இது மக்கள் தரும் விருது!‘‘சன் டி.வி. தொடர்கள்ல வர்ற நாங்க யாருமே கற்பனை கேரக்டர்கள் இல்லை. தமிழ்நாட்டுல அத்தனை குடும்பங்கள்லயும், நாங்களும் ஒருத்தரா ஆகிட்டோம். மக்கள் ரசனையைப் புரிந்துகொண்டு சன் டி.வி. தர்ற சீரியல்களை பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் குடும்பத்தோட உட்கார்ந்து பார்க்கிறாங்க.

தமிழக மக்களின் வாழ்வில் தவிர்க்க முடியாத இடம் பிடிச்சிருக்கும் இந்தத் தொடர்களில் நடித்த எங்களுக்கு ‘சன் குடும்பம் விருது’ என்பது மிகப்பெரிய கௌரவம்’’ பொருத்தமாக ஓபனிங் தந்துவிட்டு, தன் செல்ஃபி ஸ்டிக்கால் நண்பர்களைப் பதிவு செய்தார் பப்லு. ‘சன் குடும்பம் விருதுகள் 2014’ பிரமாண்டமான விழா, மகாபலிபுரத்தின் கான்ஃப்ளூயன்ஸ் கன்வென்ஷன் சென்டரில் களை கட்டியிருந்தது.

துறுதுறுவென சின்னத்திரை நட்சத்திரங்கள் அணி அணியாகத் திரண்டு வந்திருந்தார்கள். டீன் டிக்கெட்டுகளின் சிதறலும் சிரிப்பொலியுமாக விழா நடக்கும் பெரிய ஹால் பரபரப் பில் இருக்க, புகைப்படக்காரர்கள் சின்னத்திரை சிறு தெய்வங்களை ஃப்ளாஷில் சத்தமில்லாமல் சுட்டுத் தள்ள, ‘பளபள’வென ஆரம்பித்தது விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி.

பிறந்த வீட்டில் பெண்கள் அழகாய் இருப்பது போல சன் குடும்ப விழாவிலும் சின்னத்திரை நடிகர், நடிகையர், தொழில்நுட்பக் கலைஞர்கள், இயக்குநர்கள் என முகங்களில் ஸ்பெஷல் சந்தோஷம் + பொலிவு. சிறந்த ஜோடி, இயக்குநர், திரைக்கதை, சிறந்த நடிகர், நடிகை என எக்கச்சக்க பிரிவுகளில் சின்னத்திரை கலைஞர்களை கௌரவப்படுத்த விருதுகள் வழங்கப்பட்டன.

‘‘சன் குழுமத்திற்கும் எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு இருக்கிறது. எங்கள் ஒவ்வொருவரின் வளர்ச்சியிலும் நேரடியாக சன் குழுமத்தின் ஆதரவு இருக்கிறது’’ என பெருமிதத்தில் திளைத்தனர் சின்னத் திரையினர்.

சிறந்த கதாநாயகன் - கதாநாயகி, சிறந்த தந்தை - தாய், சிறந்த சகோதரன் - சகோதரி, சிறந்த மாமியார் - மாமியார், சிறந்த மருமகன் - மருமகள், சிறந்த வில்லன் - வில்லி, சிறந்த துணைக் கதாபாத்திரம் ஆண் - பெண், சிறந்த நகைச்சுவைக் கதாபாத்திரம் ஆண் - பெண், சிறந்த ஜோடி என 25 பிரிவுகளுக்கு மேல் விருதுகள்... ஒவ்வொரு பிரிவுக்கும் யூகிக்க முடியாத கடும் போட்டி!

‘மரகத வீணை’, ‘பொன்னூஞ்சல்’, ‘தேவதை’, ‘பொம்மலாட்டம்’, ‘சொந்த பந்தம்’, ‘இளவரசி’, ‘வள்ளி’, ‘பிள்ளை நிலா’, ‘முந்தானை முடிச்சு’, ‘பாசமலர்’, ‘நாதஸ்வரம்’, ‘அழகி’, ‘தெய்வ மகள்’, ‘தென்றல்’, ‘வம்சம்’, ‘சக்தி’, ‘வாணி ராணி’, ‘கல்யாணப்பரிசு’ என வெற்றி முரசு கொட்டும் தொடர்களின் முழுப் பரிமாணம் தெரிய குழுமியிருந்தார்கள் நட்சத்திரங்கள்.

‘‘சீரியலை வெறும் பெண்களுக்கானதா இல்லாம மொத்த குடும்பத்துக்கானதா மாத்தியிருக்கு சன் டி.வி. ‘நாதஸ்வரம்’ல தங்கச்சியா வர்ற என்னை எங்க போனாலும் தங்களோட தங்கச்சியாதான் மக்கள் பார்க்குறாங்க! அப்படி குடும்பத்தில் ஒருத்தரா மாறிப் போன எங்களுக்கு இந்த சன் குடும்பம் விருது எக்ஸ்ட்ரா எனர்ஜி!’’ என நெகிழ்ந்தார் ஸ்ருதி.

‘‘ ‘வாணி ராணி’ சீரியல்ல நான் பண்ற பூங்கொடி கேரக்டர் சிறந்த துணை கதாபாத்திரமா நாமினேட் ஆகியிருக்கறதே பெரிய விஷயம். மொத்தம் 18 சீரியல்ல எத்தனை சப்போர்ட்டிங் கேரக்டர்ஸ் இருக்கும்... நீங்களே கணக்குப் போட்டுப் பாருங்க!’’ என பிரமிக்கிறார் மஹாலட்சுமி.

விழா என்றால் ஆடல் பாடல் இல்லாமலா? ஆனால், இங்கே சின்னத் திரை கலைஞர்களை மகிழ்விக்க பெரிய திரை நட்சத்திரங்கள் வந்தார்கள். ஃபெஸ்டிவல் புன்னகையும், அசத்தல் காஸ்ட்யூமுமாக பின்னியெடுக்கிற ‘லுக்’கில் ஆடினார் ஸ்ரேயா. மேஜிக் கண்கள், மர்மப் புன்னகை என தேன் குரலில் பாடி ஆடினார் ஆண்ட்ரியா. பார்ப்பவரை அடிமைப்படுத்தும் அழகில் பாடலும், ஆடலுமாக எக்கச்சக்க ஆர்வத்தில் கரைந்தது விருது நிகழ்வு.

‘‘சன் குடும்பத்தில் நாங்களும் ஒரு உறுப்பினரா இருக்கறது ரொம்பப் பெருமையா இருக்கு. எங்களோட ஒவ்வொரு வளர்ச்சியிலும் துணை நிற்பதும் அடுத்தடுத்தக் கட்டங்களுக்கு காரணமா இருக்கறதும் சன் குடும்பம்தான்’’ என்பதே வந்திருந்த அத்தனை சின்னத்திரை ஸ்டார்களின் மொத்த மகிழ்ச்சிக் குரலாக ஒலித்தது.

‘‘இந்த நிகழ்ச்சிக்கு காம்பியரிங் பண்றதே பெரிய வாய்ப்பு... அதோட நான் சிறந்த கதாநாயகனுக்கான போட்டியிலும் இருக்கேன். இப்போ சினிமாவிலும் ஹீரோவா நடிக்கிறேன். சின்னத்திரை நடிகர்களுக்கு ஒரு ஏணி... இல்ல, லிஃப்ட்டுன்னே சன் டி.வியைச் சொல்லலாம்!’’ என்கிறார் மேடையில் முன்னணி வகித்த தீபக்.

ஒவ்வொரு விருதையும் அறிவிக்க பெரிய திரைக் கலைஞர்கள் முன்வந்தார்கள். பரத், விஜய் சேதுபதி, குஷ்பு, ராதிகா சரத்குமார், பூர்ணா, விசாகா சிங், பூஜா என நிகழ்ச்சியில் பிரபலங்கள் கலந்து நிற்க பரவசம் கூடியது!‘‘விருதுகள் கொடுத்து கௌரவப்படுத்துவதிலும் மேலும் உயரத்திற்குக் கொண்டு போவதிலும் சன் குடும்பத்துக்கு நிகரே இல்லை. விருதுகளுக்கான பரிசீலனையில் இருக்கும்போதும், பெறும்போதும் மனசு அடைகிற மகிழ்ச்சிக்கு அளவேயில்லை!’’ என்றார் ‘தென்றல்’ ஸ்ருதி.

யார் யாருக்கு என்னென்ன விருது? 2014ம் ஆண்டில் சன் குடும்பத்தின் சிறந்த ஜோடி ஹீரோ, ஹீரோயின் யார் யார்? மக்களின் மனதைப் பிடித்து முதலிடம் பெற்ற படைப்பாளிகள் யார் யார்? ஆசை ஆசையாய் கேமரா அள்ளி விழுங்கிய அத்தனை காட்சிகளின் முதல் பகுதி நவம்பர் 30 ஞாயிறு அன்றும் அடுத்த பகுதி டிசம்பர் 7 ஞாயிறு அன்றும் மாலை 6 மணிக்கு ஒளிபரப்பாகிறது. காத்திருங்கள்... காத்திருக்கிற நேரம் அழகானது!

நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன், மாதவன், சதீஷ், வெற்றி, அருண்