சிக்கென்றால் ‘டிக்’!



‘அவள் அப்படித்தான்’, ‘கிராமத்து அத்தியாயம்’ போன்ற காவியங்களைத் தீட்டிய இயக்குநர் ருத்ரய்யா பற்றிய வண்ணநிலவனின் கட்டுரை, அவரது மறைவுக்கோர் வித்தியாச அஞ்சலி!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

தந்தத்தில் செய்யப்பட்ட பொருட்களே பல நாடுகளில் தடை செய்யப்பட்டிருக்க, கிலோ கிலோவாக தந்தங்களை விமானத்தில் ஏற்றிச் சென்ற சீன அதிபரின் செயல் ‘ஷாக்’ தந்தது!
- பி.சந்திரா, போளூர்.

தான் கிசுகிசுக்களில் சிக்காத காரணத்தைக் கேட்டதற்கு, ‘தப்பை தெளிவாகப் பண்ணுகிறேன்’ என வெளிப்படையாகப் பேசிய ஆதி, நடிகர்களில் புதுசாக மட்டுமல்ல... ஒரு தினுசாகவும் இருக்கிறார்!
- மு.மதிவாணன், அரூர்.

பாம்பன் சுவாமிகளின் சரிதம் எங்களின் மனக்குறையைத் தீர்த்தது மட்டுமில்லாமல், இனி அரவிந்த அன்னையின் சரிதம் எங்களுக்கு அமுதமாய் இனிக்கும் என்பதும் நிச்சயம்!
- பி.ஜெயராஜ், சென்னை-91.

அழகான அஞ்சலி எடையைக் குறைத்து கலரையும் ஏற்றி இப்படி ‘சிக்’ என்று போஸ் கொடுத்தால் ஆர்யா என்ன... சூர்யாவே அடுத்த பட ஹீரோயினுக்காக ‘டிக்’ செய்வாரே!
- எம்.மிக்கேல்ராஜ், சாத்தூர்.

தர்மபுரி அரசு மருத்துவமனையில் உயிரிழந்த சிசுக்கள் பற்றிய கட்டுரை அத்துயரத்தை அதன் உச்சத்தில் சென்று படம் பிடித்துக் காட்டி
யிருந்தது.
- இரா.வளையாபதி, தோட்டக்குறிச்சி.

த்ரிஷாவை வம்புக்கு இழுக்கலேன்னா உமக்கு தூக்கம் வராது போல! வருண்-த்ரிஷா நிச்சயதார்த்தத்தை உறுதியாக்கி, அவர்களைச் சேர்த்து வைத்த ஹீரோக்களை தியாகியாக்கி, பத்த வச்சிட்டியே பரட்ட!
- மயிலை.கோபி, சென்னை-83.

பாலியல் என்பது இயற்கையானது. அதை உணர்ந்து, பாலியல் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டிய சூழலில் நாடு இருப்பதும் உண்மையே. அதற்கான காரணங்கள் மிக வலுவாகவே உள்ளன!
- கவியகம் காஜூஸ், கோவை.

முத்தம் என்பது குளுமைதான்... அதை, இப்படியா வெளிப்படையாகக் கொடுத்து பிரச்னையை அனலாக்குவது? முத்தம் வேண்டும்... அதற்காக முத்தப் போராட்டம் வேண்டாமே!
- ஜெ.வி.சந்திரன், காங்கேயம்.

‘ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்காது’ என்பார்கள். இந்த வயதிலும் கதாநாயகனாக சளைக்காமல் நடிக்கும் எஸ்.ஏ.சந்திரசேகரன் விஷயத்தில் அது நூற்றுக்கு நூறு உண்மை!
- ஆர்.கே.லிங்கேசன்,மேலகிருஷ்ணன்புதூர்.