400 நாட் அவுட்! வாவ் வாணி ராணி



தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் முதல்முறையாக... கொல்கத்தாவில் ஷூட்டிங் நடத்தியிருக்கிறது ‘வாணி ராணி’ மெகா டீம். சன் டி.வியின் சின்னத்திரை ப்ளாக்பஸ்டரான இந்த சீரியல், ரிச்சிலும் ரீச்சிலும் ஒரு படி மேலே! இரட்டை வேடங்களில் வாணி, ராணியாக பவனி வரும் ராதிகா, நடிகர்கள் வேணு அரவிந்த், பிருத்விராஜ் என அனுபவமும் இளமைத் துள்ளலும் கலந்த இந்த டீம், இப்போது 400 எபிசோட்களைத் தாண்டியாச்சு. வரவேற்பும் பாராட்டும் ஏறுமுகம்.

‘வாணி ராணி சன் டிவி’ என ஃபேஸ்புக்கில் ஒரு அக்கவுன்ட்டே தொடங்கிவிட்டார்கள் வெளிநாட்டு தமிழ் ரசிகர்கள். யூ டியூபிலும், ட்விட்டரிலும் கருத்துகளைக் குவித்து கலக்குகிறார்கள். ஒரு சபாஷ் சொல்லிப் பேசினோம், இயக்குநர் ஓ.என்.ரத்னமிடம்!

‘‘சார்... இந்த கிரெடிட் எல்லாம் இந்தத் தொடரை உலக மக்கள்கிட்ட கொண்டு போய் சேர்த்திருக்கும் சன் டி.விக்கும், எங்க ‘கிரியேட்டிவ் ஹெட்’ ராதிகா மேடத்துக்கும்தான் போய்ச் சேரணும். வாய்ப்பு கொடுத்து, உற்சாகப்படுத்தி, முழு சுதந்திரம் தந்தது அவங்கதான். என்னோட டீம் மக்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லணும்’’ என பவ்யம் காட்டியவரிடம், ‘‘கொல்கத்தால ஷூட்டிங் நடத்தினீங்களாமே?’’ எனக் கேட்டோம்.

‘‘ஆமாம். கதையில வர்ற சரவணன் கதாபாத்திரம் கொல்கத்தா போய் வேலை செய்ற மாதிரி ஒரு இடம் வருது. அவனைத் தேடி கல்யாணமான அவன் காதலியும், அவளோட கணவனும் போற மாதிரி சீன். இங்கேயே ஒரு ஆபீஸைக் காட்டியிருக்கலாம். ஆனா, ‘இதுவரை தமிழ்த் தொலைக்காட்சி சீரியல்கள் கொல்கத்தாவுல எடுத்ததில்ல’ன்னு மேடம் சொன்னாங்க. அதனால, முதல்முறையா அங்கேயே போய், அந்த போர்ஷனை எடுத்தோம்.

ஹௌரா பிரிட்ஜ், விக்டோரியா மஹால், காளி கோயில்னு அவுட்டோர் ஷூட்டிங் நிறைய. அங்கிருந்த ரசிகர்களும் பாராட்டினாங்க. இந்த சீரியலுக்கு மக்கள் கொடுக்குற ரெஸ்பான்ஸ்க்கு ஒரு உதாரணம் சொல்றேன்.

இதுல சரவணன், பூங்கொடி காதல் ஜோடியைப் பிரிச்சுட்டோம்னு நிறைய பேர் ஃபேஸ்புக் அக்கவுன்ட்ல இருந்தே வெளியேறிட்டாங்க. அவங்களைச் சேர்த்து வச்சாதான் நாங்க ஃப்ரண்ட்ஸ் ஆவோம்னு சொல்றாங்க. அவ்வளவு ஈடுபாட்டோடு மக்கள் பார்க்கிறதை நினைக்கும்போது ரொம்ப சந்தோஷம்!’’ - உற்சாகமாக முடித்தார் இயக்குநர் ரத்னம்.

- பி.கே