ஆழ்துளைக் கிணறு தண்டனைச் சட்டம்



உணவு உற்பத்தியை பாதிக்கும்?

தமிழகத்தில் கடந்த 8 மாதத்தில் 3 குழந்தைகளின் உயிரைக் குடித்திருக்கின்றன ஆழ்துளைக் கிணறுகள். ஐந்து குழந்தைகள் கிணற்றுக்குள் விழுந்து குற்றுயிரும் குலையுயிருமாக மீட்கப்பட்டுள்ளார்கள். இந்தக் கொடூரத்துக்கு முடிவு கட்டும் வகையில் தமிழக அரசு ‘ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளை முறைப்படுத்தும் சட்டம்’ ஒன்றை இயற்றியிருக்கிறது.

 இனி ஆழ்துளை, ஆழ்குழாய்க் கிணறுகளைத் தோண்ட, 5000 ரூபாய் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும். உரிய பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றினால் மட்டுமே உள்ளாட்சி அமைப்பு கிணறுதோண்ட அனுமதி அளிக்கும். அனுமதி பெறாமலோ, பதிவு செய்யாமலோ கிணறு தோண்டினால் 3 முதல் 7 ஆண்டுகள் சிறைத் தண்டனை; 50 ஆயிரம் ரூபாய் அபராதம்.

நான்கு புறமும் அண்டை மாநிலங்கள் நதிகளை அணை கட்டித் தடுத்து விட்ட நிலையில், தமிழக விவசாயிகள் கிணறுகளை நம்பியே விவசாயம் செய்கிறார்கள். ஆனால் அதையெல்லாம் பராமரிப்பதில் காட்டும் அலட்சியம், அப்பாவிக் குழந்தைகளின் உயிரைக் காவு வாங்கி விடுகிறது.

இந்தியாவெங்கும் கடந்த 10 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட குழந்தைகள் பலியாகி இருக்கிறார்கள். 2010 மற்றும் 2013ம் ஆண்டுகளில் ஆழ்குழாய், ஆழ்துளைக் கிணறுகளைப் பராமரிப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உச்ச நீதிமன்றம் வகுத்துக் கொடுத்தது. பெரும்பாலான மாநில அரசுகள் அதைக் கவனத்தில் கொள்ளவில்லை.

மேட்டுப்பாங்கான பகுதிகளில் இருக்கும் நிலங்கள் பெரும்பாலும் கிணற்றுப் பாசனத்தையே நம்பியிருக்கின்றன. ஆறுகளில் தண்ணீர் வரும்போது கிணறுகளில் 50 அடி, 100 அடிக்கே தண்ணீர் ததும்பும். கோடையில் வறண்டு விடும். சற்று வசதியுள்ள விவசாயிகள், கிணறு களை ஆழப்படுத்துவார்கள்.

வசதியற்ற விவசாயிகள் அப்படியே கைவிட்டு விடுவார்கள். கிராம நிர்வாக அதிகாரியிடம் பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தும் உள்ளாட்சி அமைப்புகளிடமோ, விவசாயத் துறையிடமோ கிணறுகள் குறித்து எந்தப் பதிவுகளும் இல்லை. தற்போது உருவாக்கப்பட்டுள்ள சட்டத்தால், இதுவரை வெட்டியுள்ள கிணறுகள், புதிதாகத் தோண்டப்படும் கிணறுகள் கணக்கில் இடம் பெறுவதோடு கண்காணிப்பிலும் வரும். அந்த வகையில் இந்த சட்டம் முக்கியமானது என்கிறார்கள் சிலர்.

ஆனால், ‘‘இந்த சட்டம் வருவாய்த் துறைக்கு வருமானம் அளிக்கும் மற்றுமொரு சட்டமாக மட்டுமே இருக்கும். இதனால் தமிழகத்தில் உணவு உற்பத்தி கணிசமாக பாதிக்கப்படும்...’’ என்று குமுறுகிறார்கள் விவசாயிகள்.

‘‘தமிழகம் 80% விவசாயத்தை நம்பியிருக்கும் மாநிலம். ஒரு சட்டத்தை இயற்றுவதற்கு முன்பு நிதானமாக அனைத்து அம்சங்களையும் விவாதிக்க வேண்டும். தன் பட்டா நிலத்தில் முள்வேலி போடவோ, காம்பவுண்ட் சுவர் கட்டவோ, கிணறு தோண்டவோ ஒரு நபருக்கு முழு உரிமையும் இருக்கிறது. பட்டாதாரரின் விருப்பமின்றி அதில் அந்நியர்கள் நுழையக்கூடாது என்கிறது இந்திய அரசியல் சட்டம். அந்த உரிமையை முற்றிலுமாகப் பறிக்கிறது இந்த சட்டம்.

ஏற்கனவே விவசாயிகளுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள். இடுபொருட்களின் விலை விண்ணுக்கு நிற்கிறது. விளை பொருளுக்கு விலை கிடைக்கவில்லை. நதிநீர் விவகாரங்கள் அனைத்தும் இழுத்துக் கொண்டு நிற்கின்றன.

ஆற்றுப் பாசனத்தை நம்பி விவசாயம் செய்ய முடியாத நிலை. இருக்கும் ஒரே தீர்வு, கிணறுகள்தான். இன்னொரு சொத்தை விற்றோ, வட்டிக்கு கடன் வாங்கியோதான் விவசாயி கிணற்றைத் தோண்டுகிறார். ஒரு ஆழ்குழாய் கிணற்றைத் தோண்ட ரூ.2 லட்சம் வரை செலவாகிறது. கிணற்றை முறையாகப் பராமரிக்க வேண்டும்;

கண்காணிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதற்கு 5000 ரூபாய் கட்டி விண்ணப்பிக்க வேண்டும் என்ற இடத்தில்தான் சிக்கல் வருகிறது. வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளிடம் எந்த வேலைக்குச் சென்றாலும் பணம் கொடுக்காமல் நடப்பதில்லை. கிணறு, வாழ்வாதாரம் என்பதால் அதற்கு அனுமதி தர பெரும் விலை கொடுக்க வேண்டியிருக்கும். அந்த வகையில் விவசாயி தலையில் கூடுதல் சுமையை இந்தச் சட்டம் சுமத்துகிறது’’ என்கிறார் தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ராமக் கவுண்டர்.

அவர் தார்மீகமாக சில கேள்விகளையும் முன் வைக்கிறார். ‘‘சாலையில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஓடுகின்றன. தினமும் பல நூறு பேர் விபத்தில் இறக்கிறார்கள். அதனால் இனிமேல் சாலையில் வாகனங்களே ஓடக்கூடாது என்று சொல்ல முடியுமா? தமிழகத்தில் 3 லட்சம் திறந்தவெளிக் கிணறுகள் இருக்கின்றன. இந்த கிணறுகளில் சராசரியாக தினமும் 10 பேர் விழுந்து இறக்கிறார்கள். அதற்காக இந்த கிணறுகளை தூர்த்து மூடி விட்டோமா? தமிழகத்தில் 60 லட்சம் ஆழ்குழாய், ஆழ்துளைக் கிணறுகள் உண்டு.

இந்த ஆண்டு 3 குழந்தைகள் இந்த கிணறுகளில் தவறி விழுந்து இறந்திருக்கிறார்கள். உண்மையில் ஈடு செய்ய முடியாத இழப்பு இது. ஆனால், எங்கோ 10 பேர் செய்த தவறுக்காக விவசாய சமூகத்தையே வஞ்சிப்பது நியாயமா? இந்தப் பிரச்னைக்கு தீர்வு அல்லவா தேட வேண்டும்? ஆழ்குழாய் கிணறுகள் இல்லாமல் விவசாயமே செய்ய முடியாது. இந்த சட்டத்தால் உணவு உற்பத்தி பாதிக்கும்’’ என்கிறார் ராமக் கவுண்டர்.

குழந்தைகள் உரிமைக்காக போராடும் அமைப்புகளும் இந்த நியாயத்தை ஏற்றுக்கொள்ளத்தான் செய்கின்றன. குழந்தை உரிமைக்கான முன்னணியின் நிர்வாகி தென்பாண்டியன், ‘‘ஆழ்துளைக் கிணறுகளில் குழந்தைகள் இறப்பதைத் தடுக்கும் வகையில் உச்ச நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. கிணறு அமைப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பே உள்ளாட்சி அமைப்பிடம் அனுமதி வாங்க வேண்டும்; கிணறு அமைக்கும் நிறுவனங்கள் மாவட்ட நிர்வாகத்தில் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

கிணற்றைச் சுற்றிலும் முள்வேலி இட வேண்டும்; கைவிடப்படும் கிணறுகளை மண், மணல், ஜல்லி கொண்டு மூடவேண்டும். கிணற்றுக்கு அருகில் அறிவிப்புப் பலகை வைக்க வேண்டும் என பல அம்சங்கள் அதில் உண்டு. ஆனால் தமிழக அரசின் சட்டம் பாதுகாப்பு, முறைப்படுத்தல் தொடர்பான அம்சங்களில் கவனம் செலுத்தவில்லை.

பணப் பரிவர்த்தனையைப் புகுத்தி, லஞ்சத்துக்கான வாய்ப்பையே உருவாக்குகிறது’’ என்கிறார் அவர்.குழந்தைகளின் உயிருக்கு நிகர் ஏதுமில்லை. அவர்களைப் பாதுகாக்க ஒரு சட்டம் தேவை; ஆனால் அது விவசாயிகளை பாதிப்பதாக இருக்கக்கூடாது.  எங்கோ 10 பேர் செய்த தவறுக்காக விவசாய சமூகத்தையே வஞ்சிப்பது நியாயமா? இந்தப் பிரச்னைக்கு தீர்வு அல்லவா தேட வேண்டும்?

 வெ.நீலகண்டன்