மகிழ் திருமேனி பேட்டி
‘மீகாமன்’, ஆக்ஷன் த்ரில்லர். ஆனால், யதார்த்தமோ, லாஜிக்கோ எந்த இடத்திலும் மீறாத படமா இருக்கும். தொழில்நுட்ப நேர்த்தியிலும் மிஞ்சி நிற்கணும் என்பது என் ஆசை. அப்படி வந்திருக்கு என்று நீங்களும் நினைக்கும் பட்சத்தில் அது வெற்றிப் படம். ‘மீகாமன்’னா இன்னும் பக்கத்தில் போனால் ‘கப்பலின் கேப்டன்’னு பொருள் வரும்.
அப்படின்னா ஆர்யா கப்பல் கேப்டனா வர்றாரானு கேட்டால், இல்லை. ஆனால், கடலில் நடக்கிற அனேக விஷயங்கள் இதில் இருக்கு. ‘மீகாமன்’ என்பது ஒரு குறியீடு!’’ - இன்னும் ‘மீகாமன்’ பற்றிப் பேசத் தயாராகிறார் இயக்குநர் மகிழ் திருமேனி. ‘தடையறத் தாக்க’ படத்தில், ‘அட’ போட வைத்தவர். கௌதம் மேனனின் சீடர்.
‘‘ஆர்யா ‘மீகாமனில்’ உள்ளே வந்தது எப்படி?’’
‘‘ஒரு திடகாத்திரமான கேரக்டர். அவருக்கு தலைமைப் பண்பும், துணிச்சலும், உடனே முடிவெடுத்து வழிநடத்துற திறனும் இருக்கணும். ஸ்கிரிப்ட் எழுதி முடிச்சதும் தேடும் படலம் ஆரம்பமாச்சு. என்கிட்ட நல்லதா ஒரு ஸ்கிரிப்ட் இருக்குங்கற செய்தி ஆர்யா காதுக்குப் போயிருக்கு. அப்புறம் நல்ல விதமா அந்த மீட்டிங் நடந்தது.
கதை சொல்லி முடிச்ச அஞ்சாவது நிமிஷம் ‘இந்தப் படத்தை நான் பண்றேன்’னு முடிவுக்கு வந்தார் ஆர்யா. பொதுவா அவரை ‘லவ்வர் பாய்’ மாதிரிதான் அறிஞ்சிருக்கோம். அந்த இமேஜை அநாயாசமா உடைச்சிருக்கார் ஆர்யா. இது நிச்சயமா புது ஆர்யா. கடல் சார்ந்த கதை என்பதால், நிறைய விஷயங்களைச் சொல்வதற்கு களம் அருமையா கிடைச்சது.
‘இதில் இருக்கிற கம்பீரம், ஆக்ஷன், நடை, உடை, பாவனை எல்லாம் எனக்கே புதுசா இருக்கு’ன்னு ஆர்யாவே சொன்னதுதான் அழகு. பெரும் ரசிகர்களையும், குறிப்பா ரசிகைகளையும் அவருக்கு இன்னும் கொண்டு வந்து சேர்க்கும். எங்கேயோ ஒரு கிராமத்தில் இருக்கும் சராசரி சினிமா ரசிகன் வரைக்கும் போய்ச் சேர்வார். அவரைப் பத்தி இயல்பானவர், பந்தா கிடையாது, அலட்டல் இல்லைன்னு கேள்விப்பட்டது மட்டும்தான். ஆனா, இவ்வளவு அருமையான நடிகர்னு தெரியாது.
இத்தனைக்கும் அவருக்கு இந்தப் படம் ஆரம்பிக்கும்போது காலில் ஒரு ஆபரேஷன். வலியைப் பொருட்படுத்தாம மெனக்கெட்டு பண்ணிக் கொடுத்தார். சொன்ன டயத்திற்கு வந்து நிற்கிறார். தொழில்முறை நடிகர். எனக்கு திருப்தி வருவது எத்தனையாவது ‘டேக்’கா இருந்தாலும் மலர்ச்சியோடு நிற்கிறார். கேரக்டரின் தேவையை, நியாயத்தைப் புரிஞ்சுக்கிட்டு ஸ்பாட்டுக்கு வருவது தான் ஒரு நல்ல நடிகருக்கு அழகு!’’‘‘ஹன்சிகாவை கவர்ச்சியில் நனைய வச்சிட்டீங்க, அவங்க மட்டுமில்லை... அவங்க அம்மாவும் கோபத்தில் இருக்காங்கன்னு பர
பரப்பு கிளம்புதே?’’
‘‘எனக்கு இதில் ஆளை அசத்துகிற அழகு தேவைப்படலை. ஒரு புதுமுகம் இருந்தால்கூட போதும்னு சொன்னேன். ஹன்சிகா தயாரிப்பாளரோட சாய்ஸ். ஆனாலும் அவங்க உழைப்பை கொஞ்சமும் குறை சொல்ல முடியாது. இப்பக்கூட அவங்க, ‘ ‘மீகாமன்’ல சில சீன்ஸ், பாடல்கள் பார்த்தேன்... எனக்கு படத்தை முழுசா பார்க்கணும்னு ஆசையாயிருக்கு. என் ரசிகர்களுக்கு ஒரு நல்ல படத்தைக் கொடுக்கிற திருப்தி இருக்கு’ன்னு ட்வீட் பண்ணியிருக்காங்க. அப்படி தப்பா இருந்திருந்தால் இப்படிப் பதிவு செய்திருப்பாரா? அவங்க அம்மா சொன்னது இன்னும் ஆச்சரியம்.
‘என் பொண்ணு எத்தனையோ கதை கேட்டிருக்கு. கதை கேட்ட பத்தாவது நிமிஷமே அது தூங்கிடும். அப்படி எதுவும் செய்யாமல் ஆர்வமா கேட்ட கதை இதுதான்’னு சொன்னார். இதுவே எவ்வளவு பெரிய விஷயம் பாருங்க. ஹன்சிகாவின் அழகு, தோற்றம், கவர்ச்சி இதையெல்லாம் தள்ளி வைங்க... இதில் அவங்களோட நடிப்பு நிச்சயம் தனிப்பட்ட விதம். ஸ்கிரிப்ட்டில் இறங்கி உள்ளே போயிட ரெடியாக இருக்காங்க. ‘நடிப்பை அவங்க விளையாட்டா எடுத்துக்கிறாங்க’ன்னு இனியும் சொல்ல முடியாது!’’
‘‘அந்தப் பாட்டில் கொஞ்சம் கிளாமர் அதிகம்னு சொல்றாங்களே?’’
‘‘அது ஒரு நெருக்கமான பாடல்தான். ஆரம்பத்திலேயே ஆர்யா-ஹன்சிகா இரண்டு பேரிடமும் விலாவாரியாக சொல்லப்பட்டு ஏற்றுக்கொண்ட விஷயம்தான். மதன் கார்க்கி தான் எழுதினார். எப்பவும் காமத்தையும், தனிமைத் துயரையும், தாபத்தையும் ஆண்கள்தான் சொல்கிற மாதிரி பாடல்கள் வரும். ஆனால், காமம் இருபாலருக்கும் பொதுவானது. அதனால், ஒரு பெண் பாடுவது மாதிரி அமைந்தால் நன்றாக இருக்கும் என விரும்பினேன். என் விருப்பத்தைப் புரிந்துகொண்டு வார்த்தைகளில் சிலம்பம் விளையாடினார் கார்க்கி.
இந்தப் பாடலில் ஹன்சிகாவிற்கு ஆடைக் குறைப்போ, கிளாமரோ இல்லை. ஆடைக் குறைப்பு ஆர்யாவிற்கு வேண்டுமானால் நடந்திருக்கிறது. அதாவது சட்டையைக் கழட்டிப் போட்டிருக்கிறார். அதன் எடிட் செய்த பகுதியைப் பார்த்துவிட்டுத்தான் ஹன்சிகா ட்விட்டரில் புகழ்ந்திருக்கிறார். என்னிடம், ‘இதனால் என் இமேஜ் பாதிக்குமா’னு கேட்டார். ‘அப்படியொன்றும் நடக்காது’ன்னு சொன்னேன்.
இந்தப் பாடல் முழுக்க சின்ன தொடுதல், பார்வை என உணர்வுரீதியாக சொல்லப்படுது. தமனின் மியூசிக்கில் பெண்மை கலந்து நிற்கும். கோவாவின் அழகுப் பகுதிகளில் படம் முழுவதும் படமாகி யிருக்கு. ஆர்யாவின் ஸ்பெஷல் நடிப்பு, ஆக்ஷனில் கூடுதல் கவனப்படும் படம்!’’
நா.கதிர்வேலன்