கட்டு மரத்தின் கடைசி மனிதன்!



காசிமேட்டு தண்ணீரில் ஒரு கண்ணீர்க் கதை

‘வாலே... கொண்டாலே... கட்டுமரம் கொண்டாலே... குண்டு மீன அள்ளி வரக் கொண்டாலே’ - ஜாலியாய் நாம் பாட்டு கேட்டு ரசிக்கிறோம். ஆனால், கட்டுமரம் என்ற தமிழனின் கண்டுபிடிப்புக்கு ஏற்பட்டிருக்கும் அவல நிலை இதுவென்பது கண்ணனைச் சந்தித்தபிறகுதான் தெரிகிறது.

ஆம், கட்டுமரத்தில் கடல் நடுவே பயணித்து மீன் பிடித்த காலம் போய் விட்டது. இப்போது கரையைத் தொடமுடியாத பெரிய படகுகளிலிருந்து மீன்களை கரைக்கு எடுத்து வரும் எடுபிடி வேலையைச் செய்து கொண்டிருக்கிறது கட்டுமரம்.

மோட்டார், ஃபைபர் படகுகளின் ஆதிக்கத்தால் அருகி அருகி... இப்போது மாபெரும் சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலேயே மொத்தம் நூறு கட்டுமரங்கள் இருந்தால் அதிசயம். ‘‘நீங்களே ஃபீல் பண்றீங்க... எனக்கு இது பொழப்பு சார். எனக்கு எவ்வளவு கஷ்டம் இருக்கும்!’’ என தத்துவச் சிரிப்பை உதிர்க்கிறார் கண்ணன். ‘கட்டுமரம் உருவாக்கும் பாரம்பரிய நிபுணர்களில் கடைசி வாரிசு’ எனலாம் கண்ணனை!

‘‘பாண்டிச்சேரி பக்கத்துல இருக்கற கோட்டகுப்பம் கிராமம் சார் எனக்கு. எங்கப்பா கட்டுமரம் கட்டுறதுல எக்ஸ்பர்ட். எனக்கு ஆறாவதுக்கு மேல படிப்பு ஏறல. அப்பாகிட்ட தொழிலைக் கத்துக்கிட்டேன். ஆரம்பத்துல தினம் ஆயிரம், ரெண்டாயிரம்னு சம்பாதிப்பேன். ஒரு கட்டுமரம் கட்டுனா ஐயாயிரத்துல இருந்து ஆறாயிரம் ரூபாய் வரைக்கும் நிக்கும். ஆனா, எங்க அப்பா காலம் மாதிரி எங்க காலம் இல்ல.

 சுமார் பதினைஞ்சு, இருபது வருஷத்துக்கு முன்னயிருந்து ஃபைபர் போட் வர ஆரம்பிச்சுது. அப்புறம் கட்டுமரம் கட்டுறவங்க குறைஞ்சுட்டாங்க. சொந்த ஊருல சுத்தமா தொழிலு படுத்துட்டதுனாலதான் காசிமேடு வந்தேன். இங்கயும் மந்தம்தான். ஏற்கனவே கட்டிக் கொடுத்த கட்டுமரத்தையெல்லாம் ரிப்பேர் பண்றதுதான் இப்ப நமக்கு வேலை!’’ என்ற கண்ணன், கட்டு மரம் செய்யும் தொழில்நுட்பத்தையும் நம்மிடம் பகிர்ந்தார்...

‘‘அல்பிசாங்கிற ஒருவகை மரம்தான் இதுக்கு தோதானது. இது கேரளாவுலயும், கன்னியாகுமரியில சில இடங்கள்லயும் கிடைக்குது. தீக்குச்சி செய்யறதெல்லாம் இந்த மரத்துலதான். தண்ணியில போட்டா தக்கை மாதிரி மெதக்கும். எவ்வளவு ஆளுங்க போறாங்கன்றதைப் பொறுத்து கணக்குப் போட்டு கட்டுமரத்தை சைஸா பண்ணணும். நாங்க முழம் கணக்குல தான் அதை அளப்போம். ஒரு அஞ்சாறு பேரு போறதுக்குன்னா, முப்பதுக்கு அஞ்சு. மூணு பேரு போறதுன்னா, பதினஞ்சுக்கு ரெண்டு.

ஒரு கட்டுமரத்துல ஆறு பலகை இருக்கும். எல்லா பலகையும் ஒண்ணோட ஒண்ணு செட் ஆவுற மாதிரி சீவணும். அதான் வேலை. அப்புறம் வெயில்லயும் உப்புத்தண்ணியிலயும் அவிழ்ந்துடாத மாதிரி எல்லாத்தையும் சேத்துக் கட்டணும்.

கட்டுமரம்ங்கறது ஃபைபர் போட்டு மாதிரி தண்ணிய உள்ள வராம தடுத்து மெதக்குறதில்ல. பலகைங்களுக்கு நடுவுல கேப் இருக்கும், தண்ணியும் உள்ள வரும். ஆனாலும் செய்யிற வாகால அது மெதக்குது. நீளமும் அகலமும் கரெக்டா இருந்தாதான் அந்த வாகு வரும்.

ஆனா, கட்டுமரம் செஞ்ச சில பேரு இந்தக் கணக்கையெல்லாம் காத்துல உட்டுட்டாங்க. நாலு பலகை, நீட்டு கம்மின்னு கேக்குறவங்களுக்கு கேக்குற மாதிரி செஞ்சு குடுத்துத்தான் கட்டுமரத்து மேல ஒரு மரியாதையே இல்லாம பண்ணிட்டாங்க. ஃபைபர் வந்த பிறகு, ‘ரெண்டுத்துக்கும் என்னா பெரிய வித்தியாசம்? நாம ஃபைபரே வாங்கலாமே’ன்னு மீனவன் நினைச்சான்னா அதுக்கு இந்த வேலைதான் காரணம்.

ஆனா, ஒண்ணு சொல்றேன் சார்... உண்மையான கட்டுமரம் மாதிரி மீனவன் உயிருக்கு பாதுகாப்பை எந்த ஃபைபர் போட்டும் தராது. ஏதோ தப்பாகி ஃபைபர் போட்டு உடைஞ்சுட்டா அவ்வளவுதான். என் ஃப்ரெண்டு ஒருத்தனே ஃபைபர் போட்டுல போயி அநியாயமா செத்துட்டான். ஆனா, கட்டுமரத்துல கடைசி துண்டு மிச்சமிருக்குற வரைக்கும் அதைப் புடிச்சிக்கிட்டு கரையேறிட முடியும்’’ என்ற கண்ணனின் பேச்சில் தொழில் குறித்த விரக்தியும் ஆதங்கமும் தூக்கல்.

‘‘கட்டுமரம் கட்ட மரத்துக்கு 30 ஆயிரம் ஆகும். கூலியெல்லாம் சேர்த்து 35 ஆயிரத்துக்குள்ள முடிச்சிரலாம். ஆனா, ஃபைபர் போட்டுக்கு லட்சக்கணக்குல செலவாகுது. அந்தக் காலத்துல கட்டுமரத்தை தனியாளா இறக்கி, துடுப்பு வலிச்சி, காத்தை கன்ட்ரோல் பண்ண பாய்களை யூஸ் பண்ணி ரொம்ப தூரம் போயிட்டு வந்தாங்க.

அந்த உழைப்பு, இப்ப இல்லாம போயிடுச்சு. எல்லா வேலையையும் இப்ப மோட்டார் செய்யுது. வாழ்க்கை சொகுசாகிடுச்சு. மீன் புடிக்கிறவனுக்கே இப்ப சுகரெல்லாம் வருது.
 
ஆனா, எதையும் தப்பு சொல்ல முடியாது. கட்டுமரம்னா குறிப்பிட்ட தொலைவு தான் போவ முடியும். முன்னெல்லாம்,  கரையோரத்துல உள்ள சின்ன வகை மீனுங்களை கட்டுமரத்துல புடிச்சி வாழ்க்கை நடத்திக்கிட்டிருந்தாங்க. ஆனா இப்ப, கரையோரத்துல மீனுங்களே இல்ல.

பெரிய எஞ்சின் வச்ச டிராவ்லர் போட்ல போயி மீன் குஞ்சு வரைக்கும் அள்ளிடறாங்க. ஃபைபர் போட்டு வச்சிருக்கவங்களே வாழ்க்கைப் பாட்டுக்கு என்ன செய்யறதுன்னு தெரியாம ஆபத்தான தூரம் வரைக்கும் போயி மாட்டிக்கறாங்க.

இதுல கட்டுமரத்தை வச்சிக்கிட்டு என்ன செய்வாங்க பாவம். எந்த போட்டுல போனாலும் மீனுதான் சார் முக்கியம். அது இல்லாட்டி, என்னா பேசி என்னா ஆவப் போவுது சொல்லு!’’‘‘ஏதோ தப்பாகி ஃபைபர் போட் உடைஞ்சுட்டா அவ்வளவு தான். ஆனா, கட்டுமரத்துல கடைசி துண்டு மிச்சமிருக்குற வரைக்கும் அதைப் புடிச்சிக்கிட்டு கரையேறிட முடியும்!’’

 டி.ரஞ்சித்
படங்கள்: புதூர் சரவணன்