மனக்குறை நீக்கும் மகான்கள்



ஸ்ரீஅரவிந்த அன்னை

அந்தப் பிரதேசத்திற்குள் நுழையும்போதே வார்த்தையாக்க முடியாத ஒரு குதூகலம் பிறக்கிறது. பிரெஞ்சு தேசத்தின் ஏதோ ஒரு தெருவில் உலவுவது போன்ற பிரமை. நேர்த்தியான வீதி. சைக்கிள்களில் விரையும் அரை நிக்கர் அணிந்த வெளிநாட்டவர்கள். கைகளில் குழந்தைகளைப் பிடித்தபடி நடக்கும் உள்ளூர்வாசிகள். சூரியன் மெல்ல எழுந்து கொண்டிருந்தான்.

கட்டிடங்களில் வெயிலும் கட்டிட உயரங்கள் நிழலுமாய் இருக்க, அந்தப் பாரம்பரிய, புனிதம் வாய்ந்த வளாகத்திற்குள் செல்லக் காத்திருக்கும் நீண்ட வரிசையில் நாமும் பொருத்திக்கொள்கிறோம்.    

ஓரிரு நிமிடங்கள் நகர்வுக்குப் பிறகு பூக்கள் பூத்துக் குலுங்கும் வளாகத்தினுள் நுழைகிறோம். மெல்லிய குளுமையும் அடர்த்தியான அமைதியும் நிறைந்த சூழலில் நாம் சுவாசிப்பது கூட சப்தமாய்ப் படுகிறது. சராசரியான உயரத்தோடு ஆதிசேஷன் குடை விரித்தது போன்று அழகாய் ஒரு மரம். அதன் கீழே மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ஜீவசமாதி.

ஓர் ஓரமாய் அமர்கிறோம். மெல்லிய பூ வாசம். மனதுள்ளே பேரிரைச்சல். ‘என்னால் இந்த அமைதியை ஏற்றுக்கொள்ள முடியாது’ என கூச்சல் போடும் மனசு. ‘இல்லை... நீ ஒடுங்கியே தீர வேண்டும்’ என எங்கிருந்தோ வரும் கட்டளை. இனி முடியாது எனப் பல வண்ணங்கள் காட்டி சின்னப் புள்ளியாய் மாறி உள்ளே.. உள்ளே... உள்ளே... சென்று மனசு காணாமல் போகிறது.

‘எனக்கு எதுவும் இல்லை. வலி இல்லை. வேதனை இல்லை. கனவு இல்லை. கடன் இல்லை. செல்வம் இல்லை. வறுமை இல்லை. எதிரி இல்லை. நண்பன் இல்லை. வெயில் வாட்டாது. தீ என்னைச் சுடாது. மழை என்னை நனைக்காது. குளிர் என்னை வதைக்காது. எனக்கு ஜனனமும் இல்லை. மரணமும் இல்லை. எப்போதும் நிரந்தரமான பேரானந்தத்தில் திளைக்கும் ஆன்மா நான்’ என உணர்தலின் விளிம்பில் நிற்கும் சுகம்.

‘ஆஹா... இந்த உணர்வு நன்றாக இருக்கிறதே’ என நினைக்கும்போதே நாம் கலைந்து போகிறோம்... கரைந்து போகிறோம். ஏதோ ஒரு சக்தி, நம்முள் இருக்கும் கவலைகளை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் களைந்து எறிகிறது. மெல்ல தலை கோதி, ‘நான் இருக்கிறேன்’ என முதுகு தட்டுகிறது. உள்ளம் மார்கழிப் பனியாய் குளிர, மனசு பௌர்ணமி நிலமாய் நிர்மலமாகிறது.மகான்களின் ஸ்பரிசம் நிகழ்த்தும் மாயாஜாலம் இது.இந்த இடத்தின் மகத்துவம் இது.

அட! அது எந்த அதிசய இடம்?

புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம்தான் அந்த இடம்.

பகவான் ஸ்ரீஅரவிந்தரும் அன்னையும் அருள் பரப்பும் ஜீவசமாதிதான் அந்தப் புண்ணிய பூமி. இவர்களது திருமுகத்தை மனதில் இருத்துவதே மனம் மலர்த்தும் மந்திரம். வாய் விட்டு ஏதும் சொல்ல வேண்டாம். ‘எனக்கு இதைக் கொடு’ என்று கேட்க வேண்டாம். அந்தப் புனித பூமியின் காற்றில் கலந்திருக்கும் பூ வாசம் மூச்சில் கலந்து நம் அத்தனை பிரச்னைகளையும் காற்றில் கரைத்து விடும்.

சரி... அரவிந்தர் யார்? அன்னை யார்?
இருவரும் வேறு வேறில்லை. ஒன்றுதான்.

இந்தியாவின் விடுதலை வேள்வி யில் தொடங்கி, ஞான வேள்வி யில் கலந்த மகான் அரவிந்தர். அரவிந்த் அக்ராய்ட் கோஷ் இவரது இயற்பெயர். 1872 ஆகஸ்ட் மாதம் 15ம் தேதி கொல்கத்தாவில் இந்த ஞானத் தாமரை பூத்தது. அப்பா கிருஷ்ண தன கோஷ். அம்மா ஸ்வர்ணலதா.அரவிந்தர் தனது ஆரம்பக் கல்வியை டார்ஜிலிங்கில் லொரெட்டா கான்வென்ட்டில் தொடங்கினார்.

1879ல் தன் சகோதரர்களுடன் இங்கிலாந்து சென்ற அரவிந்தர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். 14 ஆண்டுகள் வெளிநாட்டில் உலக இலக்கியம், வரலாறு, புவியியல் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அரவிந்தர், 1893ல் நாடு திரும்பினார். அப்போது அரவிந்தருக்கு 21 வயது. அப்பொழுதே லத்தீன், கிரேக்கம், ஆங்கிலம் அத்தனையும் அத்துபடி.

அரவிந்தரின் தந்தை, தன் மகனை ஒரு வெள்ளைக்கார துரையைப் போலவே வளர்த்த காரணத்தினால் அரவிந்தருக்கு தாய்நாடு திரும்பியபோது, அவரது தாய்மொழியான வங்காளம் கூடத் தெரிந்திருக்கவில்லை. தாய்நாட்டின் பண்பாட்டினைப் பற்றி ஏதும் அறிந்திருக்கவில்லை. இந்தியா மூடப்பழக்க வழக்கங்கள் நிறைந்த நாடு, நிர்வாண சாமியார்களும் பாம்பாட்டிகளும் நிறைந்த தேசம் என்றே வெளிநாட்டவர்கள் போல நினைத்தார்.

ஆனால் அவருக்கு ஓர் ஆச்சரியம். எத்தனை ஏழையாக இருந்தபோதும் இம்மக்கள் எப்படி நல்ல சிந்தனையோடும் பண்புகளோடும் இருக்கிறார்கள் என்று சிந்தித்தார். இதற்குக் காரணம் ராமாயணமும் மகாபாரதமும் என அறிந்து அதை முதலில் படித்து வியந்தார். இந்நிலையில் மிருணாளினியோடு திருமணம் முடிந்தது. இல்லற வாழ்வில் இருக்கும் ஈடுபாட்டை விட, தேச விடுதலைக்காக உழைக்க வேண்டும் என்கிற வேட்கை தீயாய் எரிந்தது. அரவிந்தர் தேச விடுதலைப் போராட்டத்தில் தீவிரமானார்.

அப்போது அரவிந்தர் தனது மனைவி மிருணாளினிக்கு எழுதிய கடிதத்தில், ‘சாமான்யமாகப் பலர் இந்த நாட்டை வெறும் மைதானங்களும் வயல்களும் காடுகளும் குன்றுகளும் நதிகளும் உடையதோர் உயிரற்ற பொருளாகக் கருதுகின்றனர்.நான் இதனைத் தாயாக அறிந்திருக்கின்றேன்; தாயாகவே மதித்துத் தொழுகின்றேன். தாயின் மார்பிலே ஓர் அசுரன் வந்து உட்கார்ந்து கொண்டு அவளது ரத்தத்தை உறிஞ்சினால் அப்போது மகன் என்ன செய்வான்? கவலை ஏதுமின்றி உண்டு களித்துத் தன் மனைவி, மக்களுடன் மகிழ்ச்சியுடன் நேரத்தைக் கழிப்பானா? தனது தாயை ரட்சிக்க வழி தேடுவான் அல்லவா?

வீழ்ச்சியடைந்துள்ள இந்நாட்டைக் காப்பாற்றும் வல்லமை எனக்கு உண்டு என்பதை நான் அறிந்திருக்கின்றேன். எனக்கு உடல் பலம் இல்லாதிருக்கலாம். ஆனால் நான் வாளினாலோ, துப்பாக்கியாலோ போரிடப் போவதில்லை.

அறிவின் பலத்தால் யுத்தம் நடத்தப் போகிறேன்’ என்று பகிர்ந்துள்ளார்.‘வந்தே மாதரம்’ இதழில் ஆங்கில அரசுக்கு எதிராக எழுதிக் குவித்தார். ஒவ்வொரு கட்டுரையும் தேசப் போராட்ட நெருப்பை நாடெங்கும் பரப்பி ஆங்கிலேயர்களை கோபத்தில் கொதிக்க வைத்தது.

விளைவு... அரவிந்தருக்கு ஓராண்டு காலம் சிறைவாசம். சிறை வாழ்க்கை தவ வாழ்க்கையாய் சமைந்தது. சிறையில் கீதை படித்தார், வேதம் படித்தார். யோக மார்க்கத்தில் விவேகானந்தரின் வழிகாட்டுதலும் கிருஷ்ண தரிசனமும் அரவிந்தரை ஞானத் தாமரையாய் மலரச் செய்தன. 1910ல் ஷாம்சுல் ஆலம் கொலை வழக்கில் அரவிந்தர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனால் அங்கிருந்து தப்பித்து, பல இடங்களில் மறைந்து வாழ்ந்து, ஆங்கிலேயர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்க விடுதலை வீரர்களின் புகலிடமான பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்த புதுச்சேரி வந்தடைந்தார். அரவிந்தரை பாரதியார் வரவேற்று உபசரித்தார். தொடர்ந்து ஆசிரமம் அமைத்து யோக வாழ்வைத் தொடர்ந்தார்.

1947ல் அரவிந்தர் தனது சுதந்திர தின உரையில், ‘‘இந்தியா தனது ஆன்மிகக் கொடையை உலகிற்கு வழங்க வேண்டும். முன் எப்போதும் இல்லாத அளவிற்கு இந்தியாவின் ஆன்மிகம் ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் எட்டியுள்ளது.

இந்தப் போக்கு இன்னும் வளரும், காலத்தின் பேரழிவு நர்த்தனங்களையும் தாண்டி, ஒரு நம்பிக்கையுடன் மேலும் மேலும் பல கண்கள் இந்தியாவை நோக்கி திரும்பும். அவளிடமுள்ள தத்துவ பெட்டகங்களை நாடி மட்டுமல்ல, அவளுடைய உள்முக, ஆன்மிகப் பயிற்சியையும் நாடி திரும்பும்’’ என்றார். பாரத விடுதலைக்கு உழைத்த அரவிந்தரின் அவதார தினமும் ஆகஸ்ட் 15.

மானுட வாழ்வு தெய்வீக வாழ்வாக மலர வேண்டும் என தவம் செய்த இவர் அமரத்துவம் அடைந்த நாள், 1950 டிசம்பர் 5. சரி, அன்னை?அரவிந்தரின் ஞான வாழ்வில் இணைந்தவர்தான் அன்னை. அன்னையை ‘பராசக்தி’ என்று தான் அரவிந்தர் சொல்கிறார். பிரான்ஸ் நாட்டில் ஒரு செல்வந்தருக்கு மகளாகப் பிறந்தவர் அன்னை. மிரா அல்ஃபாஸா என்பது பெற்றவர்கள் வைத்த பெயர். பகவான் ராமகிருஷ்ணருக்கு எப்படி சுவாமி விவேகானந்தரோ, அதே போலத்தான் மகரிஷி அரவிந்தரின் செயல் சக்தி அன்னை. அன்னையை வணங்குவதும் அரவிந்தரை வணங்குவதும் ஒன்றே!

அரவிந்த-அன்னை வழிபாட்டில் மலர்கள் மிகுந்த முக்கியத்துவம் பெறுகின்றன. அரவிந்த அன்னையிடம் நம் தேவைக்கான கோரிக்கையை மலர்கள் கொண்டு சேர்க்கின்றன என்பது நம்பிக்கை. பக்தியில் ஆர்வம் பெருக பவழமல்லி, தெளிவான மனதிற்கு மனோரஞ்சிதம், பாதுகாப்புத் தேவைக்கு காகிதப்பூ என நீள்கிறது அந்தப் பட்டியல்.

அரவிந்த-அன்னையின் சக்தி நிறைந்த அந்த இடத்தில் அமர்ந்திருந்த நமக்குள் தேசத்தின் மீது காதலும் தெய்வீகத்தின் மீது பக்தியும் எப்போதும் அரவிந்த அன்னையின் அருகிலேயே இருக்கும் அந்த மரத்தின் மீது பொறாமையும் எழ... அன்னையிடம் கண் மூடிக் கேட்கிறோம்...

‘‘ஹே ஜனனி... ஜகன்மாதா... உலகை எல்லாம் காத்து அருள்பவளே! உன் தாமரைப் பாதத்தில் என் சிரசை வைத்து வணங்குகிறேன்.என் இதயத்துக்கு நெருக்கமானவளே... பிரபஞ்சப் பேருருவே... உன் பெயரைச் சொல்லும்போதே என் இதயம் ஆனந்தத்தால் நிறைகிறது. உன்னைப் பற்றிச் சொல்வது என்பது அத்தனை எளிதா?

உன்னைப் புரிந்துகொண்டால் அல்லவா உன்னைப் பற்றிப் பேச முடியும்.
உன்னைப் புரிந்து கொள்வது என்பது அறிவால் சாத்தியமாகுமா?
கற்றுக் கொண்ட வித்தைகள்
உன்னைப் புரிய வைக்குமா?

மொழித்திறன் உன் பொருட்டு என்ன செய்ய முடியும்?
எதுவும் உதவாது!இதை எல்லாம் அறிந்தே பூரணமாக உன்னைச் சரணடைகிறேன்.
உன்னை வெளிப்படுத்திக்கொள்வது என்பது உன் விருப்பம்தான்.

நீ விரும்பினால் மட்டுமே உன் சரிதம் எண்ணமாய் உதிக்கும்.
வார்த்தையாய் பூக்கும்.
மூடனான ஒருவனை காளிதாசனாய் மாற்றிய கருணையே...
காளமேகமாய் மாற்றிய இனிமையே...
பேச இயலாத மூகனை பெருங்கவியாக்கிய பெருமழையே....

உன் மகா காவியத்தை மனதுள் மழையெனப் பொழிவாயாக!
அன்னையே... என் இதயத்தில் ஒரு தாமரை பூத்திருக்கிறது. அதை ஆசனமாய் ஏற்று அமர்ந்துகொள்! கருணை வீசும் உன் கண்கள் எங்கள் மனக் கொதிப்பை சமன்படுத்தி அமைதி தரட்டும்.

புன்னகை சிந்தும் உன் உதடுகள் உனது இனிய சரிதத்தை எங்களுக்குச் சொல்லட்டும். அரவிந்த அன்னையே... நீயே மகாசக்தி. நீயே மாகாளி... நீயே பராசக்தி! உங்களது அமுத சரிதம் பூக்கட்டும்’’ என வேண்டுகிறோம். அரவிந்த அன்னை மெல்லச் சிரிக்கிறாள். அமுத சரிதம் நம்முள் பூவாய் மலரத் தொடங்கியது.

(பூ மலரும்)

எஸ்.ஆர்.செந்தில்குமார்