யதார்த்தம்



‘‘உங்க பொண்ணை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ஆனா, ஒரு சந்தேகம். நீங்க இருபது பவுன் நகையும் மூணு லட்சம் ரொக்கமும் தர்றதா சொல்லியிருக்கீங்க. அந்த இருபது பவுனுக்குள்ளதான் எனக்கும் மோதிரம் போடப் போறீங்களா? இல்ல பொண்ணுக்கு மட்டுமே இருபது பவுனா?’’ - மாப்பிள்ளை மகேஷ் இப்படிக் கேட்டதும் பெண் வீட்டார் திகைத்துத்தான் போய்விட்டார்கள். ‘‘எல்லாமும் சேர்த்துதான் 20 பவுன்’’ - பெண்ணின் அப்பா பதில் சொன்னார்.

‘‘அப்போ சரி, உங்களுக்கும் என்னைப் பிடிச்சிருந்தா நல்ல நாள் பாருங்க!’’ என்று சொல்லிக் கிளம்பினான் மகேஷ்.‘‘யார்ரா இவன்... அப்பா, அம்மா எல்லாரும் பக்கத்துலயே இருக்காங்க. அவங்க பேச வேண்டிய வரதட்சணை விவகாரத்தை எல்லாம் இவன் பேசறான். நாகரிகம் தெரியாதவனா இருப்பான் போல!’’ - கிட்டத்தட்ட இந்த சம்பந்த வேண்டாம் என்றே முடிவெடுத்துவிட்டார்கள் பெண் வீட்டார்.

ஆனால், மணப்பெண்ணின் கருத்து வேறு மாதிரி இருந்தது...‘‘அவர் ஒண்ணும் கூடுதலா கேக்கலையே... சந்தேகத்தை கிளியர் பண்ணிக்கிட்டார். அவ்வளவுதானே. சபையில மௌனமா இருந்துட்டு அப்பா அம்மா மூலமா நம்ம சொத்தையே எழுதிக் கேக்குற மாப்பிள்ளைகளை விட இந்த யதார்த்தமான மாப்பிள்ளை பெட்டர்!’’ என்றாள் அவள். ஆமோதித்துப் புன்னகைத்தார்கள் அனைவரும்.          

ஐரேனிபுரம் பால்ராசய்யா