வெண் பளிங்கு அதிசயமான தாஜ்மகாலைப் பார்க்க வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு அங்கிருக்கும் கைடுகள் ஒரு அற்புதக் கதை சொல்வார்கள்... ‘‘இதேபோல கறுப்பு நிறத்தில் இன்னொரு தாஜ்மகால் கட்ட ஷாஜகான் நினைத்திருந்தார். ஆனால் கடைசி நேரப் பிரச்னைகளால் அது கைகூடாமல் போனது!’’ கிட்டத்தட்ட நானூறு வருஷங்களாக கர்ண பரம்பரைக் கதையாக இருக்கும் இது நிஜம்தானோ என்ற கேள்வி இப்போது எழுந்திருக்கிறது.
தாஜ்மகாலுக்கு நேர் எதிரே, யமுனை நதியின் மறுகரையில் இப்போது தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறது. அப்போது ஒரு பெரிய கட்டிடத்தின் அஸ்திவாரத்தைக் கண்டெடுத்து இருக்கின்றனர். ‘‘இது ஷாஜகானின் கோடைக்கால அரண்மனையாக இருந்திருக்கலாம்’’ என ஒரு தரப்பினர் சொல்கிறார்கள்.
‘‘இதையொட்டி மெஹ்தாப் பாக் என்ற தோட்டமும் இருந்தது. இரவு நேரங்களில் இங்கிருந்தபடி தாஜ்மகாலின் அழகை ஷாஜகான் ரசித்தார்’’ என வரலாற்று ஆதாரங்களை சிலர் சுட்டுகிறார்கள். ஆனால், ‘‘இதுதான் கறுப்பு தாஜ்மகாலின் கடைக் கால்’’ என அடித்துச் சொல்கிறார்கள் சிலர்.
மனைவி மும்தாஜுக்கு தாஜ்மகால் என்ற கல்லறை அமைத்த ஷாஜகான், தனது கல்லறையும் இதே இடத்தில் அமைய வேண்டும் என விரும்பினாராம். யமுனையின் மறுகரையில் தனக்காக ஒரு கல்லறையை அப்படியே தாஜ்மகால் போலவே கறுப்பு நிறத்தில் அமைக்கத் தீர்மானித்த அவர், இரண்டு தாஜ்மகால்களையும் இணைக்கும்விதத்தில் யமுனையின் மீது அழகிய ஒரு பாலம் கட்டவும் திட்டமிட்டாராம்.
இதற்காக அஸ்திவாரம் எழும்பிய நேரத்திலேயே மகன் ஔரங்கசீப்புடன் மோதல் வந்ததால் அவர் சிறைப்பட்டார் என்கிறார்கள். 1665ம் ஆண்டில் ஆக்ரா வந்திருந்த ஐரோப்பிய யாத்ரிகர் ஜீன் பாப்டிஸ்ட் டேவர்னியர் இதை தனது வரலாற்றுக் குறிப்புகளில் எழுதியிருக்கிறார்.
25 ஆண்டுகளுக்கு முன்பு இதே பகுதியில் தொல்லியல் துறை அகழ்வாராய்ச்சி நடத்தியது. அப்போது கறுப்பாக நிறம் மாறியிருந்த சில பளிங்குக் கற்கள் கிடைத்தன. அந்த நேரத்திலும் கறுப்பு தாஜ்மகால் குறித்த பரபரப்புக் கதைகள் கிளம்பின.சில விஷயங்களுக்கு வரலாற்று ஆதாரங்கள் இல்லாவிட்டாலும், அவை சாகாவரம் பெற்ற செய்திகளாக வாழும். கறுப்பு தாஜ்மகாலும் அப்படித்தான் போல!
- அகஸ்டஸ்