பழகு



அக்கம்பக்கம் எல்லோருமே ராமாயியை எச்சரிக்கை செய்தார்கள்... ‘‘உன் புள்ளையை அந்த நாலாவது வீட்டுப் பணக்காரப் பையனோடு பழக விடாதே. அவன்கிட்ட இருந்து இவனுக்கும் ஊதாரித்தனமும் ஆடம்பரக் குணமும் வந்துடும்!’’ராமாயிக்கும் அதே யோசனைதான். உறுதியுடன் கிளம்பிப் போய் அந்த வீட்டுப் பெண்மணியைச் சந்தித்தாள்...

 ‘‘மேடம், சொன்னா தப்பா எடுத்துக்காதீங்க... நாங்க ஏழைங்க. நீங்களோ நல்ல வசதி படைச்ச குடும்பம். நம்ம ரெண்டு பேர் பிள்ளைகளும் சேர்ந்து பழகறது அத்தனை நல்லதா படலே. என் பையனும் உங்க பிள்ளை மாதிரி வாழணும்னு ஆசைப்பட்டா, நாங்க எங்கே போவோம்? சொல்லுங்க பார்க்கலாம்?’’ - ஆவேசமாகக் கேட்டாள் ராமாயி.

அந்தப் பெண்மணி அமைதியாக தாழ்ந்த குரலில் பதில் கொடுத்தாள்:‘‘நீங்க உங்க பக்கத்து நியாயத்தைச் சொல்லிட்டீங்க... நான் என் பக்கத்து விருப்பத்தைச் சொல்லிடறேன். வறுமைன்னா என்னன்னு புரியணும்னுதான் நான் என் பிள்ளையை உங்க பையனோடு பழக விடறேன்! இதனால எந்தக் கெட்ட பழக்கமும் ரெண்டு பேருக்கும் வராம நாம பார்த்துக்கலாம். வீணா கவலைப்படாதீங்க!’’‘‘நியாயம்தாங்க!’’ எனத் தலையாட்டி விட்டுத் திரும்பினாள் ராமாயி.                                      

பம்மல் நாகராஜன்