குட்டிச்சுவர் சிந்தனைகள்!



ஆண்கள் சிறந்தவர்களா? பெண்கள் சிறந்தவர்களா?ன்னு கேள்வி வந்தா, கண்ண மூடிக்கிட்டு சொல்லலாம், பெண்கள்தான்னு...  டி.வி விளம்பரங்களை எடுத்துக்கோங்க, பெண்கள் பயன்படுத்தற சிகப்பழகு கிரீம், பட்டு சேலை முதல் நைட்டி வரை பல பொருட்களின் விளம்பரங்களுக்கு பெண்கள் வர்றாங்க...

 அது ஓகே! ஆண்களின் பனியன், லுங்கி விளம்பரங்களுக்கும் பெண்களை சேர்த்துக்குறாங்க பாருங்க... அதுதான் பெண்ணின் பெருமை. ரோட்டுல ஒரு பெண் கால் வழுக்கி கீழ விழுந்தாங்கன்னு வைங்க... ஊரே ஓடிப் போய் தூக்கி விடும். இதுவே நம்மாளு ஒருத்தன் விழுந்தான்னு வைங்க, ‘குடிகாரப் பய’ன்னு திட்டிட்டு நடைய கட்டிக்கிட்டே இருப்பாங்க.

நாம ஷேவிங் செய்ய தர்றது அதிகபட்சம் 40 ரூபா. அதுவே பொண்ணுங்க புருவத்த டிரிம் பண்ணினாவே 100 ரூபா. ஆண்கள் கட்டுற எட்டு முழ வேட்டி விலை வெறும் 200 ரூபா. ஆனா, பொண்ணுங்க கட்டற சேலைய நினைச்சு பாருங்க, இமயமலையோட விலை வரும். செல்போன எடுத்துக்குங்க, முதல்ல வர்றது நார்மல் மாடலா இருக்கும்; அடுத்தடுத்து வர்றதுதான் அருமையான மாடலா இருக்கும். அதனாலதான் ஆண்டவன் முதல்ல ஆண்களைப் படைச்சுட்டு, அப்புறம் அருமையான அப்டேடட் மாடலான பெண்களை படைச்சாரு.

ஒரு கல்யாணத்துல ஆண் சாப்பிடுறதைப் பாருங்க, ஒரு அயிட்டம் மிச்சம் வைக்காம எல்லாத்தையும் சாப்பிட்டிருப்பாங்க. ஆனா பொண்ணுங்க, ஒவ்வொரு அயிட்டத்திலயும் கொஞ்சம் கொஞ்சம் சாப்பிட்டு இருப்பாங்க.

பார்க்கிற நமக்கே நம்மாளுங்க நாலு நாள் பசில இருந்து சாப்பிட்ட மாதிரியும், பொண்ணுங்க ருசியறிந்து சாப்பிட்ட மாதிரியும் இருக்கும். ஒரு ஆம்பளை தன் விசிட்டிங் கார்டைக் கொடுத்தா கூட தூக்கிப் போட்டுவிட்டு நகரும் சமூகம், ஒரு பொண்ணு போன் நம்பர வாங்க எவ்வளவு உப்பு தின்னு தண்ணியக் குடிக்குதுன்னு உங்களுக்கே தெரியும்.

அட இவ்வளவு ஏன்? உலகத்தையே காக்குற சிவபெருமானுக்கு ஒரு சட்டைக்கு வழியில்ல, ஆனா, சிவனோட சம்சாரமாகிய சக்தி தேவி, 24/7 முழு மேக்கப்ல இருக்காங்க. இதுதான் பெண்களின் சிறப்பு. இதுனாலதான் பெண்கள் என்றுமே சிறப்பு!

கல்யாணத்துக்கு பிறகு மனைவிகள் உண்டாவதை எதிர்பார்ப்பது போல, குண்டாவதையும் எதிர்பார்க்கணும். கல்யாணத்துக்கு முன்னால நதியா மாதிரி இருந்துட்டு, கல்யாணத்துக்கு அப்புறம் நமீதா மாதிரி பிரமாண்டமா மாறுகிற நம்ம ஊரு பொண்ணுங்களைக் காப்பியடிச்சுதான் ஹாலிவுட்காரனுங்க ‘டிரான்ஸ்ஃபார்மர்ஸ்’ படத்தை எடுத்தானுங்கன்னு சொன்னா நம்பவா போறீங்க?

சரி, அதை விடுங்க! அவ்வப்போது ஊருக்குள்ள வந்து உருமிட்டுப் போற ‘காட்ஸில்லா’ கதை எதுன்னு புரியலையா? வருஷம் ரெண்டு தடவை வந்தாலும், நம்ம வீட்டுல ‘போட்டுடு பொகையட்டும்’னு சண்டைய மூட்டி விட்டுட்டுப் போற மாமியாருதான்யா அந்த காட்ஸில்லா.

பொண்டாட்டிங்க சமையல் கட்டுல இருந்து கரண்டியத் தூக்கிப் போடுறது, கிண்ணத்த தூக்கிப் போடுறதுன்னு இருக்கிறப்ப, நம்மாளுங்க தட்டால அதை தடுப்பாங்களே... அதை நமக்குத் தெரியாம நம்ம வீட்டுக்குள்ள சாட்டிலைட் வழியா பார்த்துட்டு அவனுங்க எடுத்த படம்தான் ‘கேப்டன் அமெரிக்கா’... அதுல கேப்டன் அமெரிக்கா வச்சிருக்கிற கேடயம் வேற ஒண்ணுமில்ல, போன சண்டே நாம காளான் பிரியாணிய வாய் வழியாவே வழிச்சு எடுத்தோமே, அந்த தட்டுதான் ப்ரோ!

‘Planet of the Apes’  னு ஒரு படம் போன மாசம் சக்கை போடு போட்டுச்சுல்ல, அது என்ன கதை? சூப்பர் ஸ்டார், லிட்டில் சூப்பர் ஸ்டார், மினி சூப்பர் ஸ்டார், மைக்ரோ சூப்பர் ஸ்டார், மீடியம் சூப்பர் ஸ்டார், மைல்ட் சூப்பர் ஸ்டாருன்னு பலரோட படம் வர்றப்ப நம்மாளுங்க பாலபிஷேகம் பண்றது, தோளு மேல ஏறி டிக்கெட் எடுக்கிறது, பஸ் டேன்னு சொல்லி நடு ரோட்டுல தாவிக் குதிக்கிறது, ரோட்டுல டிராஃபிக்க மறிச்சுக்கிட்டு கிரிக்கெட் பார்க்கிறதுன்னு பண்ற நல்ல நல்ல பழக்கங்களைக் காப்பியடிச்சு எழுதுன ஸ்க்ரிப்ட்தான்யா அது.

சுட வந்த புல்லட் தலையிலயே துண்ட போட்டு டாட்டா காட்டி அனுப்பி வைக்கிற நம்ம கேப்டனோட ‘தர்மபுரி’யையும் ‘நரசிம்மா’வையும் ‘சத்ரிய’னையும் ‘ஹானஸ்ட்ராஜை’யும் சுட்டு எடுத்ததுதான்   Iron man, XMan போன்ற படங்கள். ‘வானத்தை போல’ படத்துல சின்ன விஜய காந்துக்கு நார்மல் வாய்ஸும், பெரிய விஜயகாந்துக்கும் ஹஸ்கி வாய்ஸும் இருக்குமே... அந்த மாடுலேஷன் வித்தியாசத்தை சுட்டு, ‘பேட்மேன்’ படம் எடுத்துதான் இன்னைக்கு கிறிஸ்டோபர் நோலன் பெரிய ஆளா ஆகியிருக்காரு.

வழக்கமா இந்த சினிமாக்காரங்க ஒன்லைனர் ஒன்லைனருன்னு சொல்வாங்களே, அந்த ஒன்லைனர எப்படி புடிக்கிறாங்க தெரியுமா ப்ரோ? ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ங்கிற நம்ம ‘மனோகரா’ பட ஒரு வரி டயலாக்க வச்சு எடுத்ததுதான் ‘ஹல்க்’. இந்த பர்ட்டிகுலர் மேட்டர பத்தியும், மிச்ச சொச்ச சுட்ட கதையை பற்றியும் நாம டீடெயிலா அடுத்த வாரம் பார்ப்போம்...

இது வரை ஒரியா படம் கூட பார்த்ததில்ல, எல்லோரும் சொல்றாங்களேன்னு, நேத்து ஒரு கொரியா படம் பார்த்தேன். செம படம், செம மேக்கிங்.

 ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு எல்லாம் டாப்பு டக்கர். சும்மா சொல்லக்கூடாது மிரட்டிட்டானுங்க. அதுல பாருங்க, படம் ஆரம்பிக்கிறப்ப, படத்துல நடிச்சிருக்கிறதா, டைட்டில்ல நிறைய பேரோட பெயர போட்டாலும், ஒருத்தனே ஒரே மூஞ்சிய வச்சுக்கிட்டு, எல்லா கேரக்டர்லயும் நடிச்சிருக்காம்பா, பொண்ணு கேரக்டர் உட்பட.

 நான் அப்படியே ஷாக்காயிட்டேன். அப்பவும் ஒரு சந்தேகம், நம்ம கமல் சார் கூட 10 வேஷத்துலதான் வந்தாரு. இவன் எப்படிடா 50 வேஷத்துல வந்தான்னு! அதான் மெட்ராஸ்ல ஒரு சைனீஸ் ரெஸ்டாரன்ட்ல வேலைல இருக்கிற நம்ம பய ஒருத்தன்கிட்ட கேட்டேன். அவன் சொன்னான், ‘‘காமெடி பண்ணாதீங்கண்ணே, எல்லா கொரியாக்காரங்களும் ஒரே மாதிரி இருப்பாங்க, நீங்க கன்ஃப்யூஸ் ஆயிட்டீங்க’’ன்னு. திரும்பவும் நான்தான் அவுட்டா?

இந்த வார குட்டிச் செவுரு போஸ்டர் பாய்ஸ்...

சொத்து குவிக்கிற மாதிரி, இங்கிலாந்தில் குத்துகள் வாங்கிக் குவிக்கும் இந்திய கிரிக்கெட் அணிதான்!

ஆல்தோட்ட பூபதி