடன் நிற்காமல் முன்புபோலவே தன் இடது காலை உயர்த்தினான். கட்டை விரல் நகத்திலிருந்து சிலந்தி வலையை பாய்ச்சினான்.

 நேர்கோட்டில் பாய்ந்த வலை, அருவி இருந்த இடத்தைத் தொட்டு அப்படியே பரவியது. அந்த இடத்தை நிரப்பியது. முழுவதுமாக சிலந்தி வலை மூடியதும், ஸ்பைடர் மேன் தன் எச்சிலை அதன் மீது துப்பினான். அவ்வளவுதான்.வலை இருந்த இடம் நீராக மாறியது. அருவி பழையபடி கொட்டியது.‘‘மகேஷ்... டன்...’’

‘‘தேங்க்ஸ் ஸ்பைடர் மேன்...’’சொன்னவன் மீது சூனியக்கார பாட்டி மூர்க்கத்துடன் பாய்ந்தாள். இருவரும் கட்டி உருண்டார்கள். செய்வதறியாமல் மற்றவர்கள் திகைத்து நின்றார்கள். யாராலும் எதுவும் செய்யமுடியவில்லை. மகேஷும் விடவில்லை. பாட்டியின் வாயைப் பிளந்தபடியே ஓரக் கண்ணால் அருவியைப் பார்த்தான்.அவ்வளவுதான். மைக்ரோ விநாடியில் சூனியக்கார பாட்டியுடன் அதன் மீது பாய்ந்தான்.
இருவரும் நீருக்குள் மூழ்கினார்கள்.

‘‘மகேஷ்... நான் வந்துட்டேன்...’’செவியில் ஒலித்த குரல் அலாவுதீனுடையது என்று தெரிந்ததும், பாட்டியின் வாயைப் பற்றி இருந்த தன் கரங்களை விலக்கினான். அருவி நீரை தன் கையில் ஏந்தி சுற்றிலும் தெளித்தான். அடுத்த நொடி -நீருக்கடியில், அவன் அருகில் அலாவுதீன் தோன்றினான்.

உடனே -மந்திரவாதி தாத்தாவின் சாபப்படி வெளியே நின்றிருந்த ஹாரி பார்ட்டர் -சாம்பலாகவில்லை! பதிலாக -ஸ்பைடர்மேனும், ஹாரி பார்ட்டரும் இமைக்கும் நேரத்தில் கைகோர்த்தார்கள். இரண்டறக் கலந்தார்கள். சுவாசிக்கும் பொழுதில் காற்றில் கரைந்தார்கள்.

அவர்கள் இருந்த இடத்தில் தாடியாக வளர்ந்திருந்த விழுதுகளை தடவியபடி மந்திரவாதி தாத்தா நின்று கொண்டிருந்தார்.சிக்கன் சிக்ஸ்டி ஃபைவ் போல் அவர் கண்கள் சிவந்திருந்தன.  அந்தக் கோபத்தை தாங்க முடியாமல் அவரது தொப்பிக்குள் சுருண்டிருந்த கிளி, மேலும் சுருங்கி தலை முடிக்குள் பதுங்கியது!சட்டென சகுனிக்கு விழிப்புத் தட்டியது. செவியில் ஒலித்த குரல் தந்தையுடையதா?

ஆம். அவரைத் தவிர வேறு யாரால் இந்த வாக்கியங்களை உச்சரித்திருக்க முடியும்?
அஸ்தினாபுரியின் சிறைச்சாலை காட்சியாக விரிந்தது. இறக்கும் தருவாயில், தன்னை அருகில் அழைக்கிறார்.
‘‘நினைவில் இருக்கிறதா?’’
‘‘பசுமரத்தாணிபோல் பதிந்திருக்கிறது...’’
‘‘எங்கே சொல்...’’

சொன்னார்.
கேட்டு முடித்த திருப்தியுடன் கண்களை மூடினார்.
அதன் பிறகு பலமுறை சகுனி அந்த வாக்கியங்களை மனதுக்குள் உச்சரித்திருக்கிறார். உறக்கத்தில் சுபாலனும் அதைத் தொடர்ச்சியாக நினைவுபடுத்தியிருக்கிறார்.
இதோ இப்போதும்.மெல்ல மெல்ல அந்த வாக்கியங்களை வாய்விட்டுச் சொன்னார் சகுனி...‘‘எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.

எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்.
எது இன்று உன்னுடையதோ
அதுவே மனித சமூக சாரத்தின் விதை.
முன்னோர்களின் கூட்டு உழைப்பே
நீயாகத் திரண்டிருக்கிறாய்.

ஆனால் -
அறிவார்ந்த திகைப்பில் நீ ஆழ்ந்துவிடும் கணத்தில்
உன் முன் காலத்தின் விபரீத
கருத்துருவம் ‘அரசு’ என்னும்

போர்வையில் தோன்றும்.
அதை எதிர்ப்பது என்பதே
உனக்கான அடையாளம்.
இதுவே உலக நியதியும் எனது படைப்பின் சாராம்சமுமாகும்...’’
அசைபோட்டபடியே தாயத்தை எடுத்து சகுனி உருட்ட ஆரம்பித்தார்...

‘‘நைட் வாட்ச்மேன் பகல் டூட்டியும் சேர்த்துப் பார்க்க முடியாதுன்னு சொல்றான்...’’
‘‘ஏன்..?’’‘‘அவனால ரெண்டு வேளையும் தூங்க முடியாதாம்!’’

‘‘என்ன ஜோசியரே... கூண்டுல இருந்த கிளியைக் காணோம்?’’
‘‘மரக் கிளையில் ரெஸ்ட் எடுக்குது. கஸ்டமர் வந்தா இறங்கி வரும்!’’

‘‘ஆயிரம் பொய்யைச் சொல்லி ஒரு கல்யாணத்தைப் பண்ணலாம்...’’
‘‘அது சரி. நீ எதுக்குப் பத்தாயிரம் பொய் சொல்றே?’’
‘‘கல்யாணத்தை கிராண்டா பண்ணலாமேன்னுதான்!’’
ஏ.நாகராஜன், சென்னை-75.

(அடுத்த இதழில் முடியும்)

கே.என்.சிவராமன்