விஜய்சேதுபதி செய்திருக்க வேண்டிய கேரக்டர் இது!



செம குஷி சிம்ஹா

விஜய்சேதுபதியை பார்த்து ஆச்சரியப்பட்டவர்கள், இப்போது பரபரப்பது சிம்ஹாவைப் பார்த்து. ‘ஜிகர்தண்டா’ பார்த்துப் பரவசமாகி, ‘அட, நல்லா பண்றார்பா’ எனத் தமிழ் சினிமாவே கொஞ்சம் பொறாமையாய்க் கொஞ்சுகிறது. ஆனால், பயத்தில் இருக்கிறார் சிம்ஹா. கிடைத்த பாராட்டு, பதற்றப்பட வைத்திருக்கிறது.

‘‘கொடைக்கானலில் படிச்சிட்டு இருந்தப்போ, சினிமாதான் ஆசை. அவ்வளவுதான். அதுக்கு மேல என்ன செய்யணும்னு தெரியாது. நாடகம் நடிப்பேன். மணிக்கணக்கா சினிமா பத்திப் பேசுவோம். பத்தாம் வகுப்பை நாலு வருஷம் படிச்சேன். படிப்பு நமக்கு பிராப்தம் இல்லைனு ஆகிப்போச்சு.

ஆனா, அம்மா, ‘ஒரு டிகிரி ப்ளீஸ்’னு கெஞ்சினாங்க. அவங்களுக்காக படிச்சது பி.சி.ஏ. ‘வேலைக்குப் போறேன்’னு சென்னை வந்துட்டேன். தர்மசங்கடமா அம்மா, அப்பாவை ஏமாத்திக்கிட்டு இருக்கோம்னு புரிந்தது. ஆனாலும், அதைத் தவிர்க்க முடியலை. சென்னைக்கு வந்து நடுநடுவில் குறும்படங்களில் நடிக்க ஆரம்பிச்சேன்.

‘காக்கா முட்டை’ டைரக்டர் மணிகண்டன், நம்ம நண்பர். அவர்கிட்ட அப்படியே உட்கார்ந்துடுவேன். அவர் விளம்பரப் படங்கள் எடுக்கும்போது துணைக்கு இருப்போம். அவர்கிட்ட கேமரா வாடகைக்கு எடுக்கத்தான் கார்த்திக் சுப்புராஜ் வந்தார். அவரைப் பிடிச்சுக்கிட்டேன். நல்லா பழகுவார். அப்படியே அவரை பின்தொடர்ந்துட்டேன். சென்னைக்கு வந்த புதுசுல இந்த ஊர் எனக்கு அதிகம் பழகலை. எங்கே பார்த்தாலும் புறக்கணிப்பு, அதனால வந்த ஃபெயிலியர், வேதனை, டிப்ரஷன், காதல் தோல்வின்னு எல்லாம் தாண்டி பூர்ணமாகிட்டேன்.

இந்த ஊருக்கு ஏத்தவனா செட் ஆயிட்டேன். ‘சூது கவ்வும்’ என்னை அடையாளம் காட்டிச்சு. பால் வடியும் முகத்தோடு நயன்தாராவுக்கு கோயில் கட்டிட்டு குப்புற படுத்திருந்த என்னை படத்தில் ரசிக்க ஆரம்பிச்சிட்டாங்க. சின்னதா ஒரு ஒளி வந்தது. அது அப்படியே பெருசானா நல்லாயிருக்கும்னு நினைச்சேன்.

அப்புறம் ‘நேரம்’. மீட்டர் வட்டி வசூலிக்கிறவனா... அதிலும் அடையாளம் தெரிந்தது. கிடைச்ச கொஞ்ச ‘நேரத்தில்’ சுதாரிப்பாக இருந்து நடிச்சேன். அப்புறம் கார்த்திக் சார், ‘ஜிகர்தண்டா’வில் தீவிரமாகிட்டார். எனக்கு ‘சேது’ கேரக்டர் பிடித்தது. கொஞ்சம் கார்த்திக் மனசு வச்சா கிடைச்சிடும்னு நினைச்சேன்.

கூச்சமில்லாம அவர்கிட்டயே, ‘சேது கேரக்டர் தருவீங்களா?’ன்னு கேட்டுட்டேன். ‘உன்னால் தாங்க முடியாதுப்பா’ன்னு ஒத்தை வரியில் சொல்லிட்டு, ‘வேற ரோல் பார்க்கலாம்’னு ஆறுதலும் சொல்லிவிட்டுப் போயிட்டார். அப்புறம் இன்னும் ஸ்கிரிப்ட் ஒரு கட்டத்திற்கு வந்தப்போ, சித்தார்த் ரோலுக்கு நான், ‘சேது’ கேரக்டருக்கு விஜய்சேதுபதின்னு பேச்சு வந்தது. அப்புறம் திடீர்னு ஒருநாள் கார்த்திக் கூப்பிட்டார். ‘ ‘சேது’வா நீ நடிக்கிறே... ரெடியா இரு.

இந்தக் கேரக்டர் படத்துக்கு உயிரு. நல்லா பண்ணினாலும், இல்லைன்னாலும் நடிகனா அடுத்தடுத்த படங்கள் உனக்கு வந்துடும். ஆனா, நீ சரியா செய்யலைன்னா என் கேரியர் முடிஞ்சுடும். முதல் வெற்றி ஏதோ அதிர்ஷடம்னு ஆகிடும்’னு சொன்னார். உள்ளே பதற்றம். ஆனா, அதை கேரக்டரில் காட்டினா கெத்து போயிடும். அதனால பயத்தை நெஞ்சுக்குள்ளே வச்சுக்கிட்டு, நிமிர்ந்து நடிச்சேன்.

நான் சித்தார்த்துக்கு நன்றி சொல்லணும். எந்த ஒரு ஹீரோவும் இப்படி விட்டுக் கொடுக்க மாட்டாங்க. அவரின் பெருந்தன்மைக்கு நான் தலை வணங்குறேன். என்னை, ‘பிழைச்சுப் போ’ன்னு சொல்லிட்டார்னு நான் நம்புறேன். ஒண்ணுமே தெரியாம சினிமாவுக்கு வந்தவன் நானாத்தான் இருப்பேன். அப்புறம்தான் பயம் வந்து குறும்படங்கள், கூத்துப்பட்டறைன்னு போய் கொஞ்சம் கத்துக்கிட்டேன். என்னை அவங்கதான் செதுக்கினாங்க.

கூத்துப் பட்டறையில் எனக்கு நடிப்பு சொல்லிக் கொடுத்த சோமசுந்தரம் சார்தான், ‘ஜிகர்தண்டா’வில் குட்டிக் குட்டி நடிப்பு சொல்லிக் கொடுத்தார்.கார்த்திக், நலன், விஜய்சேதுபதி, சித்தார்த் எல்லாருக்கும் கடமைப்பட்டிருக்கேன். இதில் எந்த இடத்திலும் ‘நான்தான்’னு மார் தட்டிக்க எதுவுமே இல்லை. அம்மாவின், அப்பாவின் நம்பிக்கையை மீண்டும் பெற்றது மட்டும்தான் எனக்குச் சிறப்பு...’’ - தாரை தாரையாக வழியும் மழையைப் பார்த்துச் சொல்கிறார் சிம்ஹா.

- நா.கதிர்வேலன்