தட்டப்படும்
கதவுக்கு உள்ளே
கோப்பையில் நிரப்பப்பட்டிருக்கும்
தனிமை
துளித்துளியாக தரையில்
சிந்தப்படுகிறது.
ஓடுகின்ற
தேர்ச்சக்கரமாகும் வாய்ப்பு
எனக்கு வழங்கப்படவில்லை
சக்கரங்களில்
நசுங்கிச் சாகும் எறும்பாகவே
என்றென்றும் இருக்கிறேன்.
ஒரு உலகம்
அவரவர் பார்வையில்
எத்தனை எத்தனை
வடிவம் பெறுகிறது.
கண்ணாடி பார்த்து
பழகியாகிவிட்டது
இதுதான் உண்மையான
முகமென்று
யாரிடம் சான்றிதழ் வாங்குவது?
இரவு
தன் கண்ணீர்த்துளியை
கதிரவன் காணும் விதமாக
புற்களின் மீது
விட்டுச் செல்கிறது.
காலை
மூடுபனி போர்த்தியிருந்தது
மறுகரையை
பாலத்தின் வழியே
எப்படி அடைவது?
சிக்னலில் யாசிப்பவன்
எந்த வியாபாரத்தில்
நஷ்டமடைந்ததால்
இந்த நிலைக்கு வந்திருப்பான்?
ப.மதியழகன் மன்னார்குடி.