எபோலாவுக்கு வந்தாச்சு தடுப்பூசி!



உலகின் எல்லா தேசத்து மக்களும் இன்று அதீத பயத்தோடு உச்சரிக்கும் ஒற்றை வார்த்தை... ‘எபோலா’! ஆப்ரிக்காவின் மேற்குப் பகுதியில் இருக்கும் கினியா, லைபீரியா, சியாரோ லியோன், நைஜீரியா ஆகிய நான்கு தேசங்களை நிலைகுலையச் செய்திருக்கிறது இந்த நோய். பறவைக் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல், சார்ஸ் போன்றவற்றை விட இது ஏன் பயங்கரம் என்றால், இது தாக்கினால் மரணம் நெருங்குவதே!

‘எங்கோ ஆப்ரிக்காவில் எபோலா வந்தால் நமக்கென்ன?’ என இருக்க முடியாது. இன்று உலகமே ஒரு கிராமமாக சுருங்கி விட்டது. இந்தியர்கள் எல்லா நாடுகளிலும் வேலை பார்க்கிறார்கள்; ஆப்ரிக்க நாடுகளிலிருந்து சிகிச்சைக்கு அதிகம் பேர் வருவது சென்னைக்குத்தான்! இந்த சூழலில், எப்படி முன்னெச்சரிக்கையோடு இருப்பது?

* கடந்த 1976ம் ஆண்டுதான் எபோலா முதலில் தாக்கியது.  ஆரம்ப காலத்தோடு ஒப்பிடும்போது இந்த வைரஸ் இப்போது கொஞ்சம் கருணை காட்டுகிறது. அப்போது 100 பேரை எபோலா தாக்கினால், 90 பேர் இறந்துவிடுவார்கள். இப்போது 54 பேர் இறக்கிறார்கள். இந்த எண்ணிக்கையே அதிகம் என்பதால்தான் உலகம் பீதி கொள்கிறது.

* இன்று உலகெங்கும் 10 லட்சம் பேர் எபோலா பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேருக்கு மரணம் உறுதி என்பது எவ்வளவு பெரிய வேதனை! 

* ஒருவரைத் தாக்கியதும், அவரது உடலில் இயல்பாக இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியைத் தகர்ப்பது தான் எபோலா வைரஸ் செய்யும் முதல் வேலை. அதன்பின் ரத்தத்தில் கலந்து உடல் முழுவதும் பயணிக்கிறது.

 ரத்தக் குழாயில் ஆங்காங்கே ரத்தக்கட்டிகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடலின் பெரும்பாலான உறுப்புகள், போதுமான ரத்தம் கிடைக்காமல் தவித்துப் போகின்றன. உயிர் காக்கும் உறுப்புகளில் கல்லீரல் முதலில் செயலிழக்கிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் படிப்படியாக எல்லா உறுப்புகளும் திணற, ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்து, ஒரு அதிர்ச்சியில் உயிர் பிரிகிறது.

* இந்த வைரஸ் தாக்கி, 8 முதல் 21 நாட்களுக்குள் இதன் அறிகுறி வெளியில் தெரிய ஆரம்பிக்கிறது. ஆரம்பத்தில் லேசான ஜுரம், தலைவலி இருக்கும். பசி எடுக்காது. ஒரே களைப்பாக இருக்கும். உடலெங்கும் தசைவலி ஏற்படும். தொண்டையில் வலி யோடு இருமல் வரும்.

* இதன் தொடர்ச்சியாக வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். உதடு, மூக்கு என ஆங்காங்கே ரத்தக்கசிவு ஏற்படும். இதன் அடுத்தகட்டமாக சிறுநீரகமும் கல்லீரலும் பாதிப்புக்கு ஆளாகும். இந்த அறிகுறிகளின்போதுதான் இவர்களிடமிருந்து மற்றவர்களுக்கு எபோலா பரவுகிறது.

* ஆரம்ப அறிகுறிகளின்போதே சிகிச்சைக்குச் சென்றுவிட வேண்டும். நீரிழப்பைத் தடுக்க குளுக்கோஸ் ஏற்றி, ஆன்ட்டி பயாடிக் மருந்துகளைப் பெற்று நோய் எதிர்ப்பு சக்தியை ஸ்திரப்படுத்தி, சிலர் எபோலா தாக்குதலிலிருந்து மீண்டிருக்கிறார்கள் என்பது நம்பிக்கையான செய்தி.

* எபோலா காற்றில் பரவாது; கொசுக்கடி, பூச்சிக்கடியால் பரவாது. நோய் தாக்கிய ஒருவரோடு நெருக்கமாக இருப்பவர்களுக்குத்தான் தொற்றுகிறது. வீட்டில் நோயாளியை அக்கறையோடு கவனித்துக் கொள்ளும் உறவுகள், சிகிச்சை தரும் மருத்துவப் பணியாளர்கள், எபோலாவால் இறந்தவர்களுக்கு இறுதிச்சடங்கு செய்யும் உறவினர்கள் ஆகியோர்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். ரத்தம், சிறுநீர் உள்ளிட்ட நோயாளியிடமிருந்து வெளியாகும் திரவங்களில் இந்த வைரஸ் அதிகம் இருக்கிறது.

* நோயாளியைத் தனிமைப்படுத்தி சிகிச்சை தருவதும், அவர்கள் பயன்படுத்திய பொருட்களை எரித்து விடுவதும், இறந்தவர்களை கிருமிநாசினியால் குளிப்பாட்டி அடக்கம் செய்வதும்தான் தீர்வு. 

* எபோலா தடுப்பூசி தயாரிப்பதில் மூன்று நிறுவனங்கள் இறங்கியுள்ளன. கனடா அரசுடன் இணைந்து நேஷனல் மைக்ரோபயாலஜி லேப் க்ஷிஷிக்ஷிணிஙிளிக்ஷி என்ற மருந்தை உருவாக்கியுள்ளது. இது எபோலா தாக்குவதையும் தடுக்கிறது; நோய் தாக்கிய பிறகு எடுத்துக் கொண்டாலும் பலன் தருகிறது.

இதுவரை விலங்குகளிடம் மட்டுமே பரிசோதனை முடிந்துள்ளது. மனிதர்கள் இதைப் பயன்படுத்தினால் ஏதாவது ஆபத்து ஏற்படுமா என்பது பற்றி இதுவரை தெரியவில்லை. ஆனாலும் ‘ஆபத்துக்கு பாவமில்லை’ என இதை இப்போது பரிசோதிக்க உலக சுகாதார நிறுவனம் ஒப்புதல் தந்துவிட்டது. இப்போது இதில் ஆயிரம் டோஸை லைபீரியாவுக்கு கனடா அனுப்பியுள்ளது.

* இதேபோல அமெரிக்காவில் மாப் பயோ பார்மாசூட்டிகல் நிறுவனம் ஞீனீணீஜீஜீ என்ற மருந்தைக் கண்டுபிடித்துள்ளது. லைபீரியாவில் இருந்தபோது எபோலா தாக்குதலுக்கு ஆளான ஒரு அமெரிக்க மதபோதகரையும் ஒரு டாக்டரையும் அமெரிக்கா அழைத்துவந்து இந்த மருந்தைக் கொடுத்திருக்கிறார்கள். ‘‘வெள்ளைக்காரர்களுக்கு மட்டும்தான் தடுப்பூசியா?’’ என ஆப்ரிக்க நாடுகள் கொதிக்க, இப்போது இந்த மருந்தும் ஆப்ரிக்கா போயிருக்கிறது.

* இதுதவிர பிரிட்டனின் கிளாக்ஸோ ஸ்மித்க்ளின் நிறுவனமும் தடுப்பூசி ஒன்று உருவாக்குகிறது. இந்த எல்லா தடுப்பூசிகளும் அடுத்த ஆண்டில் மார்க்கெட்டுக்கு வருமாம்!

* எபோலா தொடர்பான சந்தேகங்களுக்கு பதில் தரும் 24 மணி நேர கட்டணமில்லாத சேவை எண்: 011-23061469

- அகஸ்டஸ்