Like& Share



டெக்ஷனரி

நம்மூர் டேபிள் மேட் ஞாபகம் வருதா? இது அதற்கு கொள்ளுப் பேரன். பெயர், ‘டேஸிங் டெஸ்க்’. ஜப்பானியர்களின் லேட்டஸ்ட் தயாரிப்பு. மற்ற டேபிள்களைப் போலவே இதையும் பல வடிவங்களில் - பல கோணங்களில் மாற்றிப் பயன்படுத்த முடியும். அதோடு, தனித்துவமாக படுத்துக்கொண்டே பயன்படுத்த முடியும்!‘‘லேப்டாப்பை இயக்குவதற்காக இனி நீங்கள் ‘கஷ்டப்பட்டு’ படுக்கையில் இருந்து எழுந்து உட்கார வேண்டாம்.

இந்த டெஸ்க் அந்தரத்தில் அப்படியே லேப்டாப்பைப் பிடித்துக்கொள்ளும். நீங்கள் படுத்துக்கொண்டே வேலை பார்க்கலாம். ஃபேஸ்புக் அரட்டையும் அடிக்கலாம்’’ என இணையத்தில் கூவிக் கூவி அழைக்கிறது இந்த டேஸிங் டெஸ்க். ‘வர வர மனுஷனை எவ்வளவுதான் சோம்பேறியாக்குவாங்களோ’ என பார்த்தவர்கள் புலம்புகிறார்கள் உலகெங்கும்!

‘கிபீ’டடா

ஆண்கள் எப்போதும் ஆண்களாகவே இருப்பார்கள் என்ற டேக் லைனோடு வந்த இம்பீரியல் ப்ளூ ‘மியூசிக் சிடி’ விளம்பரங்கள் அனைத்துமே அட போட வைப்பவை. அந்த வரிசையில், மூன்று விளம்பரங்கள் நியூ அட்மிஷன். அதில் ஒன்று அவுட்ஸ்டாண்டிங்!லிஃப்டுக்குள் செம அழகான பெண் ஒருத்தி செல்போனில் பேசிக் கொண்டிருக்க, இரு பக்கமும் ஆண்கள் இருவர் நின்று கொண்டிருக்கிறார்கள்.

அதுவரை ஏதோ ஜிம் பாய்கள் போல ஒட்டியிருக்கும் அவர்களின் வயிறு, அவள் போன பின்பு படக்கென்று பெருத்து தொப்பையாகிறது. ‘பயபுள்ள, அதுவரை மூச்சப் பிடிச்சிக்கிட்டு இருந்திருக்கானுவ’ என நம்மை கமென்ட் அடித்து கைதட்ட வைக்கிறது இந்த விளம்பரம். விளம்பரத் தயாரிப்பு சோடா ஃபிலிம்ஸ், இயக்கியவர் ராஜேஷ் கிருஷ்ணன் என்கிறார்கள். நம்மாளு போல!

ரீடிங் டேபிள்

நார்கொண்டம் தீவு அந்தமான் நிகோபர் தீவுகளைச் சேர்ந்தது. இத்தீவில் ராடார் நிலையம் அமைத்தால் அது அரிய வகை நார்கொண்டம் இருவாட்சிக்கு ஆபத்தாக அமையும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எதிர்த்துவந்தனர். இதனால் சென்ற ஆட்சியில் இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. ஆனால், புதிதாக பதவியேற்ற மத்திய அரசு, சீனாவின் அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி ராடார் நிலையத்துக்கு அனுமதி வழங்கிவிட்டது. இருவாட்சிக்கு இரு ஆட்சியும் எதிரிதான் போல! ‘பூவுலகு மின்மினி’ இதழிலிருந்து...’

வெல்டன்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் உதை வாங்குவதுதான் எல்லோருக்கும் தெரியும். இதே நேரத்தில் இந்திய மாற்றுத் திறனாளிகள் கிரிக்கெட் டீம் தென் ஆப்ரிக்கா சென்று, ஆறு மேட்ச்கள் கொண்ட ட்வென்ட்டி 20 தொடரில் அனைத்து மேட்ச்களிலும் வென்று பெருமையோடு திரும்பியிருக்கிறது. தென் ஆப்ரிக்காவில் டோனியின் இந்திய அணியே செய்யாத சாதனை இது. இந்த அணியினருக்கு கிரிக்கெட் கிட் கொடுத்தது உட்பட எல்லா வகையிலும் தன் அறக்கட்டளை மூலம் உதவியிருக்கிறார் டோனி.

ரசனை சினிமா!

A SEPARATION


 மொழி: ஈரான்
இயக்குநர்: அஸ்கர் ஃபர்ஹாபி
அயல் சினிமாக்களில் ஈரானுக்கு இருப்பது மரியாதையான இடம். பெரும் ஜனநாயக நாடுகளில் கூட இது மாதிரியான படைப்புகள் வெளி வருவது சாத்தியமில்லை. கடும் தணிக்கை கொண்ட ஈரானிலிருந்து இந்தப் படம் வெளியாகி வரவேற்பு பெற்றது.

ஒரு தம்பதி விவாகரத்து பெற விரும்பும் சூழலுடன் தொடங்குகிறது படம். வெடித்துச் சிதறும் கூர்மையான வசனங்களிலும், விவாதங்களிலும், கருணையிலும் பூர்ணமாகி நிற்கிறது இந்த சினிமா. நமக்குத் தெரியாத ஒரு குடும்பத்தின் வீட்டின் உள்ளே உட்கார்ந்து பார்த்துக்கொண்டு இருப்பது போன்ற யதார்த்தத்திற்கு அண்மையிலான பயணம். பெர்லின் திரைவிழாவில் ‘தங்கக் கரடி’ விருது பெற்றது இந்தப் படம்!

‘படி’த்துறை

நடந்தோடிய மைல்கற்கள்
டாக்டர் எம்.பிர்லாபவளம்
விலை: ரூ.180/-
விஜெய் கிளினிக், ஆண்டி கிணற்றுத்தெரு, விருதுநகர்-626001, போன்: 04562-242969
குழந்தை நரம்பியல் மற்றும் நரம்பு வளர்ச்சி முன்னேற்ற மருத்துவரான டாக்டர் எம்.பிர்லா பவளத்தின் இந்தப் புத்தகம், குழந்தைகள் வளரும் விதம் பற்றி அறிவியல் ரீதியாகப் பேசுகிறது. குழந்தையின் உணவூட்டத்தில் தொடங்கி, உடல் வளர்ச்சி வரை பெற்றோருக்கு எழும் சந்தேகங்கள் அனைத்தையும் நிவர்த்தி செய்யும் இப்புத்தகம், மேலும் இரு பாகங்களாக விரிகிறது.

மொழி பிறந்த மைல்கற்கள், புன்னகை பூத்த மைல்கற்கள் எனப் பெயரிடப் பட்டிருக்கும் மற்ற பாகங் களையும் சேர்த்தால் இது ஒரு குழந்தை வளர்ப்பு என்சைக்ளோபீடியா. படிப்பதற்கு சுலபமாக, மருத்துவ மொழிகள் அனைத்தும் தெளிவான தமிழில் தொகுத்தளித்
திருப்பது நன்று!

காந்தி ஆத்மாவுக்கு நோ சாந்தி!

க்ளிக்கானந்தா