தமிழ் பேரரசன் ராஜேந்திரன்



சோழர்களின் வரலாற்றை நான்காகப் பிரிக்கிறார்கள் வரலாற்றாசிரியர்கள். சங்க காலத்துக்கு முந்தைய சோழர்கள்; சங்க காலத்தில் ஆண்ட சோழர்கள்; இடைக்கால சோழர்கள்; பிற்காலச் சோழர்கள். பசுவின் கன்றை தேரேற்றிக் கொன்ற குற்றத்துக்காக தன் ஒரே மகனை தேர்க்காலில் நசுக்கித் தண்டித்த மனுநீதிச் சோழனும், கழுகு துரத்தி வந்த புறாவைக் காக்க தன் தொடை தசையரிந்து கொடுத்த சிபியும் சங்க காலத்துக்கு முற்பட்ட சோழர்கள். கரிகால் சோழனும் கோப்பெருஞ் சோழனும் சங்க காலத்தவர்கள்.

சங்ககாலச் சோழர்களுக்குப் பிந்தைய 5 நூற்றாண்டுகள் சோழர்களின் நிலை மிகவும் தாழ்வாகவே இருந்தது. அச்சூழ லில் தஞ்சை முத்தரைய மன்னர்களின் வசமிருந்தது. தொடக்கத்தில் பல்லவர்களின் கீழிருந்தே முத்தரையர்கள் தஞ்சையை ஆண்டார்கள். ஆனால் இத்தருணத்தில் அரசேறிய முத்தரையன் சாத்தன் பழியிலி, பல்லவ ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு சுயாட்சி நடத்தினான். அப்போது கும்பகோணத்துக்கு அருகில் இருக்கிற பழையாறையை தலைநகராகக் கொண்டு இடைக்கால சோழர்கள் சிறுநிலப்பரப்பை ஆண்டார்கள். அக்குழு வின் தலைவனாக இருந்தவன் விஜயாலயன். இவன் கடைச்சங்க சோழனான கரிகாலனின் வழிவந்தவன். இவன்தான் ராஜேந்திரனின் ஆதிப் பாட்டன்.

விஜயாலயனுக்கு தம் மூதாதை நிலமான தஞ்சையை மீட்கும் பெருங்கனவு இருந்தது. தகுந்த சூழல் வாய்த்தபோது பழியிலியை வென்று தஞ்சையை ஆட்கொண்டான். அதன்பின் சுமார் 430 ஆண்டுகள் விஜயாலயனின் வாரிசுகள் சோழப் பேரரசைக் கட்டியாண்டார்கள். இயற்கையே உருவாக்கிய விஜயாலயனின் குளோனிங் என்று சொல்லலாம் ராஜேந்திரனை. விஜயாலயனின் எட்டாம் தலைமுறை வாரிசு. அவனைப் போலவே கட்டுருவம் கொண்டவன். விஜயாலயன் தஞ்சையை வெற்றி கொண்ட தருணத்தில் ஏராளமான எதிரிகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. தன் வாழ்நாளின் பெரும்பகுதியை களத்திலேயே கழித்தான் விஜயாலயன். அதே நெருக்கடி ராஜேந்திரனுக்கும். தன் பாட்டனைப் போலவே யுத்தத்தில் பேரார்வம். நிர்வாகச் சிந்தனைகள். மாற்றங்களை நோக்கிய தேடல். மக்களின் மீது நேசம்.

ராஜராஜனுக்கும் வானவன் மாதேவிக்கும் ஆடித் திருவாதிரை நாளில் பிறந்தவன் ராஜேந்திரன். தன் சித்தப்பாவான மதுராந்தக சோழன் மீது ராஜராஜனுக்கு தனி பாசம் உண்டு. மகனுக்கு சித்தப்பாவின் பெயரையே வைத்து அழகு பார்த்தான். ராஜேந்திரனின் இயற்பெயர் மதுராந்தகன்.

இலக்கணத்திலும் இலக்கியத்திலும், அறநெறிகளிலும் ஆழ்ந்த ஞானம் கொண்ட சர்வசிவ பண்டிதர்தான் ராஜேந்திரனின் ஆசிரியர். போர், கள தர்மங்கள், ஆயுதப் பயன்பாடு, மூதாதை வரலாறுகள், இலக்கண இலக்கியங்கள் அனைத்தையும் போதித்து ராஜேந்திரனை வார்த்தெடுத்தார் அவர். ராஜேந்திரன் சகலகலா வல்லவனாக வளர்ந்தான். இசை, சிற்பம், ஓவியம் என பல கலைகளில் வெறும் ரசிகனாக மட்டுமின்றி கலைஞனாகவும் இருந்தான். பாட்டு புனையும் அளவுக்கு அவன் பாண்டித்தியம் பெற்றிருந்தான். பண்டித சோழன் என்று, கற்றோர் அவனைப் போற்றினர். அவன் காலத்தில் கலைஞர்கள், புலவர்கள் பெரும் செல்வாக்கோடும் நிறைவோடும் வாழ்ந்தார்கள்.

கங்கப்போர், கலிங்கப்போர், குந்தளப் போர் உள்ளிட்ட போர்களில் தலைமையேற்று களமாடிய ராஜேந்திரனின் தீரத்தைக் கண்டே ‘இனி இவன் முடிசூடத் தக்கவன்’ என்ற முடிவுக்கு ராஜராஜன் வந்தான். கி.பி. 1012ம் ஆண்டு மகனை இளவரசாக முடிசூட்டி ‘ராஜேந்திரன்’ ஆக்கினான் ராஜ ராஜன். அடுத்த இரண்டாண்டுகளில், ராஜராஜனின் மறைவுக்குப் பிறகு ராஜேந்திரன் ஆட்சிப்பொறுப்பை முழுமையாக ஏற்றான். சோழர் வரலாற்றில் ராஜேந்திரனின் காலம் பொற்காலம் என்றெழுதுகிறார்கள் வரலாற்றாசிரியர்கள்.

ராஜேந்திரன் ஆட்சியேற்றபோது சுற்றிலும் பகைமை கனன்று கொண்டிருந்தது. ராஜராஜனால் அடக்கப்பட்டிருந்த சிற்றரசர்கள் ராஜேந்திரன் அரியணை ஏறும் தருணத்தைப் பயன்
படுத்திக் கொள்ள நினைத்தனர். திறை மறுத்து முரண்பட்டனர். படை திரட்டவும் தொடங்கினர். ராஜராஜனிடம் தோற்று வஞ்சினம் கொண்டிருந்த சேரன் பாஸ்கர ரவிவர்மன் கடிகைகள் எனப்படும் போர்ப்பள்ளிகளைத் திறந்து, இளைஞர்களைத் திரட்டி கடும் பயிற்சி அளித்து, ராஜேந்திரனை தாக்கும் நாள் பார்த்துக் கொண்டிருந்தான். தம் மூதாதைகளை வதைத்து நாட்டின் பெரும்பகுதியை பறித்துக்கொண்ட சோழர்களின் மீது தனியாத வன்மத்தில் இருந்த சாளுக்கிய மன்னன் இரண்டாம் ஜெயசிம்மனும் பகை தீர்க்க படை திரட்டிக் கொண்டிருந்தான்.

இன்னொரு பக்கம் ஈழம். சங்கச் சோழர்கள் காலத்திலிருந்தே விட்ட பகை தொட்ட பகை இருந்தது. போதாக்குறைக்கு பாண்டியர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் நெருக்கமான உறவு வேறு. முதலாம் பராந்தகச் சோழன் ராஜசிம்ம பாண்டியனை தாக்கியபோது அவன் பெரும் மதிப்புமிக்க தன் சுந்தர முடியையும், அரசு சின்னமான இந்திர ஆரத்தையும் சிங்கள மன்னனுக்கு அடைக்கலப் பரிசாகக் கொடுத்து அம்மண்ணில் தஞ்சம் புகுந்தான். சோழர்களுக்கு அந்த முடியையும் ஆரத்தையும் கைப்பற்றுவது தலைமுறைக் கனவாக இருந்தது. ராஜராஜன் காலத்தில் ராஜேந்திரன் பெரும் படையோடு சிங்களத்தைத் தாக்கினான். சிங்களத்தின் வடக்குப் பகுதியை மட்டுமே அப்போது வெல்ல முடிந்தது.

தாம் வென்ற பகுதிக்கு மும்முடிச்சோழ மண்டலம் என்று பெயரிட்டு விட்டு வெறுங்கையோடு சோழகம் திரும்பினான். அத்தருணத்தில் ராஜேந்திரனை தாக்குப்பிடிக்க முடியாமல் தப்பி வனத்துக்குள் ஓடிய மகிந்தன்(?), ராஜேந்திரன் அரியணை ஏறிய தருணத்தில் காட்டிலிருந்து வெளியேறி படை திரட்டத் தொடங்கினான். இப்படி சுற்றிலும் எதிரிகள் பலம் பெறுவதை உணர்ந்த ராஜேந்திரன், தன் தேசத்தைத் தற்காத்துக் கொள்ளத் தலைப்பட்டான். அதற்காகவே பெரும் போர்களை நடத்த வேண்டியிருந்தது. தன்னை நம்பி படைத்தலைமையை தன் தந்தை ஒப்படைத்ததைப் போல தம் பிள்ளைகளிடம் தலைமைப் பொறுப்பை ஒப்படைத்து வழி நடத்தினான்.

சுற்றெங்கும் கடந்து வெற்றிகளைக் கொணர்ந்த ராஜேந்திரன் அவ்வெற்றியின் நினைவாக அரிய பொக்கிஷங்களையும் கலைப்பொருட்களையும் கொண்டுவந்தான். ஆட்சியேற்ற ஐந்து ஆண்டுகளில் ஈழத்தை வென்று தம் மூதாதைகளின் கனவாக இருந்த பாண்டியனின் சுந்தர மணிமுடியையும், இந்திர ஆரத்தையும் கொணர்ந்தான். கூடவே தமக்கு எதிராக படை திரட்டிய சிங்கள மன்னன் மகிந்தனையும், அவன் குடும்பத்தையும் கைதியாக்கிக் கொணர்ந்தான். அம்மன்னன் சோழ தேசத்து சிறையிலேயே 12 ஆண்டுகள் கழித்து இறந்தான். தஞ்சைக்கு அருகில் உள்ள கரந்தையில் கண்டெடுக்கப்பட்ட செப்பேடுகள் இந்த வெற்றியைக் கொண்டாடுகின்றன. இலங்கை சரித்திர நூலான மகாவம்சமும் ராஜேந்திரனின் வெற்றியை பற்றிக் குறிப்பிடுகிறது.  

வங்கதேசத்தை ஆண்ட பாலர்களை வென்ற ராஜேந்திரன், அங்கிருந்து அம்மன்னர்கள் வணங்கிய காளையின் முதுகில் நர்த்தனமாடும் நடராஜர் ஐம்பொன் சிலையையும், கல்லால் ஆன விநாயகர் சிலையையும் கொண்டு வந்தான். அந்த நடராஜர், கங்கை கொண்ட சோழபுரம்- சிதம்பரம் சாலையில் உள்ள மேலக்கடம்பூர் சிவன் கோயிலில் இருக்கிறார். விநாயகர் சிலை, கும்பகோணம் கும்பேஸ்வரன் கோயிலில் வைக்கப்பட்டுள்ளது.

மைசூருக்கே அருகேயுள்ள நுளம்பப்பாடி நாட்டை ஆண்ட நுளம்பர்களை வென்ற ராஜேந்திரன், அங்கு கோயிலில் இருந்த சலவைக்கற்களால் ஆன 45 தூண்களை வெற்றிச் சின்னமாகக் கொண்டு வந்தான். ராஜேந்திரன் மனைவி பஞ்சவன் மாதேவி, திருவையாறு ஐயாறப்பர் கோயிலை புணரமைத்தபோது அந்தத் தூண்களை வைத்து சுற்று மண்டபங்களை அமைத்தாள். இன்றும் அவை மங்கா ஒளியோடு அந்தக் கோயிலில் நின்று கொண்டிருக்கின்றன.

உத்தமச்சோழன், சோழேந்திர சிம்மன், விக்கிரமச் சோழன், முடிகொண்ட சோழன்,  பண்டிதச்சோழன், கடாரங்கொண் டான், கங்கை கொண்ட சோழன் என பல்வேறு பெயர்களால் வரலாறு நெடுகிலும் போற்றப்படும் ராஜேந்திரனுக்கு 5 மனைவிகள். அவர்களைப் பற்றியும் ராஜேந்திரனின் நிர்வாகம் பற்றியும் அடுத்த வாரம் பார்க்கலாம்...

வெ.நீலகண்டன்