மீண்டும் மிரட்டும் பறவைக் காய்ச்சல்!



எபோலா குறித்த பயம் விலகாத சூழலில், மிரட்டும் மற்றொரு கொள்ளை நோயாக வந்திருக்கிறது பறவைக் காய்ச்சல். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு உலகையே நடுங்க வைத்து விட்டு சற்றே அடங்கியிருந்த பறவைக் காய்ச்சல், கடவுளின் தேசமான கேரளா வழியாக இப்போது ரீ - என்ட்ரி கொடுத்திருக்கிறது.

குமரகம் பறவைகள் சரணாலயத்துக்கு வந்த வெளிநாட்டுப் பறவைகள், இதை அங்கிருந்த வாத்துகளுக்குக் கொடுக்க, ஆலப்புழை, கோட்டயம், பந்தனம்திட்டா மாவட்டங்கள் பதற்றத்தில் உள்ளன. லட்சக்கணக்கான வாத்துகளை அழிக்கும் நேரத்தில் இது பிராய்லர் கோழிப்பண்ணைகளுக்கும் பரவியிருப்பது புது தலைவலி!

வாத்துக் குஞ்சுகளுக்கு 100 ரூபாய், பெரிய வாத்துகளுக்கு 200 ரூபாய் என நஷ்டஈடு கொடுத்து, நோய்த்தொற்று தாக்கிய பகுதிகளில் பறவைகள் கொத்துக் கொத்தாக அழிக்கப்படுகின்றன. இந்தப் பகுதியில் உப்பங்கழிகள் நிறைய. நோய் தாக்கிய பறவைகளை யாராவது இந்தக் கால்வாய்களில் போட்டுவிட்டால், எங்கும் நோய் பரவி விடும் என்பதால் கண்காணிப்பு தீவிரமாகி இருக்கிறது.

ஃப்ளூ வைரஸ் என அழைக்கப்படும் குடும்பத்தின் பங்காளிதான் இந்தப் பறவைக் காய்ச்சலும். இதில் ஏகப்பட்ட ரகங்கள் உண்டு. எனினும் இவற்றில் ஐந்து ரகங்களே ஆபத்தானவை. இவை மட்டுமே மனிதர்களுக்குப் பரவுகின்றன. இதிலும் குறிப்பாக பி5ழி1 என்ற ரகம்தான் பயங்கரம். இது தாக்கியவர்களில் நூற்றுக்கு 60 பேரை சாகடித்து விடும் வல்லமை பெற்றது. எனவேதான் பறவைக் காய்ச்சலை இவ்வளவு எச்சரிக்கையோடு உலகம் பார்க்கிறது.

பொதுவாக பறவைக் காய்ச்சல் எல்லோருக்கும் வந்துவிடுவதில்லை. நோய் தாக்கிய பறவைகளைக் கையாள்பவர்கள், இறைச்சியைத் தொடுபவர்கள் என நேரடியாகவோ, மறைமுகமாவோ பறவைகளுடன் தொடர்பு கொள்பவர்களையே தாக்குகிறது. நோய் தாக்கிய கோழி அல்லது வாத்தின் இறைச்சி மற்றும் முட்டையை நன்கு வேக வைத்துச் சாப்பிடுபவர்களுக்கு இது தொற்றாது. ஆனாலும் இந்த இறைச்சியும் முட்டையும் சமைக்காதபோது நோய் பரப்பும் என்பதால்தான் பள்ளம் தோண்டி, கிருமிநாசினி தெளித்துப் புதைக்கிறார்கள்.

குறிப்பாக ஆசிய நாடுகளைச் சுற்றிச் சுற்றித் தாக்கும் பறவைக் காய்ச்சல், இந்தோனேஷியாவிலும் எகிப்திலும்தான் அதிகம் பேரை சாகடித்திருக்கிறது. கடந்த 2008ம் ஆண்டில் மேற்கு வங்காளத்தை கதிகலங்கச் செய்தபிறகு இந்தியாவில் இதன் சுவடுகள் இல்லாமல் இருந்தது.

இந்தியாவில் இது மனிதர்கள் யாரையும் சாகடித்ததில்லை என்பதுதான் ஒரே ஆறுதல்!நூறாண்டுகளுக்கு முன்பு இத்தாலியில்தான் இந்த வைரஸ் முதலில் கண்டறியப்பட்டது. அதன்பின் சுற்றிச் சுற்றி ஆசிய, ஆப்ரிக்க நாடுகளையே தாக்கியது. கடந்த 2005ம் ஆண்டு இது மீண்டும் ஐரோப்பாவைத் தொட்டபோதுதான், மேற்கத்திய நாடுகள் அலறியடித்துக் கொண்டு தடுப்பு மருந்து களைக் கண்டறிவதில் தீவிரம் காட்டின.

அதி பயங்கர டைப்பான   பி5ழி1   முதன்முதலில் தென் ஆப்ரிக்காவில் கண்டறியப்பட்டது. பொதுவாக இப்படி பறவைகள், விலங்குகளிலிருந்து மனிதர்களுக்குத் தொற்றும் நோய்களுக்கு ஒரு குணம் உண்டு. அதாவது, அது ஒரு மனிதனிடமிருந்து இன்னொரு மனிதனுக்குப் பரவாது. ஆனால் இந்த டைப் மட்டும் வியட்நாமில் ஒரு குடும்பத்தில் ஒருவரிடமிருந்து மற்றவர்களுக்குப் பரவ ஆரம்பித்ததும் உலக மருத்துவர்களிடம் பதற்றம் தொற்றிக் கொண்டது.

இப்படி நோய் தொற்றிய ஒருவர் இறந்தும் போனார். நல்லவேளையாக அதன்பின் இப்படிச் சம்பவங்கள் இல்லை. பொதுவாக ஃப்ளூ வைரஸ்கள் தங்கள் வடிவமைப்பை அடிக்கடி மாற்றிக் கொள்ளும் வல்லமை பெற்றவை. இப்படி மனிதர்களிடமிருந்து மனிதர்களுக்குப் பரவும் அபாயத் தொற்றாக இது மாறினால், உலகம் இதை எதிர்கொள்ள முடியாமல் நிலைகுலைந்து போகும்.

பறவைக் காய்ச்சல் தாக்கிய ஏழு நாட்களுக்குள் அறிகுறிகள் தெரிய ஆரம்பிக்கும். 100 டிகிரிக்கும் மேற்பட்ட கடுமையான ஜுரம், இருமல், தொண்டை எரிச்சல், மூச்சு விடுவதில் சிரமம், குரல் கட்டையாகிப் போவது, மூச்சு இழுக்கும்போது விநோதமான ஓசை எழுவது, நெஞ்சு வலி, அடி வயிற்று வலி ஆகியவை இதன் அறிகுறிகள். சிகிச்சையாக டாமிஃப்ளூ மாத்திரை தருவார்கள்.

-அகஸ்டஸ்