டீ கடையில் திருக்குறள் பாடம்!



பேராவூரணி - அறந்தாங்கி சாலையில் சந்தையை ஒட்டியிருக்கிறது அந்த தேனீர் கடை. முகப்பில் இருக்கிற கரும்பலகை வெண் எழுத்துக்களால் திருக்குறளும் அர்த்தமும் சொல்கிறது. 

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லையாண்டும் அஃதொப்பது இல். மற்றவரிடம் உதவிபெறாமல் வாழும் வாழ்க்கையை விட பெருமையானது இந்த உலகத்தில் வேறொன்றும் இல்லை. இப்போது என்றில்லை. எந்தக் காலத்திலும் அதற்கு நிகர் வேறெதுவுமில்லை...’  கடையின் உள்ளே நூல்கள் பரவிக் கிடக்கின்றன.

வெளியில், நாற்காலிகளில் நிறைந்திருக்கிறார்கள் கல்லூரி மாணவர்கள். அவர்களுக்கான தேனீரை ஆற்றிக்கொண்டே கீழ்வெண்மணி போராட்ட வரலாற்றைச் சொல்கிறார்  தங்கவேலனார்.

தங்கவேலனாரின் கடைக்கு தேனீர் அருந்த வருபவர்களை விட, அவரின் வசீகரமான வெண்கலக் குரலில் காந்தியையும், வள்ளுவரையும், காரல் மார்க்ஸையும் தரிசிக்க வருபவர்கள் அதிகம். புதுக்கோட்டைக்கு அருகில் உள்ள குலமங்கலம்தான் தங்கவேலனாரின் பூர்வீகம். தற்போது பேராவூரணிக்கு அருகில் உள்ள கூப்புளிக்காட்டில் வசிக்கிறார். மனைவி பெயர் மேனகா. முகிலன், சித்ரா என இரு பிள்ளைகள்.

முறையான பள்ளிக்கல்வியைக் கூட முடிக்காத தங்கவேலனார், தம் தீரா முயற்சியால் ஆங்கில இலக்கியங்களைக் கூட மொழிமாற்றும் அளவுக்கு புலமை பெற்றிருக்கிறார். மார்க்சியம், காந்தியம், திருக்குறள் என பல்துறைத் தேர்ச்சி மிக்க அவர், டீக்கடை தவிர்த்த பிற நேரங்களில் பயிற்றுவித்தலையே முழுப்பணியாகக் கொண்டிருக்கிறார்.

‘‘விவசாயம் சார்ந்த வாழ்க்கை. பள்ளிக்கூடத்தை விடவும் வயற்காடு பிடித்தமானதாக இருந்தது. எழுத்துக் கூட்டும் அளவோடு படிப்புக்கு முற்றுப்புள்ளி. நான் விவசாயப் பொறுப்பை முழுமையாக ஏற்ற நேரம் விவசாய இயக்கங்கள் பேரெழுச்சி பெற்றிருந்தன. தலைவர்களின் தலைக்கு விலை வைக்கும் அளவுக்கு நிலைமை இருந்தது.

 எங்கள் இதயத்தில் எழும்பிய கேள்விகளை அவர்கள் உரக்க எழுப்பினார்கள். அந்த உந்துதலில் விவசாய இயக்கத்துக்குள் நுழைந்து களப்பணியாளராக மாறினேன். நாங்களே பாடல்கள் எழுதி, இசைக்குழு வைத்து, ஊர் ஊராகப் போய்ப் பாடுவோம். அத்தருணத்தில்தான் வாசிக்கப் பழகினேன். படிப்படியாக தமிழ் கை வந்தது. அப்படியே ஆங்கிலத்தையும் பழக்கமாக்கிக் கொண்டேன். மார்க்சியம் என் வாழ்க்கையை ஆக்கிரமித்தது.

மார்க்சியத்தின் மேன்மையே தேடுதலை உருவாக்குவதுதான். அந்த தேடுதல் என்னை காந்தியில் நிறுத்தியது. ‘தனி மனித வாழ்க்கையில் வருகிற தூய்மை உலகையே மாற்றிவிடும்’ என்ற காந்தியின் கோட்பாடு என்னைக் கவர்ந்தது. மார்க்சிய மனநிலையில் இருந்தபடி தீவிரமாக காந்தியைப் பின்பற்றத் தொடங்கினேன். மார்க்சியம் என் பாதையை செப்பனிட்டது. காந்தியம் என் வாழ்க்கையைச் செப்பனிட்டது.

காலமும் சூழலும் வாசிப்பும் மனிதனை மாற்றிக்கொண்டே இருக்கும். அப்படி மாறாவிட்டால் தர்க்கத்துக்கு தயாராகவில்லை என்று பொருள்.  குன்றக்குடி அடிகளாரோடு எனக்கு ஏற்பட்ட நட்பு, திருக்குறளின் மீது ஆர்வத்தை உருவாக்கியது. எங்கள் பகுதியில் நிறைய பட்டிமன்றங்கள் நடக்கும். குன்றக்குடி அடிகளார் கலந்து கொள்ளும் பட்டிமன்றங்கள் பெரும்பாலும் திருக்குறள் சார்ந்ததாகவே இருக்கும்.

திருக்குறள் ஈற்றடிகளுக்குள் இந்த உலகத்துக்கான அத்தனை வாழ்வியல் நெறிகளும் இருப்பதை அடிகளார் மூலம் உணர்ந்தேன். முழுமூச்சாக வாசித்தேன். ‘எதனோடும் ஒப்பிட முடியாத ஒரு ஆன்மப்பாதை அது’ என்று உணர்ந்த பிறகுதான் நான் ஓரளவுக்கு முழுமையடைந்தேன்.

மார்க்சியத்தால் பணக்காரன்-ஏழை என்ற வர்க்க பேதத்தை ஒழிக்கலாம். அம்பேத்கர், பெரியார் போன்ற தலைவர்களின் வழியில் சாதிய வேறுபாடுகளைக் களையலாம். காந்தியத்தால் தனி மனித வாழ்க்கையை செப்பனிடலாம்.

 ஆனால் திருக்குறள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது. கூடுதலாக சுய மேம்பாட்டை உருவாக்குவதோடு, பிறர் மீது அக்கறையுள்ள புதிய வாழ்க்கைக்கு அடித்தளம் அமைக்கும் பிரிவினையற்ற உலக வேதமாக அது இருக்கிறது. அது, வாழ்வதற்கான வழியைச் சொல்லவில்லை. பிறரை வாழ்விப்பதற்கான வழியைத்தான் காட்டுகிறது. 

திருக்குறளை மதிப்பெண் பெற்றுத் தரும் மனப்பாடப் பாடலாக மட்டுமே வைத்திருக்கிறோம். அதற்குள் ஒளிந்திருக்கும் பேரொளியை நாம் வெளிக்கொணரவில்லை. அந்த ஆதங்கம் என்னை வதைத்தது. அதையே என் பிரதான பணியாக மாற்றிக்கொண்டேன்...’’ என்கிறார் தங்கவேலனார்.

விவசாயம் ஏற்படுத்திய பின்னடைவை டீக்கடை கொண்டு மீட்டிருக்கிறார் தங்கவேலனார். அதிகாலை 4 மணிக்கு கடைக்கு வருபவர், 10 மணிக்கெல்லாம் கடையை ஆள்மாற்றிவிட்டு பையில் புத்தகங்களைத் திணித்துக்கொண்டு கிளம்பி விடுகிறார். குழந்தைகளுக்கான நீதிபோதனை வகுப்புகள்; திருக்குறள் வகுப்புகள்; கருத்தரங்குகள்; விவாதங்கள் என நீள்கிறது நேரம். திருக்குறளை குழந்தைகள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், வாசிப்பை எளிமைப்படுத்தும் விதமாகவும்
வடிவமைத்திருக்கிறார்.

‘‘1330 குறளையும் மனப்பாடம் செய்து ஒப்புவிப்பதால் பரிசு வேண்டுமானால் கிடைக்கும். பலன் கிடைக்காது. அதை வாசித்து பொருள் உணர வேண்டும். எல்லாக் குறள்களையும் படிக்க வேண்டாம். ஊக்கமுடமை, ஒழுக்கமுடைமை, அறிவுடைமை போன்ற உடைமை அதிகாரங்களை மட்டும் படித்தால் கூட போதும்.

வாசிப்பை எளிமையாக்க பாடல் வடிவில் படிக்கும் நுட்பம் ஒன்றை கண்டறிந்து சொல்லிக் கொடுக்கிறேன். குழந்தைகளுக்குப் பயிற்சியளித்து திருக்குறள் கவனகர்களை உருவாக்குகிறேன். குறளை வாழ்க்கையோடு தொடர்புபடுத்தும் ஒரு உரையையும் நிறைவு செய்திருக்கிறேன். திருக்குறள் முற்றோதல்களையும் நடத்தி வருகிறேன்.

இன்று உலகத்தை உலுக்கும் எல்லாப் பிரச்னைகளுக்கும் தீர்வு திருக்குறளில் இருக்கிறது. நடைமுறை வாழ்க்கைக்குள் அதை கொண்டு சேர்ப்பது மட்டுமே இப்போதைய தேவை...’’ என்கிறார் தங்கவேலனார். தங்கவேலனாரின் டீக்கடை மட்டுமல்ல... தங்கவேலனாரே ஒரு நூலகம்தான்.

மார்க்சியத்தால் பணக்காரன்-ஏழை என்ற வர்க்க பேதத்தை ஒழிக்கலாம். அம்பேத்கர், பெரியார் வழியில் சாதிய வேறுபாடுகளைக் களையலாம். காந்தியத்தால் தனி மனித வாழ்க்கையை செப்பனிடலாம். திருக்குறள் இவை அனைத்தையும் உள்ளடக்கியது.

வெ.நீலகண்டன்
படங்கள்: ராபர்ட்