ராஜபக்க்ஷேவுக்கு செக்!



முதல் நாள் இரவு வரை தன்னுடன் அரசியல் அளவளாவி, விருந்துண்டு சென்ற நண்பன்தான் தனக்கு எதிராக களத்தில் இறங்கப் போகிறான் என்பதை இறுதிநொடியில்தான் ராஜபக்ஷே அறிந்தார்.

ஜனவரி 8ம் தேதி நடக்கவுள்ள இலங்கை ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்ஷேவை எதிர்த்து களம் காணப்போகும் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் மைத்ரிபால சிறிசேனா, கடந்த வாரம் வரை ராஜபக்ஷே அமைச்சரவையில் கேபினட் அமைச்சர். பிரதமருக்கு இணையாக கட்சியிலும், ஆட்சியிலும் ஆளுமை செலுத்தியவர். ஆளும் இலங்கை சுதந்திரா கட்சியின் பொதுச்செயலாளரும் கூட.

புலிகளுக்கு எதிரான போரை முன்வைத்து 2005, 2010 தேர்தல்களில் வென்ற ராஜபக்ஷே, மொத்த அதிகாரத்தையும் தன் வயப்படுத்திக் கொள்ளும் முயற்சியில் இறங்கினார். ‘இரண்டு முறைக்கு மேல் ஒருவர் அதிபர் பதவி வகிக்கமுடியாது’ என்ற இலங்கை அரசியல் சாசனத்தையே தனக்கு சாதகமாகத் திருத்தி எழுதினார். நிர்வாகத்தில் தன் குடும்பத்தினரையே முதன்மைப்படுத்தினார்.

சகோதரர் சமல் ராஜபக்ஷே சபாநாயகர். சகோதரர் பசில், பொருளாதார அபிவிருத்தித் துறை அமைச்சர். சகோதரர் கோத்தபய, ராணுவத்துறை செயலாளர். மகன் நமல், பாராளுமன்ற உறுப்பினர். சமல் ராஜபக்ஷேயின் மகன் சசீந்திர ராஜபக்ஷே, ஊவா மாகாண முதலமைச்சர். திட்டச் செயலாக்கங்கள் அனைத்திலும் குடும்ப ஊடுருவல்.

இலங்கை அரசியலில் குடும்ப ஆதிக்கம் புதிதில்லை. சேனநாயக்க குடும்பம், பண்டாரநாயக்க குடும்பம், விஜேரத்ன குடும்பம், ஹேவாவிதாரண குடும்பம், குணவர்த்தன குடும்பம், திசநாயக்க குடும்பம் என பல குடும்பங்கள் அரசியலில் திளைக்கின்றன. ஆனாலும் ராஜபக்ஷே குடும்பத்தின் உள்ளாடல்கள் மக்களை மிரள வைக்கின்றன.

இச்சூழலில் அடுத்த ஆறாண்டுகளையும் தனதாக்கிக் கொள்ளும் வேகத்தில், இன்னும் இரண்டாண்டு பதவிக்காலம் மீதமிருக்கும்போதே, எதிரி களுக்கு அவகாசம் கொடுக்காமல் அவசர அவசரமாக தேர்தலுக்கு நாள் குறித்தார் ராஜபக்ஷே. அவரின் கணிப்புகள் அனைத்தும் தவறாகிப் போயின.

இலங்கை மக்கள் மிகவும் மதிக்கும் ‘சமூக நீதிக்கான மக்கள் இயக்க’த்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர், இம்முறை ராஜபக்ஷேவுக்கு எதிராக பொது வேட்பாளரை களமிறக்க வேண்டும் என்று குரல் கொடுத்தார்.

சந்திரிகா குமாரதுங்க, இச்சூழலை தக்கவாறு பயன்படுத்திக் கொண்டார். தன் தந்தையால் தொடங்கப்பட்டு, தாயால் வளர்க்கப்பட்டு, தன்னை ஜனாதிபதியாக அமரவைத்த இலங்கை சுதந்திரா கட்சியை முழுமையாக ஆக்கிரமித்து, தன்னையும் வெளியேற்றிய ராஜபக்ஷேவை எதிர்க்க பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியோடு கைகுலுக்கினார். ராஜபக்ஷேயின் குகைக்குள் இருந்தே பொது வேட்பாளரை வென்றெடுத்து விட்டார்கள் இவர்கள்.

மைத்ரிபால சிறிசேனா, மாணவப் பருவத்திலேயே இலங்கை சுதந்திரா கட்சியில் இணைந்தவர். சந்திரிகா அமைச்சரவையில் கேபினட் அமைச்சராக பதவி வகித்தவர். ராஜபக்ஷே அமைச்சரவையில் சுகாதாரத்துறை அமைச்சராகப் பணியாற்றினார்.

 இலங்கை அரசு-விடுதலைப்புலிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் ஆர்வம் காட்டியவர் என்பதைத் தவிர இனப் பிரச்னையில் ராஜபக்ஷேவோடு எவ்விதத்திலும் முரண்படாதவர். 2008ல் கொழும்பு அருகே புலிகள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் நூலிழையில் உயிர் தப்பியவர். 63 வயதான சிறிசேனா, இந்த தேர்தலில் புறா சின்னத்தில் போட்டியிடுகிறார்.

சிறிசேனாவை ராஜபக்ஷே எதிர்பார்க்கவில்லை. மிரட்டல், உருட்டல்கள் சிறிசேனாவிடம் எடுபடாது. கட்சியின் பல முன்னணி தலைகள் ராஜபக்ஷேவைக் கைவிட்டு சிறிசேனாவின் பக்கம் திரும்பத் தொடங்கியிருப்பதும் அவரை திகிலில் ஆழ்த்தியிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளாக தீவிர அரசியலிலிருந்து ஒதுங்கி, சமய நல்லிணக்கப் பணிகளில் ஈடுபட்டு வந்த சந்திரிகாவை மீண்டும் மையம் கொண்டிருக்கிறது இலங்கை அரசியல்.

ராஜபக்ஷேயிடமிருந்து கட்சியை மீட்டு தம் தந்தையின் கனவில் விளைந்த பழைய இலங்கை சுதந்திரா கட்சியை மீட்டுருவாக்கம் செய்யும் நோக்கத்தில் காய் நகர்த்துகிறார். ராஜபக்ஷே குடும்பத்தால் மனம் நொந்த மூத்த தலைவர்களும் அதையே விரும்புகிறார்கள். 

வெற்றி வாய்ப்பு?

புலி வெறுப்பு அரசியலுக்கு இந்த தேர்தலில் மதிப்பில்லை. அடிப்படைப் பிரச்னைகளே முன்நிற்கப் போகின்றன. ராஜபக்ஷே மீதான ஹீரோயிசமும், நம்பிக்கையும் தளர்ந்துவிட்டது. விலைவாசி உச்சம் தொட்டிருக்கிறது. இலங்கையை ராணுவமயமாக்கி விட்டார் என்ற விமர்சனத்துக்கு ஆளாகியிருக்கிறார் ராஜபக்ஷே. வடக்கு, கிழக்கு பகுதிகள் மட்டுமின்றி, சிங்களப் பகுதிகளிலும் ராணுவ ஆட்சியே நடக்கிறது. கட்டுப்பாடில்லாமல் உலவும் சீன மீனவர்கள் சிங்கள மீனவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கிறார்கள்.

இப்படியான பிரச்னைகள் ராஜபக்ஷேவுக்கு சரிவைத் தரலாம். சிங்கள மக்களின் வாக்குகள் சிதறும். அதனால் தமிழ், முஸ்லிம் சிறுபான்மை ஓட்டுக்களே வெற்றியைத் தீர்மானிக்கும். ராஜபக்ஷே கூட்டணியில் அங்கம் வகிக்கும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் மிகுந்த அதிருப்தியில் இருப்பதோடு, இரு வேட்பாளர்களையும் சமதூரத்தில் வைத்துப் பார்க்கப்போவதாக அறிவித்து விட்டது.

இந்த தேர்தல் தமிழர்களிடம் எந்த எதிர்பார்ப்பையும் உருவாக்கவில்லை. ஓட்டை முன்னிறுத்தி சில கோரிக்கைகள் வைக்கப்படலாம். அந்த அளவுக்கு மட்டுமே இத்தேர்தல் உதவக்கூடும். இதுபற்றி தமிழரசுக் கட்சி யின் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவிடம் பேசியபோது, ‘‘தற்போதைக்கு நாங்கள் எந்த முடிவும் எடுக்கவில்லை. எது பேசினாலும் அது ஆபத்தையே விளைவிக்கும். தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு தான் எங்கள் நிலைப்பாட்டை அறிவிப்போம்’’ என்றார்.

பல்வேறு நாடுகளின் எதிர்ப்புகள், மனித உரிமை மீறல், போர்க்குற்ற விசாரணை என பல கத்தி களை தலைக்கு மேல் சுமந்து கொண்டிருக்கும் ராஜபக்ஷேவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் தேர்தல் இது. ராஜபக்ஷே, எந்தவிதமான யுக்தியைப் பயன்படுத்தப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் அச்சமும் இலங்கையைச் சூழ்ந்திருக்கிறது. எனவே, தேர்தலைக் கண்காணிக்க ஐ.நா.சபை, காமன்வெல்த் அமைப்புகளின் பார்வையாளர்கள் வர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.

 வெ.நீலகண்டன்