கடைசி பக்கம்



ஒரு மலைக் கிராமத்தில் இருந்தது அந்தச் சிறுமியின் வீடு. எளிமையான சிறிய வீடு. சுற்றிலும் தோட்டம். ஏழைகளாக இருந்தாலும், அன்பில் வறுமையற்ற பெற்றோர். அவளுக்கு ‘நாம் இவ்வளவு ஏழ்மையில் இருக்கிறோமே’ என்ற ஏக்கம் இருந்தது. தினமும் அவள் பள்ளிக்குச் செல்லும்போது, தூரத்து பள்ளத்தாக்கில் ஒரு மாளிகையைப் பார்ப்பதுண்டு. பிரமாண்டமான அந்த மாளிகை, காலைச் சூரியனின் வெளிச்சத்தில் தங்க நிறத்தில் ஜொலிக்கும்.

 உயர உயரக் கதவுகள், ஜன்னல்கள், பால்கனி என எல்லாவற்றிலும் ஆடம்பரம் இழைத்திருக்கும். அதன் ஒரு சிறிய அறை அளவுக்குக்கூடத் தனது வீடு இருக்காது எனத் தோன்றும் அவளுக்கு! இப்படி ஒரு மாளிகையில் வசிக்கத்தான் முடியவில்லை. ஒருமுறை சென்றாவது பார்க்கலாமே என நினைப்பாள். ஆனால் அவளை எங்கும் தனியே அனுப்புவதில்லை பெற்றோர்.

ஆண்டுகள் கடந்தன. பக்கத்து கிராமத்தில் தோழியைப் பார்க்கப் போவதாக அனுமதி வாங்கிக் கொண்டு ஒருநாள் தன் கனவு மாளிகையைப் பார்க்க சைக்கிளில் கிளம்பினாள்.
அடர்மரங்கள் சூழ்ந்திருக்கும் காடுகளுக்கு இடையே வளைந்து நெளிந்து நீண்ட பாதையில் செல்லும்போதே அவளுக்குள் பரவசம் பூத்தது. கனவுகளைக் கண்களில் தேக்கியபடி மாளிகையின் முன் நின்றபோது அவளுக்கு அதிர்ச்சி. எங்கும் அழுக்குப் படிந்து, கதவுகளும் ஜன்னல்களும் வெளிறிப் போய்...

சூனியமான ஒரு அமைதியில் பாழடைந்து கிடந்தது அந்த வீடு.‘இதையா நாம் இத்தனை நாள் கனவில் தேக்கி வைத்திருந்தோம்’ என இதயம் நொறுங்கித் திரும்பினாள். அப்போது தூரத்து மலை முகட்டில் ஒரு வீடு மாலைச் சூரியனின் வெளிச்சத்தில் தங்க நிறத்தில் ஜொலித்தது. அவளுக்குத் திகைப்பு! அது, எல்லையற்ற அன்போடு அவள் வளர்க்கப்படும் அந்த சிறிய வீடு. அக்கரை பச்சையில்லை!                                                                              

நிதர்ஸனா