நாய்கள் ஜாக்கிரதை



திருமணம் செய்துகொண்டும் பேச்சிலராகவே வாழும் சிபிராஜ், கடத்தப்பட்ட தன் மனைவியை ஒரு நாயின் துணையோடு மீட்கிற கதைதான் ‘நாய்கள் ஜாக்கிரதை’! ஏற்கனவே சின்னப்பா தேவர், ‘ஆட்டுக்கார அலமேலு’ என துணிச்சல் செய்த வகைதான்.

ஜாலி, கேலியாய் கொஞ்சம் நேர்மையாக இன்ஸ்பெக்டர் வேலையைப் பார்த்துக்கொண்டு இருக்கிறார் சிபி. ஆள் அரவமற்றிருக்கும் பழைய தொழிற்சாலையில் பெண்ணின் அலறல் சத்தம் கேட்டதாக தகவல் வர, போன இடத்தில், கூட வந்த இன்ஸ்பெக்டரையே சுட்டுக் கொன்றுவிட நேர்கிறது.

இதற்கு பழிக்குப் பழியாக சிபிராஜின் மனைவியையே கொண்டு போய், கொடுமை செய்து சிபிராஜுக்கு ஒரு காட்டு காட்டுகிறார்கள். பற்பல ஹாலிவுட் படங்களிலும் சிற்சில தமிழ் சினிமாக்களிலும் ‘டும் டும் டும்’ கொட்டப்பட்ட கதைதான்.

ஆனால், அதையே சிபிராஜை வைத்துக்கொண்டு ஆக்ஷன், த்ரில்லர் வகையில் முயன்றிருக்கிறார் இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜன். அதிரடி ஹீரோவாக வாட்டசாட்டத்தில் சிபிராஜ் ஓகேதான். ஆனால், மொத்தப்படத்திலும் நாய்க்கு துணையாகவே வர ஒரு ஆக்ஷன் ஹீரோ துணிந்திருப்பது தமிழ் சினிமாவிற்கு ஆச்சரியம்.

நாயைக் கண்டாலே சிபிராஜ் பதறி ஓடுவது, எரிச்சல் காட்டு வது, துரத்துவது என கடக்கும் ஆரம்ப சீன்களிலேயே, பிற்பாடு நிச்சயமாக இவர்களுக்குள் பிரிக்க முடியாத பந்தம் ஏற்படப் போகிறது என்று தெரிந்துவிடுகிறது. அவர் நாயிடம் காட்டும் அலட்சியமும், பின்பு அதனோடு பல இடங்களில் பாசம் காட்டுவதும் ரசிக்க வைத்தாலும், ஹீரோவை விட்டுவிட்டு நாயையே கவனிக்கும்படி நேர்ந்துவிடுகிறது. ஆனாலும் கொஞ்சம் கொஞ்சமாக நாய் நம்மோடு ஐக்கியமாவதை நாம் உணருவதுதான் ஹைலைட்!

அருந்ததி அலட்டிக்கொள்ளாமல் நடித்திருக்கிறார். ‘நாலு சீன்தான் எனக்கு’ என முன்னாடியே முடிவு செய்தது மாதிரி மெனக்கெடவேயில்லை. ஆரம்பித்து ரொம்ப நேரம் கழித்துத்தான் சிபிராஜுக்கு கல்யாணம் ஆகிவிட்டது என்ற உண்மையையே சொல்கிறார்கள்.

இடைவேளை வரை பரவாயில்லாமல் பயணித்து, திடுக் ட்விஸ்ட் வைத்தவர்கள், அதற்குப் பிறகு நாயை வைத்து வித்தை காட்டினால் போதும் என்று கவலையை விட்டு விட்டார்கள் போல. அடுத்தடுத்து அருந்ததி, சிபிராஜை புதைத்து விட்டு திகில் கொடுப்பது நல்ல ட்விஸ்ட்! ஆனால் அந்தப் பதற்றத்தைத் தொடராமல், நாய் செய்யும் அதிவீர சாகசங்களைக் காட்டி கவர்கிறார்கள். மயில்சாமி, மனோபாலா இருவரும் சிரிக்க வைக்கிற முயற்சியில் ஆங்காங்கே கை கொடுக்கிறார்கள். அதிலும் நாயின் மேட்டிங் லவ் ஸ்டோரிதான் கலக்கல் கலகல!

வெதுவெதுப்பான ஒளிப்பதிவில் ஊட்டி கண்ணில் நிற்கிறது. ஒளிப்பதிவாளர் நிஸார் சுறுசுறுப்புக்கு படத்தில் நிறைய இடங்கள் கை கொடுக்கின்றன. பாடல்களில் பெயர் சொல்லவில்லை என்றாலும் அடர்த்தியான பின்னணி இசையை நிச்சயம் குறிப்பிட வேண்டும்.

தரண்குமாருக்கு சபாஷ்! வழக்கமான திரைக்கதை களை நிறைய பார்த்தபிறகு, நாயின் சாகசங்களும் உழைப்பும் மிகவும் வித்தியாசப்படுவது உண்மை. ஒரு நாய் மனிதனுக்கு சிறந்த நண்பனாக இருக்க முடியும் என்ற உண்மையையும் உணர வைக்கிறது. அதனால் நாமும் நாயின் அன்பில் நனைவதைத் தவிர்க்க முடியவில்லை. கதையமைப்பில் ஈர்ப்பை உருவாக்கி, திரைக்கதையிலும் பின்னியிருந்தால் நிச்சயமாக இன்னும் ரசிப்புக்குள் வந்திருக்கும்!

 குங்குமம் விமர்சனக் குழு