அதிகரிக்கும் குடும்பக் கொலைகள்!



அதிர வைக்கும் பின்னணி

நினைத்தாலே குலை நடுங்குகிறது. நவம்பர் 20 டூ 25... 5 நாட்களுக்குள் தமிழகத்தில் 25க்கும் மேற்பட்ட கொலைகள். கழுத்தை அறுத்து, கல்லைத் தலையில் போட்டு, கத்தியால் குத்தி, அரிவாளால் வெட்டி... எல்லாமே கொடூரக் கொலைகள்.

அதிர்ச்சி என்னவென்றால், முக்கால்வாசி கொலைகள் குடும்ப உறவுகளுக்குள் நடந்தவை... சொத்துப் பிரச்னை, உறவுப் பிறழ்ச்சி, சந்தேகம், கணவன் - மனைவி சண்டை, அதீத பாசம் என கொலைக்கான காரணங்கள் வியக்கவும் வியர்க்கவும் வைக்கின்றன. 

'எறும்புக்குக் கூட தீமை செய்யாதே’ என்று போதிக்கிற சமண மதத்தில் தீவிர பிடிப்புள்ள ஹேமந்த்ராஜ், இன்று கொலைக் குற்றவாளி. மகன் திருமணம் பற்றிய ஒரு சண்டையில் மனம் வெறுத்து மனைவியை கழுத்தறுத்துக் கொன்று விட்டார். வாகனம் வாங்கிப் பிழைக்க கடன் தர மறுத்த அத்தையைக் கொன்றிருக்கிறார் கொளத்தூர் ராஜேந்திரன்.

சந்தேகத்தால் மனைவியைக் கொன்று விட்டு சரணடைந்திருக்கிறார் கோணி வியாபாரி மோகன். மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த மாமனாரைக் கொலை செய்துவிட்டு ஜெயிலுக்குப் போயிருக்கிறார் ஒரு சம்பந்தி. தம் தம்பிக்குத் திருமணம் முடிந்துவிட்டால் தங்கள் மேலுள்ள கவனம் போய்விடுமோ என்ற பயத்தில் தம்பியைக் கொன்று தாங்களும் தற்கொலை செய்து கொள்ள முனைந்திருக்கிறார்கள் நிர்மலா தேவியும், மகாதேவியும்.

என்னதான் நடக்கிறது? அன்பும் புரிதலுமாக வாழும் மனிதர்களை கொடூரக் கொலைகாரர்களாக மாற்றுவது எது?

‘‘எல்லா சம்பவங்களுமே இதயத்தை உலுக்குகின்றன. எங்கோ நடக்கிற சம்பவங்கள் என்று இதையெல்லாம் கடந்து செல்ல முடியவில்லை. கொலை செய்யும் முறைகளில் பெரும் வன்மம் இருக்கிறது. குடும்ப விவகாரமாக இந்த சம்பவங்களைக் குறுக்காமல், இதன் பின்னணியில் உள்ள சமூகக்காரணிகளைக் கண்டறிந்து சரிசெய்ய வேண்டும்’’ என்கிறார் முன்னாள் காவல்துறை அதிகாரியும், எழுத்தாளருமான திலகவதி.

‘‘வாழ்க்கை மீதான மதிப்பீடுகள் மாறிக்கொண்டே வருகின்றன. அன்பு, நம்பிக்கை, தியாகம், கடமையுணர்வு எல்லாம் மதிப்பிழந்து விட்டன. குடும்ப வாழ்வியலின் கட்டுமானம் உடைந்து வருகிறது. கிராமங்களைப் பொறுத்தவரை எல்லோருக்கும் அடையாளம் உண்டு. ‘குடும்ப மானத்தை வாங்கிடாதே’ என்கிற எச்சரிக்கை மிகுந்த அர்த்தமுள்ளது.

அதுதான் தவறுகளுக்குத் தடையாக இருக்கிறது. கணவன் தன் மனைவியை அடித்தால்கூட எங்கிருந்தாவது ஒருவர் ஓடிவந்து, ‘எதுக்குடா தங்கச்சியைப் போட்டு இப்படி அடிக்கிறே...’ என்று கேட்பார். இத்தனைக்கும் அவர் அந்தக் குடும்பத்துக்குத் தொடர்பில்லாதவராக இருப்பார்.

அதுமாதிரியான கட்டுக்கோப்பு, கண்காணிப்பு, ஆறுதல், அரவணைப்பு எல்லாம் நகர வாழ்க்கையில் அர்த்தமற்றதாகி விட்டன. அடையாளமற்ற தன்மையே நிலவுகிறது. இரண்டடி தூரத்தில் எதிர் வீடு இருக்கிறது. அதில் யார் குடியிருக்கிறார்கள் என்று கூட நமக்குத் தெரியாது. அறிவுரைகளுக்கு மதிப்பில்லை.

அனுபவக்குறைவு, இளமையின் வேகம் எல்லாம் சேர்ந்து இந்தத் தலைமுறையை ஆட்டுவிக்கிறது. போதாக்குறைக்கு திரைப்படங்கள், ஊடகங்கள்... ஒரு தனிச்சம்பவத்தை சமூக அடையாளமாக உருவாக்குவதன் மூலம் தவறான கருத்தியலை ஊடகங்கள் கட்டமைக்கின்றன. இப்படி பல பிரச்னைகளின் பின்னணியில்தான் குடும்பக் கொலைகளைப் பார்க்க வேண்டியிருக்கிறது’’ என்கிறார் திலகவதி.

‘‘மொபைல், இன்டர்நெட் போன்ற நவீன சாதனங்கள் வாழ்க்கையை மலினமாக்கி விட்டன. தவறுகளும், சரிகளும் நிறைந்து கிடக்கிற இந்த சாதனங்களே கொலையில் முடியும் பல பிரச்னைகளுக்குத் தொடக்கப் புள்ளி. சர்வ சாதாரணமாகப் புழங்கும் மதுவும் குடும்பக் கொலைகளுக்கு முக்கிய காரணம்...’’ என்கிறார், குடும்ப வழக்குகளைக் கையாளும் வழக்
கறிஞர் ஆனந்தன்.

‘‘உறவுகளின் மீது நம்பகத்தன்மை குறைந்து விட்டது. எல்லாவற்றிலும் மேற்கத்திய கலாசாரத்தை ஏற்றுக்கொள்ளும் நம் மக்களுக்கு, உணர்வு சார்ந்த விஷயங்களில் மட்டும் இந்திய கலாசாரம் தேவையாக இருக்கிறது. ஆணும் பெண்ணும் இங்கே தனி உடைமைகள். அந்த உறவு பிறழ்வாகும்போது கொலைவெறி ஏற்படுகிறது. நம் மூதாதைகளின் வேர்களிலிருந்துதான்  இந்தப்  பிரச்னைக்கான தீர்வைத் தேட வேண்டும்...’’ என்கிறார் ஆனந்தன்.

குடும்பக் கொலைகளின் பின்னணியில் இருக்கும் சமூக, மருத்துவ, வாழ்வியல் காரணங்களைப் பற்றி விரிவாகப் பேசுகிறார் மனநல மருத்துவர் மோகன வெங்கடாசலபதி. ‘‘வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக, மன அழுத்தம் புற்றுநோயைப் போல எல்லோருக்குள்ளும் ஊடுருவிக் கொண்டிருக்கிறது. ஸ்ட்ரெஸ் எனப்படும் மனத்துன்பம் இல்லாத மனிதர்களே இங்கு இல்லை. வாழ்வாதாரம் தேடும் ஓட்டத்தில் உருவாகும் உடல் சார்ந்த, உள்ளம் சார்ந்த அழுத்தங்களை மத்திய தர வர்க்கத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

மனநோயாளிகளாகவும், குடிநோயாளிகளாகவும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். ‘டிப்ரஷன்’ (மனச்சோர்வு), ‘ஆங்சைட்டி டிஸ்ஆர்டர்’ (பதற்ற நோய்) போன்ற நோய்கள் பெரும்பாலானவர்களைப் பீடித்திருக்கிறது. என் கணிப்புப்படி நான்கில் ஒரு வீட்டில் 1 மன நோயாளி வாழ்கிறார். இதற்கு கவுன்சலிங், மருந்துகள் தேவை என்ற உண்மை கூட பலருக்குப் புரியவில்லை. 

இளைஞர்கள் திசைமாறுவதற்கான எல்லா வாய்ப்புகளும் இங்கே திறந்து கிடக்கின்றன. இது இன்னும் விபரீதம். 13 வயதில் மது குடிக்கிறார்கள். 13 வயது பையன் 7 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்துகிறான். நம் பள்ளிக்கூடங்களில் ஒரு மனநல மருத்துவரை வைத்து ஆய்வுசெய்தால் ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்தது 15 மனச்சிக்கல் உள்ள மாணவர்களைக் கண்டுபிடிக்கலாம்.

நவீன தொழில்நுட்பங்களின் வழியாகக் கிடைத்திருக்கும் அறிவே நமக்கு எதிராக அமைந்து விட்டது. எதை வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் கற்றுக் கொள்ளலாம். சரியான வழிகாட்டுதல் இல்லாததால் பிள்ளைகள் தவறாக வளர்கிறார்கள். 15 வயதில் போதைக்கு அடிமையான நிறைய பிள்ளைகள் சிகிச்சைக்கு வருவதைப் பார்க்கும்போது பகீரென அடிவயிற்றில் பயம் பரவுகிறது. 

நிறைய கொலைகளுக்கு முறை தவறிய பாலியல் உறவுகளே காரணமாக இருக்கிறது. அண்மைக்கால ஆய்வின்படி 40% பெண்கள் தங்கள் கற்பனைக்கு மாறான ஆண்களையே திருமணம் செய்து கொள்கிறார்கள். அந்த ஏமாற்றம் வாழ்க்கை நெடுக வருகிறது. கணவனும், மனைவியும் வேலைக்குச் செல்ல நேர்வதால் பணியிடச் சிக்கலால் இருவருக்குள்ளும் மனச்சோர்வு, மனஅழுத்தம் இருக்கிறது. அவர்களால் எந்த விஷயத்திலும் ஒருங்கிணைய முடியவில்லை.

சர்க்கரை நோய், குடிப்பழக்கம், உடல் பருமன், அதிக புகைப்பழக்கம் காரணமாக 40 வயதுக்கு உட்பட்ட 30% ஆண்கள் பாலியல் குறைபாடு உடையவர்களாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. செக்ஸ், வாழ்க்கையின் அடிப்படை. அதில் குழப்பம் நேரும்போது எல்லாமே எதிர்மறையாகி விடுகிறது. 40 முதல் 45 வயது... மிகவும் சிக்கல் நிறைந்த வயது. அத்தருணத்தில் நிறைய உளவியல் மாற்றங்கள் நடக்கும். விரக்தி, எரிச்சல், நம்பிக்கையின்மை அதிகமாகும்.

அத்தருணத்தில் தம்பதிகள் நெருங்கி இருப்பது, புரிதலையும் அன்பையும் அதிகமாக்கும். ஆனால் இந்த இடத்தில்தான் ‘பார்டர்லைன் பர்சனாலிட்டி டிஸ்ஆர்டர்’ என்ற பிரச்னை பெரும்பாலான பெண்களைப் பீடிக்கிறது. அந்த குழப்பத்தின் தொடர்ச்சியாகவே உறவுப் பிறழ்வு நிகழ்கிறது. அதன் எதிர்வினையாக ஆண்கள் குடிநோயாளியாகிறார்கள்’’ என்கிறார் மோகன வெங்கடாசலபதி.

மன அழுத்தமும், மனச்சோர்வும் பெரும் நோயாக பீடித்து மனிதர்களின் இயல்பையே குலைத்து வரும் நிலையில், குடும்பக் கொலைகளைத் தனிப்பட்ட விவகாரமாகப் பார்க்காமல் சமூகப் பிரச்னையாகப் புரிந்து கொள்வதுதான் மாற்றத்தின் தொடக்கம். அரசுக்கும் மக்களுக்கும் இந்த விவகாரத்தில் சரிசம பங்கிருக்கிறது. அன்பு, நம்பிக்கை, தியாகம், கடமையுணர்வு எல்லாம் மதிப்பிழந்து விட்டன. குடும்ப வாழ்வியலின் கட்டுமானம் உடைந்து வருகிறது. ‘குடும்ப மானத்தை வாங்கிடாதே’ என்கிற எச்சரிக்கை மிகுந்த அர்த்த முள்ளது.

 வெ.நீலகண்டன்